தாமிரபரணி ஆற்றில் பல்வேறு ரகசியங்களில் வி.கே.புரம் ஆலையும் ஒரு ரகசியம்தான். நதி மலையை விட்டு கீழே இறங்கியவுடன் நதி இரண்டு பிரிவாகப் பிரிகிறது. பின் மீண்டும் ஒன்றாக இணையும் இடத்தில் தான் மில்லிற்கு செல்வதற்கு போடப்பட்ட இரும்புப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த இரும்பு பாலமே பல வரலாறுகளை சுமந்துகொண்டுத்தான் நிற்கிறது.
இந்த இரும்புப் பாலம் சுமார் 150 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தைப் பொறுத்தவரை 100 வருடந்தான் தாங்கும் சக்தி கொண்டது. அதன் பிறகு இதை பயன்படுத்தகூடாது. வேறு பாலம் தான் கட்ட வேண்டுமென்று பிரிட்டிஷ் காரர்கள் எழுதி வைத்து விட்டு சென்று விட்டனர். இதனால் 100 வருடம் முடிந்தவுடன் பல போராட்டத்திற்குப் பிறகு நமது அரசு ஒரு சிமெண்டு பாலத்தைக் கட்ட முயற்சி செய்தது. அதன் பின் பழைய இரும்பு பாலம் அருகிலேயே அந்தப் பாலத்தினைக் கட்டியுள்ளனர்.
புதிய பாலம் கட்டி முடிக்கப் பட்டவுடன் பழைய பாலத்தில் உள்ள போல்ட்டுகளைக் கழட்டி பாலத்தை அப்புறப்படுத்தி விடலாம் என்று நினைத்த பொறியாளர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. போல்டைக் கழட்டவே முடியவில்லை. வெல்டிங் இயந்திரம் மூலமாகத் துண்டாக வெட்டி எடுத்து விடலாம் என்று நினைத்தால் அதுவும் முடியவில்லை. இறுதியில் வெடி வைத்துத் தான் தகர்க்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது வெடி வைத்து உடைத்தால் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாலமும் உடைந்து விடும் என்ற விலை ஏற்பட்டது. எனவே அந்தப் பாலத்தினை உடைக்கும் திட்டத்தினைக் கைவிட்டனர். இதனால் தற்சமயம் 150 ஆண்டுகளை கடந்த இந்த இரும்பு பாலம் தாமிரபரணி ஆற்றில் மில் ரோட்டில் நினைவுச் சின்னமாக உள்ளது. இந்த தகவலையெல்லாம் நான் என்னுடைய தலைத்தாமிரபரணி என்னும் நூலில் எழுதியுள்ளேன். அந்த தகவலை கூறிவிட்டு, அந்த மில்லை பற்றி கூடுதல் தகவல் கிடைத்திருக்கிறது அதையும் உங்களிடம் கூறலாம் என நினைககிறேன்.
இந்த பாலத்தின் வழியாகத்தான் ஹார்வி மில்லுக்கு செல்ல வேண்டும். ஹார்வி என்னும் பிரிட்டிஷ் காரரால் கட்டப்பட்ட காரணத்தால் Ôஹார்வி மில்Õ என்று அழைக்கப்படுகிறது. இந்த மில் குறித்து மேல சிவந்திபுரத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பிராங்கிளின் செல்வராஜ் கூறிய தகவலை எனது தலைத்தாமிரபரணி நூலில் குறிப்பிட்டுள்ளேன். அவர் என்ன கூறினார் என பார்ப்போம்.
இந்த மில் இருக்கும் இடம் சமுத்திரவல்லி நாடார் என்பவருக்குச் சொந்தமானது. புலவன் பட்டியில் பனையேறும் தொழில் செய்து கொண்டிருந்தார் சமுத்திரவல்லி நாடார். இவருக்கு இந்தப் பகுதியில் மிக அதிகமான இடம் இருந்தது. இவரிடமிருந்து இந்த மில்லை உருவாக்க பிரிட்டிஷ் காரர்கள் இடங்களை வாங்கிக் கொண்டனர். ஆரம்ப கால கட்டத்தில் இந்த இரும்பு பாலமெல்லாம் கிடையாது.
தாமிரபரணியைக் கடக்கப் படகு மூலம்தான் பஞ்சை கொண்டு செல்வார்கள். இந்தப் பஞ்சுகளைக் கொண்டு வரவே அம்பை ரயில்வே தண்டவாளம் மில் குடோனுக்குள்ளேயே சென்றுவிடும். ரயிலில் வரும் பருத்தி மூடைகள் குடோனுககுள் கொண்டு செல்லப்பட்டு, அங்கே இறக்கி விடுவார்கள். (தற்சமயம் இந்தத் தண்டவாளம் துண்டிக்கப்பட்டு விட்டது. அதை நாம் அம்பையில் இருந்து வி.கே.புரம் செல்லும் பாதையில் இரயில்வே கேட்டை கடந்தவுடன் இடது புறம் பார்த்துக்கொண்டு சென்றால் சுற்றுப்புறச்சுவரையட்டி காணலாம்)
குடோனில் இருந்து மாட்டு வண்டி மூலம் பஞ்சு வி.கே.புரம் கொண்டு வரப்பட்டு அதன் பிறகு படகு மூலம் மில்லிற்கு கொண்டு செல்வர். படகு சேவை மிகக் கடினமாக உள்ளது என்று தான் இரும்பு பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் கம்பீரத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். இடையில் ஒரே ஒரு தூண் போடப்பட்டு அதன் மேல் இந்த இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
வி.கே.புரத்தில் இயங்கும் ஹார்வி மில் தண்ணீர் மூலம் ஏற்படும் விசையைக் கொண்டு இயங்கும் மில். இதற்காக பாவநாசம் மேல் அணையிலிருந்து தனியாக பைப் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்தத் தண்ணீரின் விசையில் தான் எந்திரங்கள் இயங்குகிறது. இங்கு 7 ஆயிரம் பேர் வேலை பார்த்து வந்தனர். தற்சமயம் 1500 -க்குள் குறைந்து விட்டனர். (இது 2003-ம் வருடக் கணக்கு)
இங்கு பிளிச்சிங், டையிங், நூற்கண்டு, பெரியநூல், உள்படப் பல வகைகளில் உற்பத்தியாகிறது. முன்பு இந்த மில்லில் இருந்து வரும் கழிவு நீர் ஆற்றில் கலக்கப்பட்டது. இதற்கு இந்தப் பகுதியில் உள்ள மக்கள் மூலம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. எனவே லாரி மூலம் வெளியிடத்திற்கு இந்தக் கழிவு நீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த மில் சுமார் 75 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த மில்லில் வேலை செய்பவர்கள் இங்கேயே குடியேறிவிட்டனர். அதற்கு காரணம் நல்ல சுகாதாரம், குடிநீர், மற்றும் வேலை வாய்ப்பு. இதனால் இப்பகுதியில் ஜனத்தொகை பெருக ஆரம்பித்தது.
புலவன்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் மில்லில் கேஷியராக வேலை பார்த்தார். அவருக்குச் சொந்தமான 10 ஏக்கர் தோப்பை பிரிட்டிஷ் அரசு வாங்கியது. அந்தத் தோப்பில் தொழிலாளர் வசிக்க ஒரு குடியிருப்பை ஏற்படுத்தியது. இதற்கு Ôகேஸ் கீப்பர் தோப்புÕ என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்தக் கிராமம் இப்போதும் அதே பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கிறது. என்று என்னிடம் கூறினார்.
இந்த மில் குறித்து பணிபுரிந்து ஓய்வு பெற்ற புலவன்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கூறிய தகவலையும் என்னுடைய தலைத்தாமிரபரணியில் குறிப்பிட்டு இருந்தேன்.
முதலில் மில் ஆரம்பித்த காலத்தில் மேலணை கட்டப்படவில்லை. ஆகவே தண்ணீருக்காக பிரிட்ஷ்காரர்கள் காரையாறு ஆற்றில் குளம் ஒன்றைத் தயார் செய்தனர். அங்கிருந்து தண்ணீரை மில்லிற்கு கொண்டு வந்தனர். அந்தத் தண்ணீரின் அழுத்தம் மூலம் தான் மில் ஓட ஆரம்பித்தது. மில் ஓடும் போது Ôவாட்டர்Õ மூலம் ஓடிய காரணத்தால் Ôவாட்டர் மில்Õ என்றழைக்கப்பட்டது.
