ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கு கீழ் பகுதியில் கருவேல மரங்களை அகற்றி 15 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து மக்களும் ஒன்று கூடி காணும் பொங்கல் கொண்டாடும் தாமிரபரணி ஆற்றுப்பகுதியினை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார்.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கு கீழ் பகுதியில் இருந்த மணல் பாங்கான பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2 கி.மீ. தூரம் வரையில் சுற்றுவட்டார கிராம மக்கள் காணும் பொங்கல் தினத்தன்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கரும்பு, பனங்கிழங்கு சாப்பாட்டுடன் உற்சாக விளையாடி மகிழ்வர்.
தற்பொழுது, ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ் பகுதியில் புன்னக்காயல் வரையுள்ள தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் மணல் பாங்கான பகுதிகளில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன.
இதனால், காணும் பொங்கல் தினத்தன்று ஆற்றுக்குள் விளையாடும் பழக்கம் காலப்போக்கில் மறைந்தது. இந்நிலையில், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தாமிரபரணி ஆற்றை அழகுப்படும் பணியையும் பாசன குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியையும் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
அணையின் கீழ்பகுதியில் பழைய பாலத்திலிருந்து புதுப்பாலம் வரையில் அடர்ந்து வளர்ந்து இருந்த கருவேல மரங்களும் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. மேலும் கிராமஉதயம் தொண்டு நிறுவனத்தின் பெண்களும் கலந்து கொண்டு பணி நடைபெறும் இடங்களை சீரமைத்தனர்.
அப்பொழுது, ஸ்ரீவைகுண்டம் அணைக்கு கீழ் பகுதியில் இருந்த மணல் பாங்கான பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2 கி.மீ. தூரம் வரையில் காணும் பொங்கல் கொண்டாடும் இடத்தினை இன்று மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் பார்வையிட்டார்.
அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியின் கீழ்ப்பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் காணும் பொங்கலினை கொண்டாடினர். ஆனால் அணைக்கட்டுப்பகுதியில் இருந்து புன்னக்காயல் வரை தற்போது மணல் மேடுகளாளும், முற்செடிகளாளும் தூர்ந்து போனது. இதனை சீரமைத்து காணும் பொங்கல் கொண்டாட ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் பயனாக தற்போது ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் இருந்து புதிய பாலம் வரை அனைத்து பகுதிகளில் இருந்த மணல் திட்டுக்களையும், முற்செடிகளையும் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இந்த பகுதியில் காணும் பொங்கல் கொண்டாடுவதற்கான அனைத்து நடவடிக்கைளும் துரிதமாக நடந்து வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து புன்னக்காயல் வரை முற்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் படகு குழாம் அமைக்க ஆய்வு செய்யவும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அவருடன் ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருள், கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் மற்றும் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.