தூத்துக்குடி விமான நிலையத்தில் உள்ள பழைய பயணிகள் முனையக் கட்டிடம், விரைவில் சரக்கு போக்குவரத்து முனையமாக மாற்றப்பட உள்ளதாக விமான நிலைய இயக்குனர் ஜே.ஆர்.அனூப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் : தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்களின் வருகை காரணமாக, பயணிகள் எண்ணிக்கை சுமார் 33 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட நவீன பயணிகள் முனையக் கட்டிடம் மற்றும் பெரிய ரக விமானங்கள் வந்து செல்லும் வகையிலான ஓடு பாதை விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
தற்போது மோசமான வானிலை நிலவும் சூழல்களிலும் விமானங்கள் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கு வசதியாக ‘இன்ஸ்ட்ருமெண்ட் லேண்டிங் சிஸ்டம்’ (Instrument Landing System – ILS) அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 300 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையம் மூலம், இந்தியாவின் உயரிய 4 நட்சத்திர சுற்றுச்சூழல் தரச்சான்றிதழைப் பெறுவதற்கான முயற்சிகளும் வலுப்பெற்றுள்ளன.
பயணிகளின் வருகை அதிகரித்துள்ள சூழலில், பழைய முனையக் கட்டிடத்தைச் சரக்கு முனையமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு, சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் (BCAS) வடிவமைப்பு அனுமதியையும் வழங்கியுள்ளதால் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இது தவிர, வணிக ரீதியான விமான ஓட்டுநர் உரிமம் (Commercial Pilot License) பெற விரும்பும் மாணவர்களுக்காகப் புதிய ‘விமான பயிற்சி நிறுவனம்’ ஒன்றும் விரைவில் இங்கு தொடங்கப்பட உள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் செயல்படும் இத்துறையில், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இன்று (திங்கட்கிழமை) ‘யாத்ரி சுவிதா திவஸ்’ கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இரத்ததான மற்றும் மருத்துவப் பரிசோதனை முகாம்கள், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள், விமானத் துறை வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பணியாளர்களைப் பாராட்டும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இக்கொண்டாட்டத்தில் விமானப் பயணிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


