தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரணமலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் அதிகமான படிகளைக் கொண்ட குடவரைக்கோயில் இது. இந்தக் கோயிலில் தினசரி அன்னதானம், பள்ளி மாணவ-மாணவியருக்கு இலவசப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி உள்படச் சமூகப் பணிகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. கோயிலின் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன், இந்தக் கோயில் அமைந்துள்ள மலை அடிவாரத்தில் இலவச நூலகம் நடத்தி வருகிறார். இதில் அரசுத் தேர்வுக்காக மாணவர்கள் இலவசமாகத் தங்கிப் பயின்று வருகின்றனர்.
இந்தக் கோயிலில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விவசாயிகள் கௌரவித்தல், விவசாயப் பொருள்கள் மற்றும் மாடுகளுக்குப் பூஜை செய்தல், சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்குதல் உள்படப் பல நிகழ்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதன்பின் நீண்ட தூரம் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விவசாயக் கருவிகள் மற்றும் மாடுகளுக்குப் பூஜை நடந்தது. விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி அகில பாரதீய விஸ்வகர்ம ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்தா சரஸ்வதி பரமாச்சாரிய சுவாமிகள், 39-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீமத் பரசமய கோளரி நாத ஆதீனம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி பீடம் கலந்துகொண்டு அருளாசி வழங்கினார். உற்சவர் முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து வீதி உலா பவனி வந்தது. அதன்பின் மக்கள் பொங்கலிட்டு முருகப்பெருமானை வணங்கினர்.
தொடர்ந்து விருது வழங்கும் விழா நடந்தது. விழாவில் தோரணமலை முருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் அவர்கள் வரவேற்றுப் பேசினார். அதன்பின் விருதாளர்களுக்குப் பொன்னாடை போர்த்தி விருதைக் கோளரிநாத ஆதீனம் வழங்கினார். நிகழ்ச்சியில் கல்வியாளர் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன், அகத்தியர் சுவடி க.முத்துக்குமார சுவாமி, சமூகப் பணி மற்றும் நடிகர் வேலாயுத பாண்டியன், மருத்துவப் பணி மணிகண்டன், கல்விப்பணி முனைவர் வேலாயுத சுந்தரராமன், ஆன்மிகப் பணி முனைவர் உமா துரைச்சி, எழுத்துப்பணி தூத்துக்குடி மாரிமுத்து, தாமிரபரணி மீட்டெடுத்தல் ராமச்சந்திரன் என்ற சந்துரு, வர்ணனையாளர் முனைவர் சரவணகுமார், பட்டிமன்ற நடுவர் முனைவர் இராம பூதத்தான், வரலாற்று எழுத்தாளர் சாந்தி பிரபு, தாமிரபரணி தூர் வாரும் பணி பொன்னன்குறிச்சி துரை, இலக்கியப் பேச்சாளர் முனைவர் மணிமொழிச்செல்வன், பத்திரிகைத் துறை தம்பான், கோயில் பராமரிப்புப் பணி அந்தமான் சுந்தர், நாடகப்பணி காளிமுத்து ஆகியோருக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. விருதாளர்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அறிமுகம் செய்தார். நிகழ்ச்சியில் லோட்டஸ் முருகன், கடையம் பாரதி, தன்னூத்து குமரன், பாப்பாக்குடி செல்வமணி, அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர் சுப்பையா, வர்ணனையாளர் பிரபு உள்படப் பக்தர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் விருதாளர்கள் சார்பில் முத்துக்குமார சுவாமி ஏற்புரை வழங்கினார். கோளரி நாத ஆதீனம் ஆசியுரை கூறினார். இதற்கான ஏற்பாடுகளைத் தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.


