தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவத்திருப்பதி கோயில்களில் ஒன்றாகவும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது திருப்புளியங்குடி காய்சினிவேந்தப் பெருமாள் திருக்கோயில். இந்த கோயிலில் வருடம்தோறும் பங்குனி பிரமோட்சவ விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
அதே போல் இந்தாண்டுக்கான பங்குனி பிரமோட்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி நடந்தது. காலை 9 மணிக்கு சயன குரடு மண்டபத்தில் உற்சவர் பொலிந்து நின்றபிரான் தாயார்களுடன் எழுந்தருளினார்.
தொடர்ந்து கொடிப்பட்டம் கோயில் வளாகத்தை சுற்றி வந்தது. பின்னர் கொடிமரத்திற்கு தீபாராதனை செய்யப்பட்டு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா நாட்களில் தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி விதி புறப்பாடு நடைபெறுகிறது. மார்ச் 21ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.


