தூத்துக்குடி பெருமாள்புரம் மெயின் ரோட்டில் சேதம் அடைந்துள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பெருமாள்புரம் மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. கடந்த ஒராண்டுக்கு முன்பு, செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி கால்வாயில் இறங்கியதால், கால்வாய் சுவர் சேதம் அடைந்துவிட்டது. அப்போது அதிகாரிகள் பேசி சம்பந்தப்பட்ட லாரி நிறுவனத்தின் மூலம் கால்வாயை சீரமைப்பதாக கூறியிருந்தனர்.
ஆனால் அதன்பின்னர் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது மழை காலம் தொடங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் கழிவுநீர் புகும் சூழல் நிலவுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து புதிய கால்வாய் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


