49. முத்து கிளி
தொடர் கதை – முத்தாலங்குறிச்சி காமராசு
முன்கதை சுருக்கம்
சந்திரன் முத்துகிளியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆனால் அது இயலாது என்கிறார்கள். அதற்கு காரணம் அவனது குடும்பத்தில் சாதி மாறி திருமணம் செய்தது என்கிறார் வாசு. உண்மையை புரிந்து கொள்ள சந்திரன் தனது பூர்வீகத்தினை தேடுகிறான். அதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதற்கிடையில் பனையில் இருந்து விழுந்து இறந்த லிங்க நாடாருக்கு ஏதாவது அரசு மூலம் நிதி உதவி கிடைக்குமா? என எதிர்பார்த்து வரதன் என்பவரை பார்க்க வந்தான். அவர் இறந்து விடவே அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் தவிக்கிறான். இதற்கிடையில் முத்துகிளி தனது அப்பா ரத்தினத்தினை நெஞ்சுவலி என 108ல் பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகிறாள்.
இனி.
49. பனை தொழிலை அழிய காரணமானவர்கள் யார்?
அடுத்த 15 நிமிடத்தில் ஐகிரவுண்டு சென்று விட்டான் சந்திரன். காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவசர சிகிச்சை வார்டுக்கு ஓடினான்.
உள்ளே சென்று டாக்டரை பார்த்தான்.
“டாக்டர் சார் பெரியவர் ஒருவர் நெஞ்சு வலியில துடிச்சுக்கிட்டு இருக்காரு. அவரை 108 இல்ல கொண்டு வாராங்க. அவருக்கு உடனே சிகிச்சை செய்ய ஆவண செய்யுங்க”.
அவனின் பரபரப்பை பார்த்த டாக்டர் “நர்ஸ்” என்று கத்தினார்.
நர்ஸ் பரபரப்பாக ஓடி வந்தார். இதய நோயாளிக்கு தேவையான சிகிச்சை செய்ய தயரானார்கள்.
அடுத்த நிமிடமே ஹாரன் அடித்தப்படி 108 வாகனம் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் வந்தது.
முதலில் முத்துகிளித்தான் இறங்கினாள்.
சந்திரனை பார்த்தவுடன் முகம் மலர்ந்தது.
“அய்யாவை பாருங்க எப்படி ஆகிட்டாவன்னு” முடிக்க முடியாமல் அழுகை முட்டியது.
“இனி நான் பார்த்துகிறேன்” என்று சந்திரன் 108 டிரைவருக்கு உதவி புரிய. இரண்டு பேரும் சேர்ந்து ஸ்டெச்சரை அப்படியே கீழே இறக்கினார்கள்.
108 ல் இருந்து நர்ஸ் இறங்க, இரண்டு ஊழியர்கள் தள்ளு வண்டி கொண்டு வர அதில் ஸ்டெச்சரை ஏற்றியப்படி ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தனர்.
ஒருதர், “ஏம்மா விவரம் தெரிஞ்ச ஆளு முகப்பில வெளிநோயாளி பகுதியில போய் சீட்டை பதிவு செய்யுங்க” என்றார்.
முத்துகிளி சீட்டு பதிய பரபரப்புடன் ஓடினாள்.
ரத்னம் உடன் சந்திரன் சென்றான். அவரை தூக்கி வைக்க, அவருக்கு வேண்டிய உதவி செய்ய , டாக்டர் சொல்லும் அறிவுறுத்தலை கேட்டு அதன் படி உதவி செய்ய என ஒவ்வொரு செயலையும் செய்து கொண்டிருந்தான்.
இ.சி.சி பார்த்தார்கள். “கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கு. உடனே அவரச சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லுங்கள்” என்றார் டாக்டர்.
அடுத்த நிமிடம் அவரை வண்டியில் வைத்து தள்ளியப்படியே அவசர வார்டுக்கு கொண்டு சென்றனர். இதற்குள் முத்துகிளியும் வந்து சேர்ந்தாள்.
ரத்னம் படுத்தப்படியே இருக்கிறார். அவரை ஊழியர் இழுத்து சென்றனர். அவரின் இருபுறமும் சந்திரனும், முத்துகிளியும் ஸ்டெச்சரை பிடித்தப்படியே கண்ணீல் நீர் மல்க ஓடினர். ரத்னம் அவர்கள் இருவரையும் பார்த்தப்படியே இருந்தார். அவரது கண்களில் இருந்து நீர் வழிந்தது.
“நிச்சயம் பிழைக்க மாட்டோம். முத்துக்கிளிக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தாமல் போகிறோம்.இப்போது கூட இந்த சந்திரன் கையில் முத்துகிளியை பிடித்துக்கொடுத்து விடலாமா?” என அவருக்கு தோன்றியது.
அந்த வேதனையில் நெஞ்சு வலிமேலும் அதிகரித்தது.
