
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அளித்த பேட்டியில் “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும் உறுதியாக இருந்த பெண்களை பாராட்டுகிறேன்.
இந்த தீர்ப்பு மக்களிடையே, பெண்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த ரகசியம் காத்த சிபிஐ மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள். இந்த தீர்ப்பின் மூலம் குற்றச்செயல்களை புரிபவர்களுக்கும், துணை போவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தும். இந்த தீர்ப்பின் மூலம் பாலியல் குற்றங்கள் குறையும்.
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்பது போல, இந்த குற்றச்செயல் குறித்து புகார் மனு அளித்தபோது அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் வழக்குப் பதிவு செய்யவில்லை. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தான் கடுமையான சட்டப் போராட்டங்களை நடத்தி வழக்குப் பதிவு செய்தார். அதுபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு தமிழக முதல்வர் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்றார்.