பின் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திற்குப் பின் நமது ஆட்சி வந்த போது இந்த மில் விரிவுபடுத்தப்பட்டது. இங்கு வீவிங் மில் (தறி மில்) ஓட்ட 2 ஆயிரம் ஏக்கரில் இடம் தேர்ந்தெடுக்கபட்டது. அதில் அண்டர் கிரவுன்ட் தயாரிக்கப்பட்டு 1000 வாட் மூலம் தறி ஓடும் இடமாக மாற்றினார்கள். இந்த மில் தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய தறி ஓடும் மில் ஆகும். இதற்காக 1960&ல் தூண்களே இல்லாத ராட்சத செட் போடப்பட்டது. இந்த மில்லில் அதிக பேருக்கு வேலை கொடுக்கவேண்டும் என்பதற்காகக் கழிவுநீரைத் தாமிரபரணியில் கலக்கத் தமிழக அரசு ஒத்துக்கொண்டது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால், ரவிவர்மன் எம்.எல்.ஏ.காலத்தில் அந்தத் தண்ணீரை ஆற்றில் கலக்காமல் இருக்கத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த மில் ஆசியாவிலேயே மிகப் பெரிய மில்லாக இருக்கும் காரணத்தினால் அகஸ்தியர் பட்டி என்னும் இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைத்தனர். இதில் வெளிநாட்டு விஞ்ஞானிகள் மற்றும் இந்த மில்லிற்கு காரணகர்த்தாக்கள் வந்து இறங்கினர். இவர்கள் மில்லைப் பார்த்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின் நாளடைவில் இந்த மில்லின் உற்பத்தி குறையக் குறைய வெளிநாட்டினர் வரத்தும் குறைந்தது. ஆகவே ஹெலிகாப்டர் வந்து செல்வதும் குறைந்தது. தற்போதும் அந்த ஹெலிகாப்டர் தளம் உள்ளது. இந்த மில்லை வைத்துத் தான் விக்கிரமசிங்புரம் மிகப்பெரிய தொழில் நகரமாக மாறியது. பழமையான இந்த நகரத்தில் புதுமையும் சேர்ந்து கொள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக் கொண்டனர். தங்கள் குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்தனர் என்று புலவன் பட்டி ஆறுமுகம் என்னிடம் கூறினார்.
இந்த ஹார்வி மில் குறித்து மேலும் பல தகவல் எனக்கு பிற்காலத்தில் தெரியவந்தது. முனைவர் பழ.கோமதிநாயகம் ஆங்கிலத்தில் எழுதி தமிழில் எம். பாண்டியராஜன் மொழிபெயர்த்த தாமிரபருணி சமூக பொருளியல் மாற்றங்கள் என்ற நூலில் மேலும் பல தகவல்கள் கிடைத்தது. அந்த தகவல்கள் குறித்து நாம் இனி காணலாம்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழும் மக்கள், கிழக்கிந்திய கம்பெனி காலத்திலிருந்தே எத்தகைய தொழில் முயற்சியையும் ஒருபோதும் தொடங்கியதில்லை. 1869 இல் அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் நேப்பியர் பிரபு திருநெல்வேலி வருகை தந்தார். தாமிரபரணியை பார்வையிட்டார். இங்கு பஞ்சாலை செயல்படுவதற்கான இயங்கு சக்தியாக தாமிரபரணி தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு திட்டத்தைத் தெரிவித்தார். அந்த கால கட்டத்தில் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தின் சாகுபடிப் பரப்பில் ஐந்தில் ஒரு