தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அதிகாரிகள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அப்போதைய மாவட்ட ஆட்சியர், ஐ.ஜி., டி.ஐ.ஜி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் எப்போது கைவிடப்பட்டன என்பது குறித்த பரபரப்பான விளக்கத்தைத் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22.05.2018 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொதுத்துறைச் செயலாளர் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவில், “நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் 17 காவல் அதிகாரிகள் மற்றும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 3 வருவாய் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அப்போதைய டி.ஐ.ஜி. கபில்குமார், எஸ்.பி. மகேந்திரன் ஆகியோர் மீதான நடவடிக்கைகள் கடந்த 2024-ம் ஆண்டில் கைவிடப்பட்டன. மேலும், அப்போதைய ஐ.ஜி. சைலேந்திரபாபு ஓய்வு பெற்றுவிட்டதாலும், பிற அரசு அதிகாரிகள் மீதான துறைரீதியான நடவடிக்கைகள் கைவிடப்பட்டுவிட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி டிபேன், “நடவடிக்கை எடுக்காமல் தப்பிக்க முந்தைய அரசு மீது பழி சுமத்துகிறது” என வாதிட்டார். இதற்குப் பதிலளித்த அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், “யார் மீதும் பழி போடவில்லை; நடந்த உண்மைகளையே சுட்டிக்காட்டுகிறோம்” என்றார்.
இதையடுத்து, “அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ள நிலையில், அதனை மீண்டும் மறுபரிசீலனை செய்வீர்களா? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முன்வருமா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து அரசு தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


