வெங்கடாசலபுரம் புனித பரலோக அன்னை ஆலயத்தில், உயிர்த்த இயேசுவின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் திருத்தல ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்ட தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா, வெங்கடாசலபுரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அதிதூதர் புனித மிக்கேல் திருத்தலம் மற்றும் புனித பரலோக அன்னை ஆலயத்தில் இவ்வாண்டின் திருத்தல ஆண்டு பெருவிழா கடந்த மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. விழா நாட்களின் தினமும் சிறப்பு திருப்பலிகள், நற்கருணை ஆசீர் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான 10-ஆம் நாள் திருவிழாவன்று அதிகாலை 4:30 மணிக்கு, மலர்களால் நயமாக அலங்கரிக்கப்பட்ட தேர்கள் ஆலயத்தின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து அதிகாலை 5 மணிக்குத் தேரடி சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இந்தத் கூட்டுப் பெருவிழா திருப்பலிக்கு மதுரை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கி, தேர்களைப் புனிதம் (அர்ச்சிப்பு) செய்து வைத்தார்.
பேராயர் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து தேர்பவனியைத் தொடங்கி வைத்தனர். “மரியே வாழ்க” என்ற பக்தி கோஷங்களுடன் திரளான கிறிஸ்தவர்கள் தேர்களின் வடம்பிடித்து இழுத்தனர். முதலாவது தேரில் புனித மிக்கேல் அதிதூதரும், இரண்டாவது தேரில் புனித சூசையப்பரும், இறுதித் தேரில் புனித பரலோக அன்னையும் அலங்கார ரூபமாய் எழுந்தருளி ஊரின் முக்கிய வீதிகள் வழியாகப் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வழிநெடுகிலும் கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மெழுகுவர்த்தி ஏந்தியும், ‘கும்பிடுசேவை’ செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். அதிகாலையில் தொடங்கிய இத்தேர்பவனி, பல்வேறு வீதிகளின் வழியே வலம் வந்து மாலை 4 மணியளவில் நிலையை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்குத் தந்தை சூசை செல்வராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலியும், நற்கருணை பவனியும் நடைபெற்றன. இதில் தந்தை மைக்கேல் அலோசியஸ் மறையுரை நிகழ்த்தினார்.
திருவிழாவின் இறுதி நாளான இன்று காலையில், பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் புதிய குரு மரிய ஜோ மிக்ஸ் தலைமையில் நன்றித் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆலயத்தின் கொடி இறக்கப்பட்டு, இந்த ஆண்டுக்கான விண்ணேற்பு பெருவிழா பக்திப் பரவசத்துடன் இனிதே நிறைவு பெற்றது.


