“ஆச்சி இன்னைக்கு பங்குனி உத்தரமாமே. எல்லாரும் குலதெய்வத்தை பாக்க போறவாளாமே. நாமளும் போவுமா?”
ராசுக்குட்டி ஆச்சியிடம் ஓடி வந்தான்.
“கண்டிப்பா இன்னைக்கு ராத்திரி நிச்சயம் போவும்”.
“ஆச்சி. எனக்கு ராட்டினம் ஆடணும். அப்புறம் கண்ணாடி கிளாஸில பாயசம் வாங்கி குடிக்கணும். வாங்கி தாரீயா?”
“வேறே என்ன வேணுமுடே”
“உருட்டி விளையாட கட்டை வண்டி வேணும். ஏணி மிட்டாய் வேணும். சவ்வு மிட்டாய் வேணும். சவ்வு மிட்டாயை வச்சி கையில வாச்சு கட்டணும்”
ராசுக்குட்டி அடுக்க ஆரம்பித்தான்.
“என் தங்கத்துக்கு இல்லாததா. இதுக்குத்தானே ஒரு மாசமா என் முந்தானையில காசு முடிஞ்சி சேத்துக்கிட்டு இருக்கேன்.
“ஆச்சி. தூங்கும் போது பத்திரமா பாத்துக்கா தாத்தா துட்டை அவுத்துட்டு போயிற போராரு”.
“ஓரு பயலும் என் முந்தானையில கை வைக்க முடியாது ஆமா”.
ஆச்சிக்கு தாத்தா என்றவுடன் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
எப்படித்தான் கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்துகிட்டாளோ தெரியலை?
அதன் பிறகு “உர்” என இருந்தாள்.
ராசுக்குட்டிக்கு வேதனையாக இருந்தது . தாத்தா பற்றி கேட்டு இருக்க கூடாதோ என நினைத்தான்.
“சரி. ஆச்சி. எத்தனை மணிக்கு கிளம்பணும்”. Ê
“சாயங்காலம் நாலு மணிக்கு ரெடியா இரு”.
மாலை நான்கு மணி.
பொன்னையா தாத்தா சக்கடா வண்டியை கட்டிக்கொண்டு வந்தார். அந்த வண்டியில் புதுசாக கூண்டு எல்லாம் கட்டியிருந்தார். அம்மா சிவப்பு கலரில் கட்டம் போட்ட போர்வையை விரித்தார். ராத்திரி பொங்கலிட வெண்கல பானை எடுத்து வைத்துக்கொண்டாள். கோயிலில் அமர்ந்து வில்லு பாட்டு பார்க்க இரண்டு கோரம்பாயை எடுத்து வைத்திருந்தாள். இரவு சாப்பிட நொறுக்கு தீனி எடுத்து அரிசியையும் சேர்த்து ஒரு நார் பெட்டியில் வைத்திருந்தாள். ஒவ்வொருவராக வந்து வண்டியில் ஏறினார்கள். ஆச்சியும் ராசுக்குட்டியும் ஒன்றாக ஏறி அமர்ந்தார்கள். இருவரும் புன்புறத்தில் காலை தொங்கவிட்டுக்கொண்டனர். அப்பா கிடாய் ஒன்றை வண்டி பின் பகுதியில் கட்டி விட்டார் “ஏலே ராசுக்குட்டி கிடாவை படையல் போடணும் எங்கேயும் ஓடிப்போயிறாம பாத்துக்க” என்றார்.
தலையாட்டினான் ராசுக்குட்டி
அப்பா அம்மா வண்டியில் ஏறிக்கொள்ள பொன்னையா அண்ணாச்சி வண்டியை அடித்து விரட்ட வண்டி கிளம்பியது.
காங்கேயம் ஜோடி காளை. மிகப்பிரமாண்டமாக இருந்தது. அதன் கொம்பு வானத்தினை நோக்கி நின்றது. அதில் வண்ணத்தில் கயிறு கட்டி நேர்த்தியாக வைத்திருந்தார். வண்டியை வேகமாக காளை இழுக்க வண்டி கிளம்பியது.
வண்டிக்கு பின்னாலே அந்த கிடாயும் ஓடிவந்தது.
“ஆச்சி ஆசை ஆசையா புல் அறுத்துப்போட்டு வளர்த்தா. நாளைக்கு கிடாயை பலிகொடுக்க போறாவ. அதுக்கு தெரியமா? நாம பலியாக போறோமுன்னு. ஆச்சியை பார்த்து ஆசையா அசைப்போட்டுக்கிட்டு கிடா பின்னாலே ஓடி வருது”. என மனத்துக்குள் நினைத்து கொண்டான் ராசுக்குட்டி.
“ஆச்சி. கண்டிப்பா கிடாயை பலி கொடுக்கணுமா?”
