( கடந்த மூன்று வாரங்களாக எதிர்பாராதவிதமாக நதிக்கரை யோரத்து அற்புதங்கள் பாகம் 2 தொடர் வெளி வர இயலவில்லை. இனி ஆசிரியர் ஜெய ஆசிர் அவர்களின் வழிகாட்டுதலில் தொடர்ந்து வெளிவரும். ஏற்கனவே 327 வாரங்களை கடந்து சாதனை புரியும் இந்த தொடர் மீண்டும் மும்பை தமிழ் டைம்ஸ் இன் மைல் கல்லாய் தொடரும் & அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு)
என் வாழ்வில் அன்றும் ஒரு கும்பாபிசேகத்துக்கு சென்றேன்.
செய்துங்கநல்லூருக்குநான் குடி பெயர்ந்து வந்து 28 வருடங்கள் ஆகிறது. இந்த 28 வருடமும் என்னை இவ்வூர் மக்கள் பிரித்து பார்த்ததே கிடையாது. இந்து கிறிஸ்தவ இஸ்லாம் என என்னை பிரித்து பார்க்காமல் அனைத்து மதத்தவர்களும் என்னை அவர்கள் விழாவுக்கு அழைத்து கௌரபடுத் துவார்கள். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு செய்துங் கநல்லூரில் சொந்த வீடு கட்டியும் குடியேறிவிட்டேன். நான் முத்தாலங் குறிச்சியில் சிறு பையனாக இருக்கும் போதே சனிக்கு பூஜை செய்ய செய்துங்கநல்லூர் சிவன் கோயிலு க்குத் தான் வருவேன். அப்போது கோயிலில் கிழக்கு வாசல் திறந்து இருக்காது. கொடி மரம் இல்லை. தெற்கு வாசல் மட்டுமே திறந்து இருந்தது. நான் பாளையங் கோட்டையில் படிக்கும் போது செய்துங்கநல்லூர் ரயிலில் இறங்கி இந்த வழியாகத்தான் முத்தாலங் குறிச்சி செல்லுவேன். வழுக்கும் வாய்க்கால் பாதையும், பச்சைபசேல் என இருக்கும் வயல்வெளிகளும், தூரத்தில் தெரியும் மணக்கரை மலையும் மனதுக்கு இதமாக இருக்கும். அப்போதெல்லாம் இந்த கோயிலுக்கு தலபுராணம் நான் எழுதுவேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை.
காலங்கள் கடந்தது சிவராத்திரி பூஜை முத்தாலங்குறிச்சியில் நடத்தவேண்டி, செய்துங்கநல்லூர் சிவபக்தர்களை அழைத்து செல்ல வருவேன். அப்படியே எனக்கும் சிவன்கோயிலுக்கு உண்டான தொடர்ப்பு பெரிதானது. தினகரனில் இந்த கோயில் குறித்துகட்டுரை எழுதினேன். அதோடு மட்டுமல்லாமல் அத்ரி மலை யாத்திரை என்று நான் தினகரனில் எழுதிய தொடரில் அத்ரிமுனிவர் மகனான பதஞ்சலி முனிவர் நமது கோயிலுக்கு வந்த வரலாற்றை எழுதியிருந்தேன். தற்போதும் இந்த தகவல் நான் எழுதிய “அத்ரி மலை யாத்திரை” எனும் சூரியன் பதிப்பகம்வெளியிட்ட நூலில் உள்ளது.
தொடர்ந்து சிவ பக்தர்கள் அண்ணாமலை கோயிலில் மடியேந்தி பிச்சையெடுத்த இந்த கோயிலில் திருப்பணியில் ஈடுபட்டனர். சுமார் 12 வருடங்களுக்கு முன்பு கும்பாபிசேகம் நடந்தது. இந்த வேளையில் புகைப்பட கலைஞராக நான் எடுத்த புகைப்படம் தற்போதும் கோயில் வளாகத்தில் உள்ளது.
அதன் பின் பக்தர்கள் 63 நாயன்மார்கள் அமைத்தனர். பள்ளியறை அமைத்தனர். கொடிமரம் அமைத்தனர். கிழக்கு வாசலை திறந்தனர். இந்த வேளையில் அர்ச்சகராக முத்து ராமன் அய்யா வந்து பணியமர்ந்தார். கோயிலுக்கு அர்ச்சகர் மிக மிக முக்கியம். அந்த வகையில் முத்துராமன் அய்யா கருங்குளம் வெங்கடாலம் வாத்தியாரின் மகன், மணிமூர்த்திஸ்வரம் பாலா அரச்சகரின் தமயன். எனவே அவர் இந்த ஆலயத்தின் மீது மிகுந்த பற்று கொண்டார். அவருடைய கைங்கர்யத்தில் ஒரு சிவன்கோயிலில் என்னென்ன பூஜை நடக்குமோ அனைத்துப்பூஜையும் நடத்தினார்.