அடுத்து மூன்றாவது நிமிடம் அவசர பிரிவுக்கு வந்தனர். உள்ளே அவரை அனுப்பிய உடன் மற்ற அனைவரையும் வெளியே அனுப்பி விட்டனர்.
ரத்தினத்தினை மட்டும் உள்ளே கொண்டு போனார்கள். முத்துகிளி கதறி அழுதாள்.
அவளுக்கு ஆறுதல் சொல்லவேண்டும். அவளை தாங்கி பிடிக்க வேண்டும் , அவளை கட்டிப்பிடித்து உனக்கு நான் இருக்கிறேன் என ஆறுதல் சொல்ல வேண்டும். தனது மார்போடு மார்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என சந்திரனுக்கு ஆசைத்தான். ஆனால் எப்படி? ஒரு தடவையாவது முத்துகிளி இவன் காதலை ஏற்று சிறு புன்முறுவல் பூத்திருந்தால் கூட அவளை தொட்டு ஆறுதல் சொல்லியிருக்கலாம். ஆனால் இதுவரை எங்கேயும் அவள் ஆறுதல் கூறும் படி நடந்து கொள்ளவே இல்லையே.
அவர்கள் இருவர் அருகில் ஒரு வயதான அம்மா வந்தார். “என்ன தாயி. கவலைப்படாதே உன் அப்பனுக்கு ஒண்ணும் செய்யாது. உன் குலதெய்வம் காப்பாத்தும்” என்று கூறியபடியே முத்துகிளியை கட்டிபிடித்து ஆறுதல் சொல்லி, அவள் தலை முடியை கோதி விட்டாள்.
சந்திரன் செய்ய வேண்டியது. அந்த அம்மாள் செய்கிறாள். சந்திரன் கற்பனை சட் டென்று நீங்கியது. அய்யாவுக்கு என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ என பயந்த படியே அந்த அறையின் உள்ளே பார்த்தப்படியே நின்றான்.
சிறிது நேரம் கழித்தது. “யப்பா ரத்தினம் கேஸ்க்கு அட்டன்டர் யாரு?” என்று ஊழியர் கேட்டார்.
“நாங்கத்தான்” என முத்துகிளியும் சந்திரனும் சென்றார்கள். “யாராவது ஒருத்தர் உள்ளே போங்க டாக்டர் கூப்பிடுகிறார்”.
“சரி”. என சந்திரன் உள்ளே பாய்ந்தான்.
அவனுக்கு முத்துகிளியை விட பயம். பாவம் ரத்தினம் எப்படி இருக்காரோ. தெரியலை?.
உள்ளே ஓடிப்போய் பார்த்தான். ரத்தினம் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.
டாக்டர், “தம்பி அய்யாவுக்கு இதயத்தில கொஞ்சம் பிரச்சனை இருக்கு. ஆஞ்சியோ எடுத்து பார்த்தாத்தான் முழுவதும் தெரியும். அதுவரைக்கு இவரை ஐசியூவில வைத்து தான் பார்க்கணும். ஒரு ஆளு மட்டும் வெளியே நில்லுங்க. அவருக்கு ஏதாவது தேவைன்னா கூப்பிடுவாங்க. ஆஞ்சியோ பண்ணணுமுன்னா முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் வேணும். அதை உடனே வீட்டில போய் எடுத்துட்டு வாங்க” என்றார்.
தொடர்ந்து சிப்பந்திகள் ரத்னம் அருகில் வந்தது. தீவிர சிகிச்சை பெட்டில் இருந்து அவரை மாற்றினார்கள்.
ரத்னத்துக்கு தனி பெட் கொடுக்கப்பட்டது. அவரை சுற்றி இரண்டு பயிற்சி டாக்டர்கள் வந்தனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் இடுபட்டனர். ஒரு பக்கம் குளுக்கோஸ் மருந்துடன்,அவரது கை நரம்பு வழியே ஏற்றப்பட்டது. ஒருவர் வந்து ரத்தம் டெஸ்ட் எடுத்தார்.
அவருடைய இதய துடிப்பை பார்க்க இயந்திரம் கொண்டு வைக்கப்பட்டது. மூச்சு பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஆக்சிசன் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான கருவிகள் அருகில் கொண்டு வைக்கப்பட்டது.
“அப்பாடா அய்யாவுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கிறது. இனி நிச்சயம் காப்பாற்றி விடுவார்கள்” என்ற நம்பிக்கை சந்திரனுக்கு வந்தது.
“சார் நீங்க வெளியே போய் நில்லுங்க”. என்றாள் நர்ஸ்.
வெளியே வந்தான்.
முத்துகிளி, “அய்யாவை நல்லா பாக்காங்களா?. எனக்கு பயமா இருக்கு. ஏங்க. நான் ஒன்னு சொன்னா கேப்பியளா?”
