விளாத்திகுளம் அருகே காடல்குடி முதல் புதூர் வரையிலான பிரதான சாலை பல மாதங்களாகச் சீரமைக்கப்படாமலும், இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்தும் காணப்படுவதால், வரும் ஜூலை 27 அன்று 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து பெருந்திரள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி முதல் புதூர் வரையிலான இச் சாலையைச் சீரமைக்க வேண்டும் எனப் பகுதி மக்கள் தொடர் கோரிக்கைகளை விடுத்து வந்தனர். இக் கோரிக்கையை ஏற்று, முந்தைய திமுக அரசு ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சாலையைச் சீரமைத்து, சீமைக்கருவேல மரங்களை அகற்றியது. எனினும், சாலையின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் சரி செய்யப்படாமல் விடுபட்டுள்ளன.
தற்போது எஞ்சிய பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் தடையின்றி வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளதால், இருசக்கர வாகனங்கள் கூட ஒன்றையொன்று கடந்து செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. இச் சாலை வழியாகத்தான் தினசரி பள்ளி, கல்லூரிப் பேருந்துகளும், அவசர மருத்துவ உதவிக்கான 108 வாகனங்களும் சென்று வருகின்றன. குறிப்பாக, அவசரப் பிரசவ காலங்களில் கர்ப்பிணிப் பெண்கள் பூதலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இக் குறைபாடுகள் குறித்துப் பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றும், தற்போதைய புதிய அரசு எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனச் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே, உடனடியாகச் சீமைக்கருவேல மரங்களை அகற்றிச் சாலையை முழுமையாகச் சீரமைக்க வலியுறுத்திப் பி.ஜெ.வீரபுரம், புதுச்சின்னையாபுரம், சேர்வைக்காரன்பட்டி, கந்தசாமிபுரம், மாதலாபுரம், வெங்கடாசலபுரம், எல்.வி.புரம், கழுகாசலபுரம், உத்தண்டாபுரம், பூதலாபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். இக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் ஜூலை 27 அன்று விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாகப் பெரிய அளவிலான சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்