“ஆமாம்”.
“நாம வளர்த்த கிடாலா. கண்டிப்பா பலி கொடுக்கணுமா?”
“ஆமாம்”.
”சாமி என்ன கிடாவை சாப்பிடவா செய்யும்?”
“இல்லை”.
பொறவு ஏன் பலி கொடுக்கோம்.
“அது காலம் காலமா நடக்கு”.
“நாம எப்போதும் கறி சாப்பிட மாட்டோமே. பாவமுல்லா கிடாய்”. ராசுக்குட்டி சோகமாக கேட்டான்.
“ராசுக்குட்டி எனக்கு அதெல்லாம் தெரியாது. எல்லோரும் நம்ம பிள்ளைய நல்லா இருக்கணும். நமக்கு சொத்து கிடக்கணுமுன்னு சொகம் கிடைக்கணுமுன்னு சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டு கிடாய் பலி கொடுக்கிறாங்க”.
ராசுக்குட்டிக்கு திருப்பதி இல்லை.
“இல்லை ஆச்சி. நம்ம உயிரை காப்பாத்துற சாமி எதுக்கு கிடாய் உயிரை கேக்கு” என்றான்.
ஆச்சி சிறிது நேரம் சத்தம் காட்ட வில்லை.
ஆச்சி மட்டுமல்ல யாருமே இதற்கு பதில் சொல்ல முடியாது.
பலியை நிறுத்தவும் முடியாது.
“சரி ஆச்சி. நீ.பேசமாட்டே. நம்ம சாஸ்தா பேரு என்ன?”
“ புண மாலை சாஸ்தா”
“என்ன ஆச்சி சொல்ற. சாஸ்தா பேரு இப்படியா இருக்கும்”.
அவனே தொடர்ந்தான்.
“ஆமா. புணமுன்னா செத்த உடபுன்னுதானே அர்த்தம் சாஸ்தாவுக்கு இப்படியும் பெயரா?”
சிரித்தாள் ஆச்சி.
“நம்ம ஊருல சாஸ்தா நிறையா இருக்காவ. எல்லா பேருக்கும் அர்த்தம் இருக்கு தெரியுமா?-“ என்று கூறிய ஆச்சி சாஸ்தா பெயர்களை அடுக்கினாள்.
“பூந்தலையுடையார் சாஸ்தா, சுந்தரபாண்டி சாஸ்தா, எம்பெருமாள் சாஸ்தா, நடுக்காடுடையார் சாஸ்தா, சொரிமுத்து அய்யனார் சாஸ்தா, அருஞ்சுனை காத்த அய்யனார், கற்குவேல் அய்யனார், பெரும்படைசாஸ்தா , பெரும்புடை சாஸ்தா, அழகர் சாஸ்தா, புங்க முடையார் சாஸ்தா, பொய்சொல்லா மெய்யன் சாஸ்தா, செம்பு குட்டி சாஸ்தா இப்படி நிறைய சாஸ்தா இருக்கு எல்லா பெயருக்கும் அர்த்தம் சிறப்பா இருக்கும். அப்படி இருக்கும் போது நம்ம சாஸ்தாவுக்கு மட்டும் சிறப்பு இல்லாமலையா இருக்கும்”.
“ஆச்சி, என் கூட படிக்கான் ஒருத்தன் அவன் பேரு புணமாலைத்தான். எல்லாரும் அவனை கேலி செய்வாவ. இவனும் பரக்க பரக்க முழிப்பான். எனக்கு ஏன் இந்த பெயர் வைச்சாவன்னு அப்பா அம்மாவை பேசுவான். ஆனால உன் பேருக்கு என்ன அர்த்தமுடேன்னு கேட்டா சொல்ல மாட்டான். சரி டே உங்க அம்மா கிட்ட கேட்டுட்டு வான்னு சொன்னாலும். அவன் கேட்டுட்டு வர மாட்டான். அவனை பாக்க எனக்கு பாவமா இருக்கும் ஆச்சி. அதனால் இந்த புணமாலை பேருக்கு அர்த்தம் என்னன்னு சொல்லு ஆச்சி”.
அப்பாவும் அம்மாவும் கண் அசந்து விட்டார்கள்.
பொன்னையா அண்ணாச்சி வேகமாக வண்டி ஓட்டியததால் சக்கடா வண்டி சத்தம் அதிகமாக கேட்டது. எனவே ஆச்சி அருகில் இருந்தும் கூட அவள் பேசுவது சரியாக கேட்க வில்லை.
“ ஏலேய் கொஞ்சம் தூங்கேன் தொன தொனன்னு பேசிக்கிட்டு” என அம்மா சத்தம் போட்டாள்.
