சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற ராம்தங்கம் பாராட்டு
“கூவமாகும் தாமிரபரணி” என்ற இந்த தொடரை சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற ராம் தங்கம் படித்து பாராட்டியுள்ளார். மேலும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு இதுவரை தாமிரபரணியின் புகழை மட்டுமே பாடி வருபவர். தீடீரென்று கூவம் என்ற வார்த்தையை சேர்ந்து தாமிரபரணி புகழை எழுத்தாளர் மங்க செய்து விடக்கூடாது. ஆகவே தொடர்கதையின் தலைப்பை மட்டும் மாற்றுங்களேன் என கோரிக்கை விடுத்துள்ளார். இதே போல் கோரிக்கையை முனைவர் கந்த சுப்பு, எழுத்தாளரும் தொடர் ஆசிரியரின் சிஷ்யனுமான காமராசு செல்வன் உள்பட பல நண்பர்கள் கோரி வருகிறார்கள். ஆகவே தொடரில் தாமிரபரணியின் பெருமையையும் அவலநிலையயும் மாறி மாறி தெரிவித்தாலும் தொடர்கதையின் பெயரை மாற்றி விடலாம் என நினைக்கிறோம். இன்று முதல் “தாமிரபரணியே எங்கள் தாமிரபரணியே” என தலைப்பை மாற்றி விட்டோம். கருத்துக்களை தெரிவித்த ராம்தங்கம் உள்பட அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.& அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மற்றும் தம்பான்& பொறுப்பாசிரியர் தி நெல்லை டைம்ஸ்.
செல்வி எழுந்து அமர்ந்தாள். அவள் உடல் நிலை தேறியிருந்தது. காளிமுத்து அருகில் இருந்தாலே செல்விக்கு தெம்புத்தான்.
“என்னங்க இன்னைக்கு தாமிரபரணியை சுத்தப்படுத்த தம்பி ராஜா, தங்கச்சி நந்தினியும் கல்லணை ஸ்கூல் குழந்தைகளை கூட்டிட்டு வர்றதா சொன்னாவளே”.
“ஆமாம் மறந்தே போச்சே”.
சமூக சேவகர் ராஜாவும் நந்தினியும் தாமிரபரணியை காப்பாற்ற பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்கள். அவர்களது முயற்சிக்கு செல்வி காளிமுத்து நிறைய உதவுவார்கள். வயதான காலத்தில் இவர்களும் தங்களால் இயன்ற அளவுக்கு பழைய துணிகளை எடுத்து வெளியே போடுவார்கள். வெளியே கிடக்கும் கண்ணாடி பாட்டில்களை பொறுக்குவார்கள். மரம் நடவார்கள். அதற்கு தண்ணீர் எடுத்து ஊற்றுவார்கள்.
ஒரு மரத்தை வளர்த்தால் கூட போது, அது பலருக்கு உயிர் வாழ காத்து தரும் என்பது காளிமுத்து செல்வி தம்பதியினரின் வாதம்.
காளிமுத்து செல்வியிடம் சொன்னார்.
“இரண்டு பேரும் நல்லா பணி செஞ்சுகிட்டு இருக்காவ. அப்படியே ஒரு எட்டுபோய் என்ன எதுன்னு பாத்துட்டு வாரேன். நீ கொஞ்சம் உடம்பை பாத்துக்கா.
“ஏங்க நானும் வரட்டா?”
“ஏன் செல்வி உனக்கு உடம்பு ரொம்ப மோசமாக இருக்கே. நீ ரொம்ப கஷ்டப்பட்டு இருக்க . உடம்பை பாத்துக்க. நான் போயிட்டு வாரேன்” என்றார் காளிமுத்து.
ஆனால் செல்வி கேட்கவில்லை.
“ஏங்க இளைய தலைமுறையினர் நதியை காப்பாத்த ரொம்ப பாடு பட்டுக்கிட்டு இருக்காவ. நாமலும் போய் நின்னா அவுக உற்சாகமாக இருப்பாவ. என்னை தடுக்காதீங்க.” என்று சொன்னவர் சிறிது நேரத்தில் கிளம்பினார்.
