சேரன் (திசம்பர் 12, 1965) என்பவர் தமிழ் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சொல்ல மறந்த கதை , தவமாய் தவமிருந்து , பொக்கிசம் (2009), முரண் (2011) போன்ற பல திரைப்பட ங்களிலும் கதாநாகனாக நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.
சேரன் மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் திசம்பர் 12, 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பாண்டியன் வெள்ளலூர் உள்ள திரையரங்கத்தில் படம் ஓட்டுநராக பணி புரிந்தார். தாயார் கமலா தன் கிராமத்திலே தொடக்க பள்ளி ஆசிரியை ஆக வேலை பார்த்தார்.
இவருடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சிறிய வயதில் நாடகங்களில் நடித்தும் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், சூன் 19, 2011 அன்று நடந்த தேர்தலில், போட்டியின்றித் தேர்வுச் செய்யப்பட்ட இரு துணைத்தலைவர்களில் சேரனும் ஒருவர் ஆவார்.
திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடர சென்னை வந்தார். ஆரம்பத்தில் அவர் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் என்ற திரைப்படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.


