கோவில்பட்டியில் நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 11-ம் நாளான நேற்று நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் தெப்பத்திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு சுவாமி -அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
மாலை 5 மணிக்கு ரிஷப வாகனங்களில் பூவனநாதர்- செண்பகவல்லி அம்மன் திருவீதி உலா நாதஸ்வர இசையுடன் புறப்பட்டு, எட்டயபுரம் ரோடு, மாதாங்கோவில் ரோடு, மெயின் ரோடு வழியாக சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்து, பின்னர் தெப்பக்குளத்திற்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமி- அம்பாள் கோவில் திருக்குளத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்திற்கு எழுந்தருளி 9 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள்.


