தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ரூ.53 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பிரதான பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணியை, மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகரத்தின் மிக முக்கிய வடிகாலாக விளங்கும் பக்கிள் ஓடையை, எப்.சி.ஐ. கிடங்கு முன்பிருந்து தொடங்கி திரேஸ்புரம் வரை சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு, 6 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யும் பணி ரூ.53 கோடி மதிப்பீட்டில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், குரூஸ்புரம் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தூத்துக்குடி மாநகர மக்களை மழை வெள்ளக் காலங்களில் பாதுகாப்பதில் பக்கிள் ஓடை மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கடும் மழையின் போது, இந்த ஓடை வழியாகவே பெரும்பாலான வெள்ளநீர் கடலுக்குச் சென்றது.
இதனால் அண்ணா நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, மில்லர்புரம் போன்ற முக்கியப் பகுதிகள் பெரும் பாதிப்பில் இருந்து தப்பின. தற்போது பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் இந்த ஓடை மேலும் அகலப்படுத்தப்படுவதால், வருங்காலங்களில் கூடுதலாக வெள்ளநீர் வந்தாலும் அது தேங்காமல் வேகமாக வெளியேறிவிடும். தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளால், ஓடையில் வழக்கமாகத் தண்ணீர் செல்வதில் எந்தத் தடையும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.
ஆய்வின் போது, மாநகராட்சி உதவிப் பொறியாளர் ராஜேஷ்கண்ணா, பகுதிச் செயலாளர் சுரேஷ்குமார், போல்பேட்டை பகுதிப் பிரதிநிதி பிரபாகர் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.


