ஆதிச்சநல்லூர் – தாமிரபரணியை சீர்அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும்
செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர்
டாக்டர் சுதா சேஷயன் அவர்களிடம் கோரிக்கை வைத்தோம்.
டாக்டர் சுதாசேஷயன் அவர்கள் சிறந்த மருத்துவர், சிறந்த எழுத்தாளர், சிறந்த வாசிப்பாளர். டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிய இவர் தற்போது செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தில் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். இவரை காண வேண்டும் என முயற்சி செய்தோம். இதற்கு அன்பு தம்பி ஊடகவியளாளர் கோபாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்தார். அம்மாவிடம் முன் அனுமதி பெற்று கோடம்பாக்கம் ஏ.வி.எம் ஸ்டுடியோ எதிரில் உள்ள சாஸ்திரா பல்கலைகழகத்தில் சந்தித்தோம். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஏன் என்றால் அவர் “பொருநையை போற்றுதோம்” கட்டுரையை தினமணியில் தொடர்ந்து எழுதும் போது பல இடங்களில் என் பெயரை குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். தாமிரபரணி பற்றி ஆங்கில நூல் ஒன்றை நெல்லை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த போது அதற்கு அணிந்துரை தந்து இருந்தார்கள். தமிழ் இந்து பத்திரிக்கையில் அவர் எழுதிய கட்டுரையில் சிறந்த தமிழக ஆன்மிக எழுத்தாளர்கள் பட்டியலில் எனது பெயரை இடம்பெற செய்திருந்தார்கள். அது மட்டுமில்லாமல் சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்கம் சார்பில் எனக்கு நெல்லை ரத்னா 2023 விருதை அம்மா தங்கள் திருக்கரங்களால் தான் வழங்கினார்கள். அதன் பிறகுஅம்மாவை சந்திக்க இயலவில்லை. தற்போது 2025 ஆம் ஆண்டுதான் அம்மாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
எனது “செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம்” நூலை அவர்களிடம் கொடுத்தேன். தோரண மலை பரம்பரை தர்மகர்த்தா செண்பகராமன் அய்யா தோரணமலை முருகன் பிரசாதம் மற்றும் காலண்டரை வழங்கினார்கள். சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்கத் தலைவர் சைமன் அவர்களும், செயலாளர் சங்கர் மணி அவர்களும் சங்கத்தின் காலண்டரை வழங்கினார்கள். எங்களை அறிமுகப்படுத்திய தம்பி ஊடகவியாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களும், சிஷ்யன் சுடலை மணி செல்வன் அவர்களும் எங்களுடன் இருந்தார்கள். ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் மற்றும் தாமிரபரணி சுத்தப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கிடு சம்பந்தமான விவரங்கள் குறித்து பேசினேன். தாமிரபரணி கரையில் உள்ள சித்தர்கள் குறித்தும், தாமிரபரணியில் கரையில் வாழ்ந்தவர்கள் குறித்தும் நிறைய பேசினோம். தாமிரபரணி கரையில் உள்ள ஒவ்வொரு ஊர்களை பற்றி அம்மா பட்டியிட்டார்கள். மேலச்செவல் அருகில் உள்ள தேசமாணிக்கம் குறித்து நிறைய பேசினோம். முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயிலுக்கும் அவரது உறவுகாரர்களுக்கும் உண்டான தொடர்புகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
ஆதிச்சநல்லூரில் இந்தியாவிலேயே முதல் முதலில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டது. ஆனால் முழுமை பெறவில்லை. அதுபோலவே அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. மத்திய நதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் அம்மா அடிக்கல் நாட்டினார்கள். அந்த பணியும் துவங்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது தாங்கள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களிடம் பேசவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
தாமிரபரணியை சீரமைக்க மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. ஆனால் இதுவரை இந்தியாவில் 57 நதிகளுக்கு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். 12 ராசிகளில் விருச்சிக ராசி நதியான தாமிரபரணி மகாபுஷ்கரத்தினை கொண்டாடிய நதி, தாங்களுக்கு இந்த நதியின் பெருமை நன்கு தெரியும். வற்றாத ஜீவ நதி. தற்போது சாக்கடையில் சிக்கி பரிதவிக்கிறது. எனவே நதியை காப்பாற்றி நர்மதை நதிபோல கரையை சீர்படுத்தி பரிக்கிராமா நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரினேன். நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்கள். எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. தமிழகத்தின் மிக முக்கிய ஆளுமையை சந்தித்த திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினோம்.
மிக்க நன்றி அம்மா விரைவில் ஆதிச்சநல்லூரும், தாமிரபரணியும் சிறப்படையும் என நம்புகிறோம். ஏற்பாடு செய்த தம்பி கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும், இணைப்பு பாலமாக அமைந்திருக்கும் சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்க தலைவர் சைமன், செயலாளர் சங்கர் மணி அவர்களுக்கும், தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் அவர்களுக்கும் நன்றி – அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு


