தருவை வாழ வல்லப பாண்டீஸ்வர் ஆலயத்தில் உள்ள சன்னதிகள் விவரம் வருமாறு.
இங்கு அருள்மிகு ஸ்ரீ வாழவல்லவ பாண்டீஸ்வரர் சன்னதி, அருள்தரும் அன்னை அகிலாண்டேஸ்வரி அம்பாள் சன்னதி, அருள்மிகு ஸ்ரீ விநாயகர் சன்னதி, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகர் சன்னதி, மகாநந்தீஸ்வரர் சன்னதி, ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி, தென்முக கடவுளான ஸ்ரீ தட்சணாமூர்த்தி சன்னதி, ஸ்ரீ குபேர மகாலட்சுமி சன்னதி, அருள்மிகு ஸ்ரீ பைரவர் சன்னதி, நவகிரகங்கள் சன்னதி , ஸ்ரீ ஐயப்பன் சன்னதி ஆகியவை உள்ளன.
இங்கு கந்த சஷ்டி மிகச்சிறப்பாக நடைபெறும். ஆறாவது நாளன்று முருகப் பெருமானுக்கும் வள்ளி தெய்வானைக்கும் அபிஷேக ஆராதனைகள் எல்லாம் நடந்து அதற்குப் பிறகு இங்கே இருக்கிற அக்ரகார தெருவில் வைத்து முருகப்பெருமான் சூரசம்காரம் நடக்கிறது. சூரசம்காரம் முடிந்த பிறகு முருகப்பெருமானுக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கிறது.
இந்த தகவலையெல்லாம் சங்கர பாண்டியன், பிச்சுமணி ஆகியோர் கூறியிருந்தார்கள். தேவையான வேலைகளை செய்வேன். ஐப்பசி மாதம் நடைபெற கூடிய அன்ன அபிஷேகம் இங்கு மிக சிறப்பு வாய்ந்தது. பச்சையரிசி சாதத்தில் சுட சுட சாமி திருமேனியில் சாத்தி, அந்த சாதத்தை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். அதை சாப்பிடுபவர்களுக்கு திரேக ஆராக் கியம் கிடைக்கும், நரம்பு பிரச்சனை கள் தீரும் என்பது ஐதீகம். இங்குள்ள தட்சணமூர்த்தி இங்கு மிக சிறப்பாகும். அக்கினி தீர்த்தம் இங்கு மிக சிறப்பனதாகும். இரண்டு வருடங் களுக்கு முன்பு இங்கு மிகப் பெரிய கோடை வந்தது. அந்த கோடையிலும் அந்த தீர்த்த பகுதி, குறைவே இல்லாமல் நீர் சுரந்து கொண்டே இருந்தது.
இங்குள்ள அக்னீஸ்வரர் சிவாலயத்தில் உள்ள போர் தண்ணீர் குடிதண்ணீர் போலவே நல்ல நீராகவே இருக்கும். அதுதான் அக்னீஸ்வரரின் ஒரு தனி சிறப்பு என இவ்வூர் மக்கள் நம்புகிறார்கள்.
இந்த ஊரில் விநாயகர் கோவில் உள்ளது. பெருமாள் கோவிலும் இங்குள்ளது. இங்குள்ள சிவாலயங் கள் ஊருக்குள் ஒன்றும், வடக்கில் ஒன்றும் உள்ளது. வல்லவ பாண்டீஸ் வரர் அகிலாண்டேஸ்வரி அம்பாள் பக்கத்தில் ஸ்ரீ சக்கரம் ஒரு தனிச்சிறப்பு.
சிறப்பு வாய்ந்த இந்த சிவாலயத்தில், மகாநந்தீஸ்வரர் சிறப்பாக அருள் பாலித்திருக்கிறார். பிரதோஷ வழிபாடு இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.
இவ்வூரில் உள்ள அக்ரகாரத்தெரு மிகச்சிறப்பாக உள்ளது. இந்த தெருவை ஏற்கனவே மந்திரி அவர்கள் கூட்டிச்சென்று என்னிடம் காண்பித்து உள்ளார். அந்த சமயத்தில் அங்குள்ள பெரியவர் ஒருவரிடம் திண்ணையில் அமர்ந்து பேசியிருக்கிறேன்.
