தூத்துக்குடியில், அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம், வஉசி துறைமுக ஆணையம் இணைந்து நடத்தும், ஏஐசிசிஐ நேஷனல் ஸ்டாா்ட்அப் சம்மிட் 2026 என்னும் மாநாடு ஆக. 20,21 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தை இந்தியாவின் முதன்மையான தொழில் தொடக்க மற்றும் புத்தாக்க நுழைவு வாயிலாக மேம்படுத்தும் நோக்கில், அகில இந்திய வர்த்தக தொழில் சங்கமும் (AICCI) வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையமும் இணைந்து நடத்தும் தேசிய தொழில் தொடக்க உச்சி மாநாடு 2026 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“தூத்துக்குடியிலிருந்து உலகிற்கு” (Tuticorin to the Globe) என்ற முதன்மைக் கருப்பொருளைக் கொண்டு இம்மாநாடு ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மகாலில் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் 5,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், 500-க்கும் மேற்பட்ட புதிய தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்கள்), 150 புதிய தொழில் கண்காட்சி அரங்குகள், 50-க்கும் மேற்பட்ட தேவதை முதலீட்டாளர்கள் (ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ்) மற்றும் 25-க்கும் மேற்பட்ட முன்னணித் துறைசார்ந்த உரையாளர்கள் நேரடியாகப் பங்கேற்கின்றனர்.
தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மாநாட்டில் மாநாட்டில் துறைமுகம் & போக்குவரத்து, விண்வெளி தொழில்நுட்பம், நீலப் பொருளாதாரம், உப்பு புத்தாக்கம், காலநிலை & ஆற்றல், நேரடி விற்பனை & வேளாண் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு & மருத்துவ தொழில்நுட்பம், மின்சார வாகனம் & தொழில்துறை 4.0 ஆகிய துறைகளுக்கான 8 முக்கிய புத்தாக்க அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
இம்மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்படும் “தேசிய தொழில் தொடக்க ஹேக்கத்தான் 2026” நிகழ்வில், தேர்வு செய்யப்படும் சிறந்த திட்டங்களுக்கு ரூபாய் 14 லட்சத்திற்கும் அதிகமான தொழில் தொடக்க மானியங்கள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு குறிப்பிட்ட தொழில் பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் சிறந்த புத்தாக்கக் குழுக்களுக்கு முறையே ரூபாய் 1,00,000, ரூபாய் 50,000 மற்றும் ரூபாய் 25,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
புதிய தொழில் கண்காட்சி, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் சந்திப்பு, புதிய தொழில் திட்ட விளக்க உரை, தொழில் தொடக்க விருதுகள் மற்றும் வணிக நெட்வொர்க்கிங் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் இம்மாநாட்டில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இம்முயற்சியானது புதிய தொழில் நிறுவனங்கள், சிறு குறு நடுத்தர தொழில்துறையினர் (MSME), முதலீட்டாளர்கள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைத்துத் தூத்துக்குடியைத் தேசிய அளவிலான பொருளாதார மையமாக உயர்த்தும் என்று எஸ். சங்கத்தின் தலைவர் சங்கர் மாரிமுத்து, பொதுச் செயலாளர் எஸ். சுரேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.