இரண்டு பேரும் வெளியே வந்தார்கள்.
அவர்களின் டிவிஎஸ் 50யில் ஏறி சிந்துபூந்துறை நோக்கி கிளம்பினார்கள். அங்கே ராஜாவும், நந்தினியும் கல்லணை பள்ளி குழந்தைகளோடு தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணியை துவங்கி விட்டனர்.
***
1988 பொதிகைமலை காணிகள் குடியிருப்பு.
காளிமுத்து வேலை பார்த்தக்கொண்டிருந்த தொண்டு நிறுவனத்தில் தான் செல்வியும் வேலை பார்த்தார். அப்போது இரண்டு பேருக்கும் திருமணம் ஆக வில்லை.
பிளஸ் டூ படித்துவிட்டு சும்மா இருந்த செல்வியை காளிமுத்து , தான் வேலைப்பார்க்கும் தொண்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்டிருந்தார். அவர்கள் இருவரும் பாபநாசத்திற்கு வந்து அங்கிருந்து மேலே இருந்த காணிகள் குடியிருப்பில் தொண்டாற்றிக்கொண்டிருந்தார்கள்.
இந்த நேரத்தில் தான் சொரிமுத்து அய்யனாராக வேடமணிந்து மக்களை மரம் வெட்டக்கூடாது என அறிவுருத்தி விட்டு வந்திருந்தான் காளிமுத்து.
அதைதான் வனத்துறை அதிகாரி தாமோதரன் பாராட்டிக்கொண்டிருந்தார்.
“ஏடே காளி முத்து உனக்கு தெரியுமா? இந்த மலையில் உள்ள மரங்களை பாதுகாக்க காரணமாக இருந்ததே வெள்ளக்காரங்கத்தான்”.
“எப்படி அய்யா”.
“சொல்லுதேன் கேளு-”
தாமோதரன் பேசச்தொடங்கினார்.
“கி.பி. 1800&களில் திருநெல்வேலி சுற்றுவட்டார வனப்பகுதிகளில தேவியாறு, கோட்டமலையாறு, குளிராடையாறு, விருசடைகிடையாறு, சிற்றாறு, சம்புநதி, ராமநதி, கல்லாறு, கருணையாறு, கோரையாறு, சேர்வலாறு, காரையாறு, மணிமுத்தாறு, தாமிரபரணி ஆகிய ஆறுகள் ஓடியதாக வனத்துறைப் பதிவுகள் சொல்லுது. அந்த நதி இப்பவும் இருக்கு. தாமிரபரணி மூலம் அப்போது 1,69,549 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி செஞ்சாவுளாம். ஆனால் இப்போ 86,107 ஏக்கர் பாசனம் என பாதிக்குப் பாதி விளை நிலங்கள் குறைஞ்சு போச்சு”.
“அடேடே அப்போ விவசாயம் குறைஞ்சி கிட்ட வருது”. காளிமுத்து ஆச்சரியமாக கேட்டான்.
“ஆமாம் இதெல்லாம் அரசு ரிக்கார்டு. கி.பி. 1795&1800 காலகட்டத்தில்தான் தாமிரபரணி ஓடும் வனங்களில் சாதிக்காய், கிராம்பு, பட்டை ஆகியவை பயிரிட்டாவ. அவை வணிக ரீதியா லாபம் தராத காரணத்தால காபி, தேயிலை, கோக்கோ பயிரிட்டாக. காபி, தேயிலையைப் பயிரிட 730.63 ஏக்கர் காடுகள் தனியாருக்கு ரூ.9841க்கு அப்பவே வித்துப்புட்டாவ”.
தாமோதரன் சொன்னதை கேட்டு ஆச்சரியப்பட்டு போனான் காளிமுத்து. தொடர்ந்து பேச ஆரம்பித்தார் தாமோதரன்.