சிலு சிலுவென பொதிகை காற்ற வீசி ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் உள்ள திண்ணையில் உள்ளவர்கள் மற்ற வீட்டில் உள்ள திண்ணையில் இருந்து முகம் பார்த்து பேசலாம். அந்த அளவுக்கு ஒரு இடுக்கு பாதை இந்த ஊரில் உள்ள அக்ரகாரத்தில் உள்ளது.
பெரும்பாலுமே தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள அக்ரகாரங்கள் மிகச்சிறப்பானவை. அந்த அக்கிரகாரங்களில் இருபுறமும் வீடுகள் மிகவும்பழமையாக இருக்கும். தெரு முனையில் பெருமாள் கோயில் இருக்கும். அதன் ஓரத்தில்சிவன்கோயில் இருக்கும். ஆனால் இங்கு பெருமாள் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. சிவன் கோயில் அடுத்த தெருவில் கிழக்குநோக்கி உள்ளது.
அக்கரகாரத் தெரு வடக்கிலுருந்து தெற்காக உள்ளது. இந்த தெருவில் இருபுறமும் கிழக்கு நோக்கியும்மேற்குநோக்கியும் வீடுகள்உள்ளன.
மேற்கே உள்ள வீடுகளில் தான் திண்ணை பகுதியில் அந்த தொண்டு அமைப்பை பார்க்கிறோம்.
இந்த தொண்டு நான் தாமிரபரணி ஆற்றங்கரையில் தருவையில் தான் பார்க்கிறேன். எனது சிஷ்யன் சுடலை மணிச்செல்வன் ஒவ்வொரு தொண்டு வழியாகவும் நடந்து, கடைசி தொண்டுக்கு சென்று விட்டு , மீண்டும் வீடியோ எடுத்தப்படியே திரும்பினான்.
மாலை நேரத்தில் அவர் அவர்கள் வீட்டுவாசலில் பெரியவர்கள் அமர்ந்து கொண்டு தொண்டு வழியாக மற்ற வீட்டு திண்ணையில் இருக்கும் பெரியவர்களிடம் பேசிக்கொள்வார்கள்.
பெரும்பாலுமே தெற்கில் இருந்து வரும் காற்று தென்றல், வடக்கில் இருந்து வரும் காற்று வாடை. இந்த இரண்டு காற்றும் இந்த தொண்டு வழியாக ஒவ்வொரு வீட்டு வழியாக செல்கிறது.
இந்த அமைப்பு முன்னோர்களின் கலைத்திறனை வெளிப்படுத்துகிறது. தற்போது ஐந்து வீடுகளில் மட்டுமே இதுபோன்ற அமைப்பு காணப் படுகிறது. மற்ற இடங்களில் அமைப்பு இல்லை. வீடுகளை உடைத்து விட்டு நவீனமாக கட்டியுள்ளார்கள்.
ஆனாலும் பழமை மாறாமல் இருக்கும் இந்த வீடுகள் அழகு நமது மனதை விட்டு அகலா வண்ணம் உள்ளது.
அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும்’’ கிராமங்களில் புழங்கும் இந்த சொல் வாடையே திண்ணைகளின் முக்கியத்துவத்தை சொல்கிறது.
ஆனால், இன்று திண்ணைகளே காலியாகி விட்டது என்பதுதான் ஒரு வரலாற்று சோகம்.
வாசல் திண்ணை, நடை, ரேழி, தாவாரம், பாவுள், கூடம், கூடத்து உள், முத்தம், தொட்டி முத்தம், கொல்லை , ரெண்டாங்கட்டு, சமையல் உள், கொல்லைத் தாழ்வாரம், கிணத்தடி, கோட்டைஅடுப்பு, மாட்டு தொழுவம், தோட்டம், புழக்கடை … இப்படி பல்வேறு நிலைகளை கொண்டது அந்தகால கிராமத்து பாரம்பர்ய வீடுகள்.
நம் கிராமத்து வீடுகள் அழகே தனி.
ஓலைக்குடிசையின் ஒட்டுத்திண்ணை தொடங்கி, ஓங்கி உயர்ந்த மச்சுவீட்டின் வரவேற்பு திண்ணை வரை அன்றைய மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நீக்கமற நிறைந்திருந்தன திண்ணைகள்.
இன்று திண்ணைகள் இருக்கும் இடத்தில் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும், வாடகைக்கு கடைகளும் இருக்கின்றன.
