தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் போக்குவரத்து நெரிசல் குறைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள் சங்கம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என வ.உ.சி. சந்தை ஐக்கிய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி வ.உ.சி. சந்தை ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் மகாசபைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் தலைவர் அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் மரகதராஜ் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சங்கத்தின் ஆண்டு அறிக்கை மற்றும் வரவு-செலவு கணக்குகள் ஒப்புக்கொள்ளப்பட்டு, சங்க வளர்ச்சி குறித்த பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பேசுகையில், “வளர்ந்து வரும் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நமது சந்தைப் பகுதியிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை நாமாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, ‘நம் தொழிலுக்கு நாமே பாதுகாப்பு’ என்ற அடிப்படையில் செயல்படுவோம்” என்று கூறினர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், சங்கத்தில் 70 வயதைக் கடந்த மூத்த உறுப்பினர்களுக்கு ‘உழைப்பின் சிகரம்’ விருதும், உறுப்பினர்களின் நலன் கருதி அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வணிகர்கள் சங்கப் பேரவை மாவட்டத் தலைவர் சோலையப்பராஜா, பொருளாளர் ஆனந்தகுமார் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மேலும் ஐக்கிய வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவர்கள் பட்டுராஜா, சண்முகராஜ், துணைச் செயலாளர்கள் காஷ்மீர், செல்வசேகர், உத்திரபாண்டி, கெளரவ ஆலோசகர்கள் செல்வக்குமார், சண்முகம், கதிரேசன், குருசாமி, ஜோசப் மற்றும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள், ஐக்கிய நாடார் சங்கச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட வியாபாரிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.


