ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக முதல் கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து 7 மாத காலமாக நடந்து வருகிறது.
இந்த அகழாய்வு பணியில் 3 பகுதிகளில் 32 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. அந்த குழிகளில் இருந்து 3000 ஆண்டுகள் முதல் 2500 ஆண்டுகள் வரையிலான 62 மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள், மணிகள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளது. மேலும் கடந்த அகழாய்வு பணியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 2 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 3 இடங்களில் ஒரு இடம் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் நடந்து வருகிறது. கடந்த 1902 ம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்த இடத்தின் அருகே இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்த இடத்தின் அருகில் நடந்து வரும் அகழாய்வில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பெரிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. அதனைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட கலையங்கள் மற்றும் பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமுக்கள் தாழியில் இருந்து நெல் உமிகளும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அருகே இரும்பு பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரும்பு பொருள் மண்வெட்டி என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். எனவே 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் விவசாயத்தில் செழித்து விளங்கியுள்ளான் என்பதை இந்த ஆய்வு மூலம் தெரிய வருகிறது.
இந்த நிலையில் அந்த பெரிய முதுமக்கள் தாழியில் இருந்து நெல் உமிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைய உள்ள இடத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட வருகை தந்தார். அவர் அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தார். திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அருண்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வுகள் குறித்தும், அருங்காட்சியம் அமைய உள்ள இடங்கள் குறித்தும் விளக்கமளித்தனர். தொடர்ந்து மண்வெட்டி கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை பார்வையிட்டனர்.
இதில் ஆய்வாளர் யத்திஸ்குமார்,முத்துக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் வடிவு, ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆதிச்சநல்லூர் சங்கர் கணேஷ், புதுக்குடி பாண்டிபெருமாள், தெற்கு காரசேரி கந்தசுப்பு, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ், ஆய்வு மாணவர்கள் குமரேசன், மணிகண்டன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