இப்போது எந்த வீட்டிற்கும் திண்ணைகள் இல்லை. மக்கள் மனதில் பரந்த எண்ணமும் ஈரமும் இல்லை.
பழைய காலத்தில் வீட்டின் இருபுறமும் திண்ணை வைத்து கட்டுவார்கள்.
வழிபோக்கர்கள் தங்கவும், வீட்டு பெரியவர்கள் மாலைநேரத்தில் காற்று வாங்கவும் வசதியாக இருக்கும்.
அக்ரஹாரங்களின் அழகே திண்ணைகள் தான். வரிசையாக திண்ணையுடன் கூடிய வீடுகளும், தெருகோடியில் ஒரு அழகான கோவிலும் (பெரும்பாலும் கிருஷ்ணன் கோவில்கள் தான்) அழகோ அழகு. பின்னாடி பொழை.
கூட்டு குடும்பம் இல்லாமல் எப்படி நமது பண்பாடு சீர்கெட்டு விட்டதோ, அப்படியே திண்ணைகள் இல்லாமல் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதி இல்லாமல் போய்விட்டது.
ஒற்றை திண்ணையை விட இரட்டை திண்ணையே விஷேசமானது. வீட்டுக்கு வருபவர்களை உட்கார வைத்து பேச வசதியாக இருக்கும்.
மாலையில் காற்று வாங்கவும், அருகில் வசிப்பவர்கள் கடந்து செல்லும் போது குசலம் விசாரிக்கவும், வீட்டுப் பெரியவர்கள் மாலை திண்ணையில் அமர்ந்து கதை பேசவும் திண்ணைகளின் பயன்பாடு அளப்பரியது.
எல்லா நேரமும் எல்லாத் திண்ணைகளும் ஏதோ ஒரு சேதியை சொல்லி கொண்டுதான் இருந்தன.
அதில் அமர்ந்துதான் பாட்டிகள், பேரன் பேத்திகளுக்கு கதைகள் சொன்னார்கள். இளையவர்கள் பல்லாங்குழி விளையாடினார்கள்.
பெரியவர்கள் பரமபதம் ஆடினார்கள், அப்பாக்கள் அரசியல் பேசினார்கள்.
அம்மாக்கள் ஊர்க்கதை பேசினார்கள்.
புழக்கடை திண்ணையில் அமர்ந்து புது மணத்தம்பதியர் நிலாவை ரசித்தார்கள்.
எதிர் திண்ணைகளில் காதலர்கள் சமிக்ஞையில் காதலை வளர்த்தார்கள்.
திண்ணைகள் பள்ளிகூடமாகவும், அரசியல் மேடைகளாகவும், நடன அரங்கமாகவும், கலைக் கூடமாகவும், விளையாட்டு அரங்கமாகவும் தேவைக்கேற்ப மாறிக் கொள்ளும் இயல்புடையதாக இருந்தது.
சாணம் மணக்கும் ஏழை வீட்டுத் திண்ணை தொடங்கி, கிரானைட் கல் பதித்த பெரிய வீட்டு திண்ணை வரை
– கல்வி, விளையாட்டு, ஆடல், பாடல், அரசியல், அனுபவம், பக்தி, பஞ்சாயத்து, கதை, நாடகம், காதல், காமம், மகிழ்ச்சி, சோகம், இளமை, முதுமை என்று நமது கலாச்சாரங்களை சொல்ல ஆயிரமாயிரம் விஷயங்கள் உண்டு திண்ணைகளிடம்.
ஆனால்!!!
தற்காலத்தில் ஒருவரோடொருவர் பேசுவது என்பதே அரிதாகி விட்டது.
கிராமபுறங்களிலாவது அக்கறையுடன் குசலம், நலம் விசாரித்தல் இன்னும் நடைமுறையில் உள்ளது.
ஆனால் நகர்ப்புறங்களில்???
அதுவும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மிகவும் மோசம்.
கிராம புறங்களில் சன்னதி தெருவின் அழகே அழகு. இப்போது அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து வருகிறது.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, அன்பை பரிமறினாலே உலகில் பாதி நோய்கள் குறைந்து விடும்.
தருவை அக்ரகாரத்தின் திண்ணை அழகைபார்த்து வியந்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
( நதி வற்றாமல் ஓடும்)