அசோக் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் 12 டிசம்பர் 1981இல் பிறந்தவர். இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.நடுத்தர குடும்பத்தில் ஆர்.பாலகிருஷ்ணன் மற்றும் ராதா ஆகியோருக்குப் பிறந்த அசோக்கின் மூத்த சகோதரர் அருண் ஆவார். இள வயதில் அசோக் மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பையில் வளர்ந்தார். அசோக், வித்யா விஹார் பாத்திமா உயர்நிலைப்பள்ளியிலும், மும்பையின் முலுந்து பகுதியில் உள்ள வாணி வித்யாலயாவிலும் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் சமூகவியல், உளவியல் மற்றும் ஹிந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டங்கள் பெற்றார்.
தென்னிந்தியாவில் உள்ள தமிழ்த் திரைப்படங்களில் முதன்மைக் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். 2007இல் வெளியான ஆர்.டி.நேசன் இயக்கிய முருகா என்ற திரைப்படம் இவரது முதல் படமாக இருந்தது. அதன் பிறகு கனகு இயக்கிய பிடிச்சிருக்கு திரைப்படம் 2008 பொங்கலுக்கு வெளியானது. இவர் லால் ஜோஸ் இயக்கிய முல்லா என்ற மலையாளப் படத்தில் ஒரு பாடலுக்கு கேமியோ செய்துள்ளார். ராஜன் மாதவ் இயக்கும் உலா திரைப்படம் தற்போது இவரது வசம் உள்ளது. இப்படத்தில் சலீம் என்ற கதாப்பாத்திரத்தில் வில்லனாகத் தோன்றுகின்றார். இவர் நடித்து 2015இல் பிரியமுடன் பிரியா என்ற பெயரில் தமிழ்-தெலுங்கு ஆகிய இரு மொழிப்படம் திரில்லர் படமாக வெளிவந்தது. கனிகபுரம் சந்திப்பில் என்ற இலகுவான நகைச்சுவை, காதல் கலந்த காமெடித் திரைப்படமும், 2015இல் வெளிவந்தது. வானம் பார்த்த சீமையிலே என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் கரடுமுரடான கிராமத்து கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.


