பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.3 இலட்சத்து 10,000 மற்றும் புகார்தாரரின் கடன் நிலுவைத் தொகைகளை பொதுத்துறை வங்கி தள்ளுபடி செய்ய வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
திருநெல்வேலியைச் சார்ந்த காவல்துறை துணை ஆய்வாளர் மூர்த்தி மந்திரம் என்பவர் தூத்துக்குடியிலுள்ள பொதுத்துறை வங்கியிடம் வீட்டுக்கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கும் பொழுது இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுப்பதற்காக பணம் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் உடல் நலம் சரியில்லாமல் மூர்த்தி மந்திரம் இறந்து விட்டார்.
இதற்கான இழப்பீட்டு தொகையைத் தருவதோடு கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென அவரது மனைவி ரோகிணி வங்கியிடம் கேட்டுள்ளார். ஆனால் வங்கி சரியான காரணங்களை கூறாமல் இவற்றைத் தர மறுத்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் புகார்தாரரின் கடன் நிலுவைத் தொகைகளை வங்கி தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு ரூபாய் 3,00,000 மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆகியவற்றை இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 மூ வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.


