சாத்தான்குளம் அருகே 10 ஆண்டுகளாகச் சாலை சீரமைக்கப்படாமல் உள்ள சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி நூதன போராட்டம் நடைபெற்றது..
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியில் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம், கொம்பன் குளம் செல்லும் சாலை வளைவில் சுமார் 10 ஆண்டுகளாகச் சாலை சிதைந்து குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. இதனைச் சீரமைக்கக் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மழைக் காலங்களில் சிதைந்த சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கிக் காணப்படுகிறது. இது வாகன ஓட்டிகளை மிகுந்த சிரமத்தில் ஆழ்த்தி வருகிறது. மேலும் வாகன ஓட்டிகள் இந்தப் பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயமடைவது தொடரும் நிகழ்வாக உள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் இன்னும் சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் வர்த்தக சங்க செயலர் செல்வராஜ் மதுரம் தலைமையில் கிராம மக்கள் சிலர், அதிகாரிகளைக் கண்டித்தும், சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் சாலை சிதைந்து பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இனியும் சாலை சீரமைக்கப்படவில்லையெனில் கிராம மக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