அனைவரும் அமைதியா இருந்தனர்.
“ஆச்சி. நான் கோயிலுக்கு போய் கதை சொல்லட்டுமா?” என்றாள்.
“வேண்டாம் எனக்கு உடனே கதை சொல்லணும்” என பிடிவாம் பிடித்தாள்.
உடனே தொடர்ந்து கதை பேச ஆரம் பித்தாள்.
“சரி. இந்த கோயிலை பத்தி நிறைய விவரம் இருக்கு. இந்த கோயில் பெயர் காரணம் சொல்றதுக்கு முன்னால ஒரு கதை சொல்லுதேன் கேளு”.
ஆச்சி தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.
“அந்த காலத்தில கான்டிரக்டர் கோனாருன்னு ஒருத்தரு இருந்தாரு. புத்தனேரி காரரு. அவருத்தான் ஸ்ரீவைகுண்டம அணைக்கட்டுல அலைகல்லு கட்டனவரு.
நல்ல கட்டுமஸ்தான உடம்பு. முறுக்கின மீசை. நேரியல் போட்டு இருப்பவ. அவுக அண்ண்ன தம்பி யெல்லாம் ரொம்ப பேமசான ஆளுக. யாருக்கும் பயப்படமாட்டாவ. சம்பாத்தியம் எவ்வளவு பண்ணுதாவலோ. அது போல தானம் தர்மமுன்னு வாரி வழங்குவாவ. எங்கயோவது இவுக கோயில் குளமுன்னு போறவன்னு வச்சிக்கோயன் எல்லா மக்களும் அங்க வந்துருவாவ. இவுகளும் ரூபா நோட்டை வாரி வாரி இறைப்பாவ. அவ்வளவு பணக்காரவிய. அவுகளுக்கு சொந்தமான சாஸ்தா கருங்குளத்தில இருந்து இருக்கு . அந்த சாஸ்தா பேரு ஆகாசமுடையார் சாஸ்தா.
பங்குனி உத்தரத்துக்கு அவுக குடும்பத்தோட வில்லு வண்டி கட்டி கோயிலுக்கு போயிருக்காவ. ராத்திரி கொடை பாத்துட்டு, காலையில கிடா வெட்டியிருக்காவ. ஏழை எளியவுகளுக்கு வாரி இறைச்சிட்டு, ஊருக்கு வில்லு வண்டியில ஏறி கிளம்பியிருக்காவ. கிடாவை கூரை மேல போட்டுக்கிட்டு கம்பீரமா வந்து இருக்காவ.
கருங்குளம் சத்திரத்துக்கிட்ட வண்டி வந்து இருக்கு. அப்பத்தான் ஒரு காவல்கார கூட்டம் வேல்கம்பு அருவாவோடு வந்து வில்லு வண்டியை மறிச்சி இருக்கு.
கான்டிரக்ட் கோனாரு வண்டிடே யாரும் மறைக்காதீங்கன்னு அக்கம் பக்கத்தில உள்ளவங்க சொல்லியிருக்காவ. ஆனா அந்த ஆளு கேட்கலை. வில்லு வண்டி மேலே கிடந்த கிடாவை இறக்கி அதுல தலையை மட்டும் வெட்டி எடுத்துட்டு இது என் பங்கு, மத்ததை வேணுமுன்னா கொண்டு போன்னு வண்டி மேலே தூக்கி போட்டுட்டு போயிட்டானுவ”.
“அது என்ன ஆச்சி. தலையை மட்டும் வெட்டுதாவ”.
“அப்படித்தான். ஊர்காடு சுடலைகோயிலேயும் கிடா வெட்டினா காவல் காரவியளுக்குத்தான் தலை . அது மாரித்தான எல்லா சாஸ்தாகோயிலும் கிடா வெட்டினா காவல்காரங்க கிடா தலையை எடுத்து கிடுவாவ. யாரும் தட்டி கேட்ட முடியாது. அப்படி கேட்டா சண்டை வந்துகொலை விழுந்துடும். அதுனால பயந்து போய் கொடுத்து விடுவாவ”.
“அய்யோ அப்படியா?”
“ஆமாம் ஆனால் வாரி வாரி இறைச்ச காண்டிரக்டர் கோனார் கிட்ட இதுவரைக்கும் யாரும் தலையை கேட்டது கிடையாது. இதனால கோனார் மனமுடைஞ்சு போனாவ.
செய்துங்கநல்லூர் கிட்டே வண்டி வரும் வரைக்கும், யாருக்கிட்டேயும் பேசவே இல்லை.
இதுக்கு இடையில தலையை கொண்டு போன காவல்காரங்களோட சொந்தகாரங்கள் பயந்தே போயிட்டாங்க.
