தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள தற்போதைய சூழல் வரை, ஒரு நாள் கூட விடுப்பின்றித் தொடர்ந்து பணியாற்றி வரும் காவலர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். தங்களின் இந்த அவல நிலையை உயர் அதிகாரிகள் கனிவோடு பரிசீலிக்க வேண்டும் என்று காவலர்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.
கடந்த மார்ச் 15-ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், காவலர்களின் ஓய்வில்லாப் பணி தொடங்கியது. மார்ச் 30 வேட்புமனுத் தாக்கல், ஏப்ரல் 23 வாக்குப்பதிவு, மே 4 வாக்கு எண்ணிக்கை மற்றும் மே 10 புதிய அரசு பதவியேற்பு என அடுத்தடுத்து நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் காவலர்கள் எவ்வித ஓய்வுமின்றி இரவும் பகலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் பிரசாரங்களின் போது விஐபிக்களின் வருகை, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு எனப் பலமுனைப் பணிகளால் அவர்கள் கடுமையாக அலைக்கழிக்கப்பட்டனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் தங்களுக்கு வார விடுமுறை மற்றும் நிலுவையில் உள்ள விடுப்புகள் கிடைக்கும் என்று காவலர்கள் பெரிதும் நம்பியிருந்தனர். ஆனால், தேர்தலில் தொங்கு சட்டசபை போன்ற அசாதாரண அரசியல் சூழல் நிலவியதால், தமிழகக் காவல்துறைத் தலைவர் ஒட்டுமொத்தக் காவலர்களுக்கும் விடுமுறையை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டார். இது அடிமட்டக் காவலர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. புதிய அரசு அமைவதிலும் காலதாமதம் ஏற்பட்டதால், அவர்களின் பணிச்சுமை மேலும் நீடித்தது.
மிகவும் இக்கட்டான உடல்நிலைச் குறைவு அல்லது நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கு போன்ற அத்தியாவசியக் காரணங்களுக்கு மட்டுமே ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டு வந்துள்ளது. புதிய அரசு பதவியேற்ற பின்னரும் கூட, பல காவல் நிலையங்களில் காவலர்களுக்கு வழக்கமான வார விடுமுறை கூட வழங்கப்படாமல் உயர் அதிகாரிகள் தொடர்ந்து வேலை வாங்கி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியின்றி, குடும்பத்தினருடனும் நேரம் செலவிட முடியாமல் காவலர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து பேசிய காவலர் ஒருவர்: “பொதுமக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் காவல் நிலையம் வந்து புகார் அளிக்கிறார்கள். ஆனால், 24 மணி நேரமும் உழைக்கும் எங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? மற்ற அனைத்துத் துறை ஊழியர்களுக்கும் கோரிக்கைகளை வென்றெடுக்கச் சங்கங்கள் உள்ளன. ஆனால், காவல்துறையில் எங்களுக்கு எந்தச் சங்கமும் இல்லை. நாங்களும் மனிதர்கள் தான் என்பதை உயர் அதிகாரிகள் உணர்ந்து, இனியாவது எங்களுக்கான அடிப்படை விடுமுறைகளை வழங்க முன்வர வேண்டும்.” என்று மனவேதனையுடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் காக்கும் முக்கிய அரணாக விளங்கும் காவல்துறையினரின் உடல் மற்றும் மன நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும், காவல்துறை உயர் அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு சுழற்சி முறையில் காவலர்களுக்கு உரிய விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.