“ஊஞ்சல் கட்டி, ராமக்கல்தேரி, தெற்கு மலை, குளிராட்டி உள்ளிட்ட தனியார் பண்ணைத்தோட்டங்கள் இப்படித்தான் உருவாச்சு. இதுக்காக சோலைக்காடுகள் உள்ளிட்ட காடுகள் அழிச்சாவ. இதனால், தாமிரபரணியில நீர் வரத்துப் பாதியாக குறைஞ்சு போச்சு. இதே நிலைமை நீடிச்சா. தாமிரபரணி பாலைவனமா போயிரும். இந்த சமயத்தில் ஆங்கிலேய ஆட்சி காரவிய கொதிச்சு போயிட்டாவ”.
பெரும் மூச்சி விட்டப்படியே தொடர்ந்தார்.
“1842-&ஆம் ஆண்டு அன்றைய திருநெல்வேலி ஆட்சியர் ஹெச். மாண்ட்கோமமெரி மரங்களை வெட்டத் தடை விதிச்சார். அடிப்படைத் தேவைகளுக்காக மூங்கில் உள்ளிட்ட சிறு மரங்களை வெட்ட ஐந்து அணா உரிமை வரி விதிச்சாவ. தவிர, ஒரு கைவண்டிச் சுமைக்கு மூன்று பைசா, காளை வண்டிச் சுமைக்கு ஒரு அணா வரி என விதிச்சாரு. இதனால பணங்கொடுத்து காட்டுல விறகு சேகரிக்க வருகிற ஆளு குறைஞ்சாவ. இதுவும் மரம் வெட்டை தடுக்க ஆங்கிலேய அரசு எடுத்துக்கிட்ட ஒரு முயற்சி தான்”.
“வெள்ளைக்காரங்க நம்ம நாட்டை சூறையாடினாவன்னு கேள்வி பட்டு இருக்கேன். நீங்க வித்தியாசமா ஒரு வரலாற்றை சொல்லுதீயளே அய்யா” காளிமுத்து ஆச்சரியத்துடன் கேட்டான். தாமோதரன் சொன்னார். “உண்மைதான் ஆங்கிலேயர் மட்டும் பொதிகை மலையில மரம் வெட்ட தடை போடலைன்னா. இதுக்குள்ள என்னைக்கோ நம்ம ஊரு பாலைவனமாக மாறி இருக்கும்”.
“சரி அய்யா மேற்கொண்டு நதியை காப்பாற்ற அவுக எடுத்த நடவடிக்கையை சொல்லுங்கய்யா” காளிமுத்துவுடன் செல்வியும் ஆர்வமாக கேட்க ஆரம்பித்தாள்.
“மேற்குத் தொடர்ச்சி மலையில் தாமிரபரணி கரையோரம் விளைந்த காபி மற்றும் தேயிலை, அதன் சுவை காரணமாக உலகளவில் பேமஸ் ஆயிட்டு. நாட்டில மத்த பகுதியில விளைந்த காபி, தேயிலையை விட இதற்குக் கூடுதல் விலை கிடைச்சது. இதனால், தாமிரபரணியின் நதிமூலத்துக்கே ஆபத்து ஏற்பட்டுட்டு. 1865&இல் பல்வேறு ஐரோப்பியக் காபி நிறுவனங்கள் தாமிரபரணி நதி உற்பத்தியாகும் பூங்குளம், அதனைச் சுற்றியிருக்கும் கொடமாடி கன்னிக்கட்டி, களக்காடு வனப்பகுதிகளை விலைக்கு வாங்க முயற்சி பண்ணுனாவ. அவுக நோக்கம் அங்க உள்ள மரங்களை வெட்டிட்டு அதில தேயிலை தோட்டம் போடணுமுன்னு நினைச்சாவ”.
