தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட தாலுகா நீதிமன்றங்களுக்குத் தற்காலிக அடிப்படையில் புதிய அரசு வழக்கறிஞர்களை (சட்ட அதிகாரிகள்) நியமித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற அரசு வழக்கறிஞராக ஆர்.சங்கர நாராயணனும், மகிளா நீதிமன்றச் சிறப்பு அரசு வழக்கறிஞராக எஸ்.ஆர்.மினிலாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞராக எஸ்.மணிகண்ட பிரபுவும், மனித உரிமைகள் நீதிமன்றச் சிறப்பு அரசு வழக்கறிஞராக எம்.செந்தூரபாண்டியும் பொறுப்பேற்கவுள்ளனர்.
கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய வட்டார நீதிமன்றங்களுக்கும் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசுப் பணிகள் செய்யும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமன ஆணை நகல்களைச் சம்பந்தப்பட்ட சட்ட அதிகாரிகளுக்கு வழங்கி, அதற்கான அறிக்கையை அரசுக்கு அனுப்புமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசாணையின்படி, இப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சட்ட அதிகாரிகளின் நியமனமானது முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது ஆகும். இவர்களின் பணிக்காலம் ஆறு மாதங்கள் அல்லது உரிய நடைமுறைகளைப் பின்பற்றித் தகுதியான நபர்கள் நிரந்தரமாக நியமிக்கப்படும் வரை மட்டுமே அமலில் இருக்கும். முன்னறிவிப்பு ஏதுமின்றியே இவர்களின் பணிகளை எந்நேரத்திலும் ரத்து செய்ய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


