தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு, இன்று அதிகாலை 4 மணிக்கே கோயிலின் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, மங்கல நிகழ்வாக கோபூஜை நடத்தப்பட்டது. பின்னர், சுவாமி மற்றும் அம்பாளுக்குப் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் திருமேனிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
புதிய ஆண்டின் முதல் நாளில் இறைவனைத் தரிசிக்க அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழா ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இதேபோல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டுத் தூத்துக்குடியில் உள்ள அனைத்து ஆன்மீகத் தலங்களும் விழாக்கோலம் பூண்டிருந்தன. தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், சிதம்பர நகர் விநாயகர் கோயில், சக்தி விநாயகர் கோயில், ஆனந்த விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.