“நிதி நெருக்கடியில் இருந்த அரசு, அதைத் தீவிரமாகப் பரிசீலிச்சுச்சு, சேரன் மகாதேவியின் துணை ஆட்சியராக இருந்த மெக் கிரிகார் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிச்சார். அவரது உறுதியான நிலைப்பாடு காரணமாக அந்த திட்டத்தை நிறுத்துப்புட்டாரு. இதனால தாமிரபரணி நதிமூலம் பாதுகாக்கப்பட்டது. அதுக்கப்புறம் வந்த இங்கீலிஷ்காரங்க விடாம பொதிகை மலை காட்டை காப்பாத்த அரணா இருந்தாக”
“அப்புறம் கேப்டன் பெட்டோம் மேற்பார்வையில் எரிபொருள் தேவைகளுக்காகச் சமவெளிகளில் சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. காடுகளைப் பாதுகாக்க வனத்துறையில் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. 1866&இல் திருநெல்வேலி ஆட்சியர் ஆர்.கே.பக்கிள் துரை பொறுப்பேற்றாரு. இவரு மலையில் இருக்கும் அனைத்துக் காடுகளையும் வனத்துறையின் சிறப்புப் பிரிவின் கீழ கொண்டுவந்தாரு. முதல்முறையாக மாவட்ட வன அதிகாரி பதவி உருவாக்கப்பட்டுச்சி. கேப்டன் ஃபுல்லர்டன் அதற்கு அதிகாரியா நியமனம் செய்யப்பட்டாரு. பக்கிளின் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தனியார் சிலர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக வந்துச்சு. இதனால் சிங்கம்பட்டி, சொக்கம்பட்டி, சிவகிரி, வைரவ குளம், புதுக்கோட்டை, திருமலைநாயக்கன் ஆகிய ஜமீன்களின் கட்டுப்பாட்டில் இருந்த காடுகளை மீட்க முடியவில்லை. ஆனாலும் பக்கிள் துரை விடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தாரு”,
“ஆகா அந்த காலத்திலே மிகப்பெரிய போராளியா பக்கிள் இருந்து இருப்பார் போல” காளிமுத்து ஆச்சரியப்பட்டான்.
“ஆமாம். பக்கிள் காடுகளை ஆய்வு செய்து, அவற்றைச் சோலைக் காடுகள், புல்வெளிக்காடுகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கப்பட்ட காப்புக் காடுகளாக வரையறுத்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் 559.19 சதுர மைல் காடுகளில் 286.81 சதுர மைல் காடுகளைப் பாதுகாக்கப்பட்ட காப்புக் காடுகளாக அறிவித்தார். அவற்றில் நுழையக் கட்டுப்பாடுகள் விதிச்சாரு. அது மட்மில்லாமல ஆத்துல மணல் அள்ளுவது, ஆக்கிரமிப்பு செய்வது, அசுத்தம் செய்வது போன்றவற்றிற்கு தடை விதிச்சார்”.
“அடேடே இப்போ நாம செய்ற காரியத்தை அன்னைக்கே இந்த வெள்ளைக்£ரன் செஞ்சு இருக்காரே” செல்வி ஆர்வத்துடன் கேட்டாள்.
“ஆனால் அவர் செயலுக்கு ஒரு புறம் சோதனை இருந்துச்சு. மெட்ராஸ் மாகாண அரசின் ஆதரவுடன் வருவாயைப் பெருக்குவதற்காகக் காடுகள் அழிக்கப்பட்டு, காபி, தேயிலைத் தோட்டங்கள் பெருகின. தேக்கு உள்ளிட்ட பெரும் மரங்கள் வெட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தனர். இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார் பக்கிள். தனது அதிகாரத்துக்கு உட்பட்ட வனத்தில் மரங்களை வெட்ட அரசுக்கே அனுமதி கிடையாது என்று உத்திரவிட்டார். மனுசன் பெரும் போராட்டம் நடத்தினாரு. 1867&ஆம் ஆண்டு செப்டம்பர் 30&ஆம் தேதி அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “காடுகளை அழிப்பது தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் தாமிரபரணியில் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட, பார்க்க முடியாது” என்று கண்டிப்புடன் எழுதினார். பக்கிளைப் பின்பற்றி மெட்ராஸ் மாகாணத்தின் பல மாவட்டங்களின் காடுகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. மக்கள், பக்கிளைப் போற்றி புகழ்ந்தனர். தங்கள் குழந்தைகளுக்குப் ‘பக்கிள்துரை’ என்று பெயரிட்டார்கள். இதனால், இன்றைக்கும் திருநெல்வேலி, தூத்துக்குடி ஊர்களில் ‘பக்கிள்துரை’ பெயர் கொண்ட பெரியவர்களைப் பார்க்கலாம்”.