அறிவு கெட்டவனே யாருக்கிட்டேபோய் தலையை வெட்டிட்டு வந்துருக்க. அவுக யாரு தெரியுமா? கொடை வள்ளலு. போயும் போயும் அவுக கிட்டபோய் கிடா தலையை அறுத்துட்டு வந்திருக்கீயே. முதலுல மன்னிப்பு கேட்டு அவுக கிட்டே கொடுத்துட்டு வான்னு அனுப்பு வச்சிருக்காவ.
அந்த காவல்காரனும் கிடா தலையை தூக்கிட்டு ஓட்டமும் நடையுமா செய்துங்கநல்லூர் வந்துருக்காவ. அதுக்குள்ள வசவப்புரம் கிட்ட வில்லு வண்டி போயிட்டு. இவுகளும் விடலை பின்னால ஓடி வந்து “கோனாரு அய்யா தெரியா பண்ணிபுட்டேன். நல்லா இருப்பிய தலையை வச்சிக்கிடுங்க என்னை மன்னிச்சிடுங்கன்னு” கேட்டு இருக்காவ.
கோனாரு சிரிச்சி கிட்டே. “நான் கொடுத்தது கொடுத்தது தான். யாருகிட்டேயும் திருப்பி வாங்க மாட்டேன். நீ எடுத்ததை இனிமே நீயே கொண்டு போயிருன்னு சொல்லுட்டாவ”.
எவ்வளவோ சொல்லி பாத்தாலும் கேட்கலை.
ஆனால் காண்டிரக்டர் கோனார் சொல்லியிருக்காவ. “இனிமே எங்க கிடாக்களை இந்த கோயில வெட்டமாட்டோ”முன்னு கராரா சொல்லிட்டாவ. அதுக்கப்புறம் புத்தனேரியில இருந்த புணமலை சாஸ்தாவோடு ஆகாசமுடையார் சாஸ்தாவையும் வைச்சி கும்பிட்டாவ.
அந்த அளவுக்கு தன்னமானத்தோடு வாழுதவிய கும்பிடுத சாஸ்தா புணமாலை சாஸ்தா”.
“அய்ய அவுக பெரிய ஆளுத்தான். ஆனா சாஸ்தாவுக்கு ஏன் புண மாலைன்னு பேரு அதுதான் எனக்கு புரியலை”.
நீ இன்னும் அதை மறைக்கலையா? உனக்கு பதில் சொல்லுதேன் . கேட்டுக்க.
புனலுனா தண்ணீர் அப்படின்னு ஒரு பொருள் உண்டு. பெரும்பாலுமே குளத்து கரையில இருக்கிற இந்த சாஸ்தா இருக்கிற இடத்தில எப்போதுமே வத்தாம புனல் ( தண்ணீர்) இருக்கும். இவருக்கும் 21 வகை அபிசேகம் செய்ய வேண்டாம். அந்த குளத்தில கிடக்கிற தண்ணீரை கொண்டு குளுற அபிசேகம் செஞ்சா போதும். அதாவது தண்ணீரை மாலையா கொண்ட சாஸ்தா. புணல் மாலை சூடும் சாஸ்தா தான் பிற்காலத்தில புணமாலை சாஸ்தான்னு மாறி போச்சு.
அது மட்டுமா? பாறைகுளத்தில தண்ணீர் நிரம்பி பொங்கி நிக்கும். இந்த குளம் உடையாம காப்பாத்துத்ததும் இந்த சாஸ்தாத்தான். இதனாலத்தான் இந்த கோயில் அடிமைகளும், காவலாளிகளும் அவுக பிள்ளைகளுக்கு புணமாலைன்னு பெயர் வைச்சி அழகு பார்பாங்க.
பெரும்பாலுமே உழவுதொழில் செய்யறவியத்தான் இந்த பெயரை வைப்பாவ”.
“அப்போ இதுக்கு அர்த்தம் பிணம் இல்லையா?”.
“அட போடே பொசங்கெட்ட பயலை. பிணத்துக்கும், புணத்துக்கும் அர்த்தம் தெரியாதவனா இருக்கீயே. சாமி கண்ணை குத்தி புடும். ஒழுங்கா பேசு” என்றாள் ஆச்சி.
சிக்கென்று கண்ணை பொத்திக்கொண்டான் ராசுக்குட்டி.
நாளைக்கு பள்ளி கூடத்துக்கு போகும் போது புணமாலை கிட்ட சொல்லுவோம். “ஏலேய் உனக்கு நல்ல பேரு வைச்சிருக்காவடே. நீ சும்மா அழுவாதேன்னு சொல்லுவோம்” என நினைத்தான் ராசுக்குட்டி.
( ஆத்தோரக்கதைகளை ஆச்சி தொடர்ந்து சொல்லுவாள்)


