மீன்பிடித் தடைக் காலம் முடிவுற்றதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் இன்று அதிகாலை முதல் ஆவலுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
மீன்களின் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல அரசு தடை விதிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தடைக் காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மொத்தம் 272 பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகள் உள்ளன. தடைக் காலம் முடிந்த முதல் நாளான இன்று, டோக்கன் பெற்றுக் கொண்டு மொத்தம் 221 விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குள் சென்றுள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளதால், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகப் பகுதி மீண்டும் சுறுசுறுப்படைந்து காணப்படுகிறது.