“பொறவு இந்த மாரி மனுசனுக்கு நாம கோயில் கட்டி கும்பிடனும்”. செல்வி சிலாகித்து பேசினாள்.
“1882&இல் மெட்ராஸ் காடுகள் சட்டம் இயற்றப்பட்டது. அப்போது தாமிரபரணியைப் பார்வையிட்ட வனத்துறை ஐ.ஜி.பிராண்டிஸ் ‘தாமிரபரணி நதியின் பாதுகாப்பே இலட்சக்கணக்கான விவசாயிகளின் பாதுகாப்பு’ என்று குறிப்பு எழுதினார். 1887&இல் மாவட்ட வன அதிகாரி பிரேசியர் என்பவர் தாமிரபரணியைச் சார்ந்த ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளைப் பாதுகாக்கத் திட்டங்களை வகுத்தார். பக்கிளுக்குப் பின் வந்த ஆட்சியர்களும், மாவட்ட வன அதிகாரிகளும் நதியைப் பாதுகாக்கத் தொடர் முயற்சிகளை எடுத்தார்கள். 1928&இல் அரசாங்கம் தனது வருவாய்க்காக ஒரு ஏக்கர் காட்டில் மூன்று மரங்களுக்கு மேல் வெட்டக் கூடாது என்று புதிய விதிமுறை விதிக்கப்பட்டது.”
“ஆங்கிலேய அரசு நம்ம நதியை காப்பாத்த என்னா பாடு பட்டு இருக்காவ” காளிமுத்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டான். தாமோதரன் தொடர்ந்தார்.
“நாடு சுதந்திரம் அடைந்த பின்பு ஆங்கிலேய அதிகாரிகள் வழியிலேயே, இந்திய அதிகாரிகளும் காட்டையும் நதியையும் காக்கும் நடவடிக்கைகளைத் தொடந்தாவ. 1948-&இல் மெட்ராஸ் எஸ்டேட்ஸ் சட்டம் கொண்டு வரப்பட்டு, 1951&-52 & இல் ஜமீன்களின் கட்டுப்பாட்டிலிருந்த காடுகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. காடும், தாமிரபரணி நதியும் காப்பாற்றப்பட்டது. ஆனால், அடுத்த 30 ஆண்டுகளில் நதிக்கு திரும்பவும் சோதனை ஏற்பட்டது. ஆகவே தான் காடுகளை காப்பாற்ற மரங்களை வெட்டக்கூடாது என உங்களை போன்ற சமூக சேவகர்களை கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்” என்றார் வனத்துறை அதிகாரி தாமோதரன்.
“அய்யா. இப்போ மட்டுமில்லை. நம்ம தாமிரபரணியை காப்பாற்ற நீங்க எப்போ கூப்பிட்டாலும் நாங்க உடனே ஓடி வருவோம். எப்படியாவது இந்த நதி மக்களை காப்பாற்றும் நதியா உயிர்போட இருக்கணும். அதுக்கு நாங்க உதவியா இருப்போம்” என்றனர்.
காளிமுத்தும், செல்வியும் அவரிடம் இருந்து விடைப்பெற்று தாங்கள் தங்கிருந்த இடத்துக்கு சென்றார். அது காரையாறு அருகில் உள்ள காணிகள் குடியிருப்பு அவர்களோடுத்தான் இந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்தனர். அங்குள்ள ஒரு குடிசல் வீட்டில்தான் காளிமுத்து செல்வி மற்றும் நண்பர்கள் தங்கியிருந்தனர்.
