சாத்தான்குளம், ஆக.12-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா மூலமாக சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை திறந்து வைத்தார். தற்பொழுது இந்த பணிமனை காட்சிப் பொருளாகவே உள்ளது. பணிமனையில் இருந்து பழைய பஸ்கள் ஆறு மட்டுமே இயங்கி வருகிறது. இங்கு எவ்வித தொழில்நுட்ப வசதிகளும் இல்லை. மேலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் டீசல் நிரப்ப வசதியும் பஸ்களில் பழுதுபார்க்கும் தொழில்நுட்பங்களும் கிடையாது. பணிமனை உள்ள சாலை பள்ளம் மேடு மணல் சாலையாக உள்ளது. இந்த பணிமனையில் இருந்து பெரும் நகரங்களுக்கும் விரைவுப் பேருந்துகளும் மாவட்டத்திலுள்ள ஊர்களுக்கும் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என அப்பொழுது தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த வசதிகள் செய்யப்படவில்லை. இதுகுறித்து தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு மாவட்ட மதிமுக துணைச் செயலாளர் மகாராஜன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மனுவில் சாத்தான்குளம் ஓர் தாலுகா தலைநகரம் ஆகும். இங்கு மத்திய மாநில அரசுத் துறை அலுவலகங்களில் வெளியூரிலிருந்து வந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் சாத்தான்குளம் பகுதிகளிலும் சுற்றுப்புறத்தை சேர்ந்த கிராமங்களில் உள்ள மக்கள் சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி, வால்பாறை, ஈரோடு போன்ற பெருநகரங்களில் வியாபாரக் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அங்கிருந்து இவர்கள் சாத்தான்குளம் பகுதிக்கு வந்து சேர்ந்திட விரைவு பேருந்துகள் வசதி இல்லை. மேலும் சென்னை, கோவை போன்ற ஊர்களில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், மெக்கானிக் இன்ஜினியர்கள் சாத்தான்குளத்தில் இருந்து சென்று பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சாத்தான்குளம் பகுதிக்கு வந்து செல்வதற்கு விரைவு பஸ்கள் இல்லை. மேலும் இப் பனிமனையிலிருந்து வள்ளியூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள ஊர்களுக்கு சென்று வர பஸ் வசதி செய்யப்படவில்லை. எனவே சாத்தான்குளம் பகுதி மக்கள், வியாபார மக்கள் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் ஆகியோர்கள் நலனை கருத்தில் கொண்டு பணிமனையில் இருந்து பெரு நகரங்களுக்கு சென்று வர விரைவு பேருந்துகள் இயக்கிட சீக்கிரம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை போல் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள ஊர்களுக்கும் சென்றுவர பேருந்து வசதி செய்திட வேண்டும். காட்சி பொருளாக உள்ள சாத்தான்குளம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் தார் சாலையாக மாற்றி புதுப்பொலிவுடன் பணிமனையில் கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் செய்து கூடுதலாக அரசு விரைவு பஸ்களிலும் நகர பேருந்து வசதிகளும் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். மனுவின் நகல் மாவட்ட கலெக்டர், மாவட்ட போக்குவரத்து கழக பணிமனை இயக்குனர், திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
படம் வெறும் காட்சிப் பொருளாக குண்டும் குழியுமாக மணல் சாலையாக உள்ள சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை


