தூத்துக்குடி தெப்பக்குளம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை விசு திருநாளை முன்னிட்டு, இன்று சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன.
வாக்கிய முறைப்படி, ‘விசுவாவசு’ ஆண்டு நிறைவடைந்து, புதிய ‘பராபவ’ ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையொட்டி தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் அதிகாலை 5:00 மணிக்குத் திருக்கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 5:30 மணிக்கு மாரியம்மனுக்குப் பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, அம்மனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு, பல்வேறு வகையான காய்கனிகளால் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், மங்கல இசை முழங்க அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. புதிய ஆண்டின் முதல் நாளில் அம்மனைத் தரிசித்து அருள் பெற, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையொட்டி பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் வரிசைப்படுத்துதல் வசதிகளைக் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