காணி இன மக்கள் மிகவும் பாசக்காரர்களாக இருந்தார்கள். நதியையும் காட்டையும், அங்குள்ள மிருகங்களையும் மிகவும் சிறப்பாக கண்காணித்தார்கள்.
காணிகள் மலை அடிவாரத்தில் வாழும் பகுதி மக்களிடம் பண்ட மாற்று முறையில் கப்பங்கிழங்கு வகைகளைக் கொடுத்து மற்ற பயிர்களான பருப்பு, பூண்டு, அரிசி போன்ற பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். பண்டைய காலம் முழுவதுமே பண்டமாற்று முறைத்தான். இவர்கள் பணம் காசுகளை கையில் வாங்கி பழகியது கிடையாது. இவர்கள் தற்போது அரசு திட்டத்தினால் நிறையப் பயன்கள் பெற்று முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். வேட்டையாடுதல், தேன் எடுத்தல் போன்ற வேலைகளை அன்றாட வேலைகளாக செய்து வருகிறார்கள். இவர்கள் தோட்ட வேலைகளை விடாமல் செய்து வந்தனர். அவர்களின் பழைய பழக்க வழக்கங்கள் தற்போதும் அப்படியே உள்ளது. காணிகள் தங்களின் பெண்கள் வயதுக்கு வந்தவுடன் வீட்டு முற்றத்தில் ஒரு குடிசை கட்டி அதில் ஓலையை வேய்ந்து அந்தப் பெண்ணை அதில் குடியேற்றிவிடுவார்கள். சடங்கு விசேஷங்கள் எல்லாம் முடித்த பிறகுதான் குடிசையை எரித்து விட்டுத்தான் அந்தப் பெண்ணை வீட்டுக்குக் கூட்டி வருவார்கள்.
பொதிகை மலையில் முண்டந்துறையில் தான், புலிகள் வாழ்ந்து வருகிறது. இந்தப் புலிகள் மனிதர்களைக் கண்டு பயப்படுவதில்லை. இங்குக் காணிகளும் புலிகளைக் கண்டு பயப்படுவது இல்லை.
காணிகள் வேட்டையாட வில், அம்பு போன்ற கருவிகளைப் பயன்படுத்துவார்கள். துப்பாக்கி பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. காணிகளுக்கு மந்திரம், தந்திரம் நன்றாகத் தெரியும். பெரும்பாலும் வேட்டைக்கு இரவு நேரம் தான் செல்வார்கள். வேட்டைக்குச் சென்றால் 2 அல்லது 3 நாள் கழித்துத் தான் வீட்டுக்கு வருவார்கள். பகல் வேளையில் தேன் எடுக்கச் சென்று விடுவார்கள். தங்கள் வேட்டை மூலம் கிடைக்கும் பொருளைப் பணம் ஆக்குவதும் இல்லை. காணிகள் இனத்தவர் பெண்களை மணமுடிக்க ஆண்கள் தான் பணம்கொடுத்து முடிப்பார்கள்.
பணத்துக்குப் பதிலாகப் பண்டமாற்று மூலம் பொருள்களை வாங்கிக் கொள்வார்கள். இவர்கள் குடியிருந்து வரும் குடியிருப்புக்குள்ளே சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள் மட்டுமே நுழைய முடியும். எந்தக் காரணம் கொண்டும் ஆண்கள் நுழைய முடியாது. பிற்காலத்தில் வட்டிக்குப் பணம் பெற ஆரம்பித்த போது வெளி ஆண்கள் காணிகள் குடியிருப்பிற்கு வந்து வட்டியைப் பிரிக்க ஆரம்பித்தனர்.
