கலைத் துறையையும் அரசியலையும் பிரிக்க முடியாது எனத் திரைப்பட நடிகர் காளிவெங்கட் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் 1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறைகளுக்குச் சென்று பார்வையிட்டு, கேக் வெட்டி இனிப்புகள் வழங்கித் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் பிரதான நிகழ்ச்சி நடைபெற்றது. இக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
இப் பள்ளியில் வெவ்வேறு காலகட்டங்களில் பயின்ற முன்னாள் மாணவர்களான நீதிபதி சங்கரலிங்கம், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கா.கருணாநிதி, பேரூராட்சி துணைத் தலைவர் அ.சுப்பிரமணியன், நடிகர் காளிவெங்கட் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் தங்களது பள்ளிப் பருவத் தோழர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.
நிகழ்வின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் காளிவெங்கட், இப் பள்ளியில் படித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். தான் திரைத்துறையில் இருப்பதால் வெளி உலகிற்குத் தெரிவதாகவும், தனுடன் பயின்ற பல தோழர்கள் நீதிபதியாகவும், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளிலும் பொறுப்பு வகித்து வருவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், இப் பள்ளியில் இயங்கும் கலை இலக்கிய மன்றத்தின் மூலம் தனக்குக் கிடைத்த கைத்தட்டல்களே திரைத்துறைக்குச் செல்வதற்கான முதன்மை உந்துசக்தியாக அமைந்தது என்றார். கலைத் துறையையும் அரசியலையும் எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், தமிழக முதல்வர்களாகப் பொறுப்பேற்றவர்களில் பெரும்பாலானோர் கலைத் துறையிலிருந்து வந்தவர்களே என்பதைச் சுட்டிக்காட்டினார்.