பங்கில் பருத்தி பயிரிடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பாபநாசம் அருவிக்கும் கோடை மேலழகியன் அணைக்கு அருகேயுள்ள கோயிலுக்கும் இடையேயுள்ள ஓர் இடத்தை கண்டார். இந்த இடத்தில் கிடைக்கக்கூடிய தண்ணீர், எல்லாக் காலங்களிலும் பாசனத்துக்கும் பஞ்சாலைக்கும் போதுமானதாக இருக்கும் என அவர் கருதினார். அதே ஆண்டில், இந்தத் திட்டத்தை அறிவியல் ரீதியில் ஆய்வு செல்வதற்காக, பிரெஞ்சு பொறியாளர் எம்.தூவல் என்பவரை அரசு மூலம் அனுப்பி வைத்தார். வந்தவர் கோடை மேலழகியன் அணைக்குச் சற்றுக் கீழே ஓரிடத்தை அவர் தேர்ந்தெடுத்தார். இந்த இடத்தில் கிடைக்கக்கூடிய தண்ணீரில் இருந்து எடுக்ககூடிய தண்ணீர் அழுத்தம் மில் ஓடுவதற்கு போதுமானது. என முடிவு செய்தார். இந்த மில் மூலமாக 35 சதவீத லாபத்தையும் தரும் என்று அவர் மதிப்பிட்டார். தூவலின் அறிக்கையை மெட்ராஸ் வர்த்தக சபைக்கு அரசு அனுப்பியது. ஆனால், இந்தத் திட்டம் சாத்தியமானதல்ல என வர்த்தக சபை கருதியதால் கைவிடப்பட்டது. இந்த தகவலை மாவட்ட ஆட்சி தலைவர் எச். ஆர். பேட் என்பவர் தான் 1915 ஆம் ஆண்டு வெளியிட்ட நூலில் எழுதியுள்ளார்.
1883 இல் பிராங்க் ஹார்வி என்ற பொறியாளர் இங்கு வருகை தந்தார். இந்த நேரத்தில் தான் இந்த மாவட்டத்தில் இருந்த ஆங்கிலேயே பஞ்சு வணிகருக்கு நீராற்றலைப் பயன்படுத்திக் கொள்ள முன்னதைவிடவும் நடைமுறைச் சாத்தியமுள்ள மற்றொரு யோசனை தோன்றியது. மலையடிவாரத்திலேயே ஆலையன்றைக் கட்டுவது என்றும் பாபநாசம் அருவிக்கு மேலேயே தண்ணீரைத் திருப்பிவிடுவதன் மூலம் கிடைக்கும் முழு ஆற்றலையும் பயன்படுத்திக்கொள்வது என்பதுதான் ஹார்வியின் திட்டம். தண்ணீரை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள, 1885 இல் அரசின் அனுமதி கிடைத்தது. ‘தி டின்னவேலி மில்ஸ் கம்பெனி’ என்ற பெயரில் முதலில் கம்பெனி ஒன்று உருவாக்கப்பட்டது. விக்கிரமசிங்கபுரத்தில் ஆற்றின் வலதுகரையில் சற்றுத் தள்ளி ஆலையன்று கட்டப்பட்டது. அருவிக்கு மேலே ஒரு கால்வாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, அங்கிருந்து இரும்புக் குழாய் வழி தொழிற்சாலைக்குக் கொண்டுவரப்பட்டது. ஆலையால் எடுக்கப்படும் தண்ணீரின் அளவு, ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் ஆற்றில் கடந்து செல்லும் தண்ணீரின் அளவில் நிர்ணயிக்கப்பட்டதொரு விகிதத்தைவிட அதிகமாக இருக்கக்கூடாதென அரசு ஒரு நிபந்தனை விதித்தது. தாமிரபரணி தண்ணீரைச் சார்ந்து உருவான முதல் தொழிற் சாலை இதுதான். இதன் தொடர்ச்சியாக, 1888 இல் தூத்துக்குடியில் ‘கோரல் மில்’ என்ற பெயரில் மற்றொரு ஆலையை ஹார்வி நிறுவினார். பின்னர், இவ்விரு ஆலைகளும் ‘ஏ அன்ட் எஃப் ஹார்னி மில்ஸ்’ என்று அழைக்கப்பட்டது.
(பொருநை ரகசியங்களை தேடி பயணிப்போம்)


