கருங்குளம் அருகே தாமிரபரணிக்கரை பகுதியில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. இந்த ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான முதல்கட்ட பணியாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடந்து முடிந்தது. இதில் ஏராளமான பழங்கால மனிதனின் வாழ்வியலை பறைசாற்றும் வண்ணம் ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அதனை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் வாழ்விடப்பகுதிகளை கண்டறிய ஆய்வாளர் எத்தீஸ்குமார் தலைமையில் திருக்கோளூரில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையில் திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி அருகே உள்ள சூரங்குடி கிறிஸ்டோபர் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கலைக்கல்லூரி மூன்றாம் ஆண்டு வரலாற்றுத்துறை மாணவிகள் 40 பேர் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை பார்வையிட வருகை தந்தனர்.
அவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மற்றும் திருநெல்வேலி அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி ஆகியோர் ஆய்வுப்பணிகள் குறித்தும், அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.
இதில் கல்லூரி பேராசிரியர்கள் அபிலா, ஜெப ஷியானி, பேச்சியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