திமுக அரசு அறங்காவலரை நியமித்தது. இதில் சிவ பக்தர் குரு மாரியப்பன் அவர்கள் அறங்காவ லராக நியமிக்கப்பட்டார். அய்யா திருப்பணிச்செம்மலாக கும்பாபி சேக பணிகளை விரைந்து செய்தார். திருவிழாக்களை முன்னின்று நடத்தினார். கோயில் ஐம்பொன் சிலைகளை நெல்லையப்பர் கோயிலில் இருந்து எடுத்து வந்து 10 நாள்திருவிழாவை மிகச்சிறப்பாக நடத்தினார். இது ஒரு புறம் இருக்க செங்கோல் மட ஆதினம், வேளாக்குறிச்சி ஆதினம் என ஆன்மிக செம்மல்களை கோயிலுக்கு வரவழைத்து கோயிலில் பல பூஜைகளை நடத்தினார்.
இந்த கோயிலில் வந்து செல்வோருக்கு கேட்ட வரம் கிடைத்தது. இது குபேர ஸ்தலம், தாமோதரன் அய்யாவின் திருவாசக முற்றோருதல் மற்றும் ஆறுமுகம் அய்யாவின் திருவாசக முற்றோருதல் என பக்தர்கள் கூடும் தலமாக மாறியது இந்த ஆலயம் . தினமும் இரவில் பள்ளியறை பூஜை நடைபெறும் சிறப்பான ஆலய மாகவும், சிதம்பரத்தினை போல் மார்கழி மாதம் 10 நாள்திருவிழா நடைபெறும் ஆலயமாக மாறியது. இதற்கு செய்துங்கநல்லூர், வி.கோவில்பத்து பொதுமக்கள் மற்றும் ஆன்மிக பேரரவையின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
இந்த ஆலயத்தின் நிர்வாக அலுவலர் கோகுல மணிகண்டன் மற்றும் இன்ஸ்பெக்டர் நம்பி ஆகியோர் கோயில் கும்பாபி சேகத்துக்கு மாவட்ட ஒப்புதல், மாநில ஒப்புதல் கிடைக்க ஆவண செய்தார்கள். இணை இயக்குனர் அன்புமணி அய்யா மற்றும் இந்து அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் பார்த்தீபன் உள்பட அனைவரின் ஆதரவினால் இன்று இந்த ஆலயம் கும்பாபிசேகம் நடந்து முடிந்து விட்டது. அனைவருக்கு நன்றி என்று கூறி விட முடியாது. ஏன் என்றால் அனைவருக்கும் உரிமையான கோயில் இது.
இந்தஆலயத்தின் வரலாற்றை தினத்தந்தியில் எழுதும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அந்த சமயத்தில் பல லட்சம் பக்தர்களை தேடி நமது கோயில் வரலாறு போய் சேர்ந்தது. அதுவும் எனக்கு பெருமை.
தென் தில்லை என்றும், தென் திருவரங்கம் என்றும் போற்றப்படும் செய்துங்கநல்லூர் சித்தர்கள் வாழும் ஆலயம் என உணர்த்து வண்ணம் பல அற்புதங்கள் நடந்தது வருகிறது. இந்த கோயிலில் கால்கோள் விழாவின் போதுசெங்கோல் மடம் கலந்து கொண்டு நாள் செய்தார்கள். அந்த சமயத்தில் பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவில் சர்ப்பம் ஒன்று அமர்ந்து ஆசிர்வதித்தது. அந்த பதஞ்சலி முனிவரே இங்கு வந்து ஆசிர் வதித்தது போல பக்தர்கள் உணர்ந்தனர். கும்பாபிசேக ஆசியுரையில் செங்கோல் மட ஆதினம் இந்த சம்பவத்தினை பக்தர்களிடம் கூறி மகிழ்ந்தார்.
8.06.2025 அன்று பல இடங்களில் கும்பாபிசேகம் நடந்தது. ஆனாலும் செங்கோல் மட ஆதினம் செய்துங்கநல்லூர் வருகை தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அறங்காவலர் குரு மாரியப்பன், அர்ச்சகர் முத்துராமன், வர்ணனையாளர் பாரதி கண்ணன் மற்றும் என்னையும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். எனக்கு அந்த கூட்டத்தில் பேச வாய்ப்பும் தந்தார்கள். இதை விட என் வாழ்வில் வேறென்ன வேண்டும். வாழ்வில் ஒரு நாளாவது செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் ஆலயத்துக்கு வாருங்கள். சிவபெருமானின் அருளாசி பெற்று செல்லுங்கள்.
இனி பொதிகை மலையில் வன விலங்குகளுக்கு இடையே வாழ்ந்து வரும் 110 வயது பாட்டி குறித்து காணலாம்.
( நதி வற்றாமல் ஓடும்)


