நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் தண்டவாளம் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, திருச்செந்தூர் – நெல்லை இடையேயான பயணிகள் ரயில் சேவைகள் மேலும் 4 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை ரயில் சந்திப்பில் உள்கட்டமைப்பு மற்றும் தண்டவாளம் மேம்பாட்டுப் பணிகள் ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதனையொட்டி நெல்லை சந்திப்பிற்கு வரும் பல்வேறு ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முழுமையாக ரத்தாகும் ரயில்கள் விபரம்:
ஜூன் 15 (இன்று) முதல் ஜூன் 18ஆம் தேதி வரை கீழே குறிப்பிட்டுள்ள ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன:
காலை 10.00 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் – நெல்லை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56004)
மாலை 04.30 மணிக்கு புறப்படும் நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயில் (வண்டி எண்: 56003)
பகுதியாக ரத்தாகும் ரயில்கள் விபரம்:
ஜூன் 16 (நாளை) மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன:
காலை 07.05 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் – நெல்லை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56752) செய்துங்கநல்லூர் – நெல்லை சந்திப்பு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. (இந்த ரயில் செய்துங்கநல்லூர் வரை மட்டுமே இயங்கும்).
காலை 09.05 மணிக்கு புறப்படும் நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயில் (வண்டி எண்: 56753) நெல்லை சந்திப்பு – செய்துங்கநல்லூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. (இந்த ரயில் செய்துங்கநல்லூரில் இருந்து திருச்செந்தூருக்குப் புறப்படும்).
தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றம்:
இதேபோல், ஜூன் 15 (இன்று) மற்றும் ஜூன் 18 ஆகிய தேதிகளில் மும்பை தாதரில் இருந்து வரும் தாதர் – நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், வாஞ்சி மணியாச்சி – நெல்லை சந்திப்பு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் வாஞ்சி மணியாச்சியுடன் தனது சேவையை நிறைவு செய்து கொள்ளும் எனத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