பண்டமாற்று முறையில் வாழ்ந்த இந்தக் காணி மக்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படவே அவர்களுக்குப் பணம் மூலம் பொருள்கள் தேவைப்பட்டது. பின்பு பணத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டதால் வட்டிக்குப் பணம் வாங்கும் நிலை ஏற்பட்டது.
மலைக்கு கீழ் வாழும் மற்றவர்கள் காணிகளுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து வட்டி வசூல் பிரிக்க ஆரம்பித்தனர். இதனால் அவர்களுக்கு மனக்கஷ்டம் ஏற்பட்டது. பணம் என்றாலே பிரச்சினை வந்துவிடுமல்லவா? எனவே வட்டி பிரச்சினை பெரும் பிரச்சினையாகி விட்டது. வட்டியால் மக்கள் வாட்டி வதைக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் நிலமை பற்றி காளிமுத்து வேலை பார்த்த தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. எனவே காணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காளிமுத்து தலைமையில் தெருநாடகம் போட ஏற்பாடு செய்தனர்.
இரவு தோறும் காளிமுத்து, செல்வி குழுவினர் நாடகம் போடுவார்கள். இருவரும் அற்புதமாக நடிப்பார்கள். நாடகத்தைப் பார்த்த காணி குடியிருப்பைச் சேர்ந்த முதிய பெண் ஒருவர் காளிமுத்து கன்னத்தில் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். கந்து வட்டிக்காரர்கள் தொந்தரவு தாங்க முடியாமல் வேதனைப்படும் காணிகள் இனிமேல் வட்டிக்கு வாங்க மாட்டோம் என அவர்கள் முன்னிலையில் உறுதியும் அளித்தனர். நாடகக் குழு அந்த குடியிருப்பில் ராத்திரி தங்கியது.
மறுநாள் காலை காளிமுத்தும் செல்வியும் பல் துலக்குவதற்கு வேண்டிய பேஸ்ட், டவல் எடுத்துக் கொண்டு அந்த குடிசலின் பின்புறம் வந்தார். அங்குப் புலி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதை முதலில் இருவரும் கவனிக்க வில்லை. பயத்தில் இருவருக்கும் கையும் ஓடவில்லை. சத்தம் போடவும் பயம். அதே நேரம் யாரையும் அங்குக் காணவில்லை. புலியிடம் வசமாக மாட்டிக் கொண்டோம் எப்படித் தப்பிக்க என நினைத்த காளிமுத்து , செல்வியை ஒரு கையில் பிடித்தான். அடுத்த கட்டம் வீட்டுக்குள் நுழையக் கதவைத் திறக்க முயன்றான். ஆனால் கதவு அடைக்கப்பட்டு விட்டது. உள்ளே பெண் ஊழியர் ஒருவர் ஆடை மாற்ற கதவை உட்புறம் தாழ்ப்பாள் போட்டுகொண்டாள். காளிமுத்து அடுத்தகட்டம் என்ன செய்வது என்று நினைக்கும் போது புலி. அவரைப் பார்த்து விட்டது.
அடுத்துப் பாய்ந்து விடும் நிலையில். காளிமுத்து நரம்பு நாடிகள் எல்லாம் துடிக்க ஆரம்பித்துவிட்டது. அடுத்த கனம் உயிர் நின்று விடும் போல இருந்தது. செல்வி கண்ணை முடிக்கொண்டு காளிமுத்துவை அப்படியே கட்டி பிடித்துக்கொண்டார்.
வேர்த்து விறுவிறுத்துப் போன காளிமுத்து செத்தாலும் இரண்டு பேரும் சேர்ந்தே சவோம் என செல்வியை இறுக்கி கட்டிக்கொண்டார்.
ஒருவரை ஒருவர் அறியாமலேயே இருவரும் தன்னை மறந்து இறுக்க கட்டிப்பிடித்துக்கெர்ண்டு நின்றனர்.
அடுத்த கட்டம் புலி இவர்கள் மீது பாயத்தயாரானது.
(நதி கூவமாவதை தடுக்க ஓடுவோம்)


