
தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்தவர் ஜஸ்டின். மாற்றுத்திறனாளியான ஜஸ்டின் கம்யூட்டர் டிசைனராக இருந்து வருகிறார். தற்போதுள்ள சூழலில் வேலைவாய்ப்பு சரியாக இல்லாத நிலையில் ஜஸ்டின் கடந்த மாதம் தூத்துக்குடியில் இருந்து தனது மூன்றுச்சக்கர வாகனத்திலேயே சென்னை சென்று திமுக மாநில இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலினடி நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், தற்போதுள்ள சூழலில் தனக்கு வேலைவாய்ப்பு சரிவர இல்லாத நிலையில் தூத்துக்குடியில் பிரஷ்ஜூஸ் பார்க் (பழ ஜூஸ்) கடை அமைப்பதற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்து தரவேண்டும் என்று கூறி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து, திமுக மாநில இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநி திஸ்டாலின் ஜஸ்டின் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா பகுதியில் பிரஷ்ஜூஸ் பார்க் (பழ ஜூஸ்) கடை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து, அமைக்கப்பட்டுள்ள கடையின் மாதிரி வடிவத்தை ஜஸ்டினிடம் இன்று தனது இல்லத்தில் வழங்கினார். இந்நிகழ்வில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் உடன் இருந்தார்.
இதுகுறித்து, ஜஸ்டின் கூறியதாவது, எனது தந்தை கெனி, தோணி தொழிலாளியாக இருந்து வந்தார். அவர் இறந்து விட்ட நிலையில் நான் எனது தாயார் ஆன்ஸ்லினுடன் லயன்ஸ் டவுன் பகுதியில் வாழ்ந்து வருகிறேன். மாற்றுத்திறனாளியான நான் கம்யூட்டர் டிசைனராக இருந்து வருகிறேன். தற்போதுள்ள செல்போன் உலகில் எனக்கு போதுமான அளவில் வேலைவாய்ப்புகள் இல்லை. இதனால் போதிய வருமானம் இல்லாமல் பரிதவித்து வந்தேன்.
இந்நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி நான் தனியாகவே சென்னை சென்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து எனது நிலையை அவரிடம் எடுத்து சொல்லி உதவிடுமாறு வேண்டினேன். நான் கேட்டதின் அடிப்படையில், தூத்துக்குடி ராஜாஜி பூங்கா பகுதியிலேயே பிரஷ்ஜூஸ் பார்க் (பழ ஜூஸ்) கடை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், துரிதமாக செய்து கொடுத்து, அங்கு கடை அமைத்து தந்து, இன்று என்னிடம் அந்த கடையின் மாதிரி வடிவத்தை வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அதுவும் கடையின் மாதிரி வடிவத்தினை தமிழக முதல்வரின் இல்லத்தில் வந்து அவரது அருந்தவப்புதல்வரிடம் நான் பெற்றுள்ளது இறைவனின் அருட்கொடையாகும். இதற்காக எனக்கு உதவியாக இருந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.