சந்திரன் முத்துகிளியை ஏரெடுத்து பார்த்தான்.” என்ன சொல்லப்போகிறாள்”
“வேணும்னா எத்தனை லட்சம் செலவானாலும் பராவாயில்லை. பிரைவேட் ஆஸ்பத்திரி கூட்டிட்டு போவுமா. என் நகையை பூராவும் தாரேன்”. என்று கூறிவிட்டு அழுதாள்.
சந்திரனுக்கு என்ன செய்யவதென்றே தெரியவில்லை.
ஏற்கனவே ஆறுதல் சொன்ன அந்த அம்மா மீண்டும் வந்தார்.அந்த அம்மாவை பார்க்கும் போது முத்துகிளிக்கு தங்களது குலதெய்வம் பத்ரகாளி போலவே தெரிந்தது.
“ஏம்மா என் இப்படி நினைக்க. இந்த ஆஸ்பத்திரியை அரசு ஆஸ்பத்திரியின்னு மட்டமா நினைக்கீயா? இன்னைக்கு நல்லபடியா இருதயத்துக்கு சிகிச்கை அளிக்க கூடிய இடம் நம்ம ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரித்தான். பெருந்தலைவர் காமராஜர் இந்த இடத்தில ஆஸ்பத்திரியை கட்டி தன் ஆட்சி காலத்தில திறந்து வைத்தார். கிட்டத்தட்ட 1953 ம் வருசம் இருக்குமுன்னு நினைக்கேன். அவரு எதிர்காலத்தில இந்த ஆஸ்பத்திரி மிகப்பெரிய ஆஸ்பத்திரியாக அமையணுமுன்னு பெரிய கிரவுண்டையே அரசு மருத்துவமனைக்கு ஏற்பாடு செய்துட்டு போயிருக்காரு. அதனாலத்தான் இதற்கு ஹைகிரவுண்ட்டுன்னு பேரு. அந்த புண்ணியவான் போட்ட எதிர்கால திட்ட கனவு இன்னைக்கு பலிச்சிட்டு. இன்னைக்கு மல்டி ஆஸ்பத்திரியை பிரதமர் மோடி நிறுவி ஜெயலலிதா காலத்தில திறந்தாவ. ஒரு காலத்தில ஆஞ்சியோ பண்ணணுமுன்னா நாம மதுரைக்குத்தான் போவணும். திருநெல்வேலியில பண்ணினா 5 லட்ச ரூபாயில இருந்து கூடுதல் பல லட்சம் செலவாகும். ஆனால் ஜெயலலிதா அம்மா முதலமைச்சராக இருக்கும் போது பல போராட்டத்துக்கு இடையிலே இருதய நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சையும் இலவசமாக செய்ய அதிநவீன கருவியெல்லாம் வாங்கி வச்சிருக்காங்க. அதை நம்ம மக்கள் பயன்படுத்த பல்வேறு ஏற்பாடுகளும் செஞ்சு இருக்காங்க. கலைஞர் கருணாநிதி காலத்தில வந்த முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மூலம் இன்னைக்கு மிக சுலபமா ஆஞ்சியோ , பைபாஸ் சிகிச்சை யெல்லாம் பண்ணுறாங்க. அந்த பணத்தை அரசு இன்சூரன்ஸ் மூலமாக செலுத்துறாங்க. இதனால் ஏழைகள் கூட இந்த உயரிய சிகிச்சையை பெற முடியுது. மாதம் பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க கூடிய மருந்து மாத்திரைகளை கூட அரசு தருது.அதுவும் வீடு தேடி வந்து தர்றாங்க. கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடர்ந்து வந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ், ஸ்டாலினுன்னு தொடர்ந்து கிட்டே இருக்கு. இதை விட்டுட்டு ஏன் பிரவேட்டுக்கு போக போறீங்க”. என்றார்.
மூவரும் அமைதியானார்கள்.
“டாக்டர் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் கார்டை கொண்டு வரச்சொல்றாரு. உடனே போய் அந்த அட்டையை எடுத்துட்டு வர ஏற்பாடு செய்யுங்க”. என்று கூறிய அந்த அம்மா அதன் பிறகு இவர்கள் பதில் எதுவையும் எதிர்பார்க்காமல் கிளம்பி சென்று விட்டார்.
முத்துகிளி, “இப்போ எப்படி ஊருக்கு போக, நான் வேணுமுன்னா ஒரு ஆட்டோவில போய் காப்பீட்டு திட்டம் கார்டை எடுத்துட்டு வாரேன். நீங்க அய்யாவை பாத்திகிடுவீயளா?”
“சரி. போயிட்டு வா” சந்திரன் சொன்னான்.
அந்த நேரத்தில் சொர்ணக்கிளி ஓடியே வந்தாள். “ஏய்யா தம்பி எப்படியிருக்கான்”. முத்துகிளியை கட்டி பிடித்துக்கொண்டு “ஓ”. என அழுதாள்.
இரண்டு பேரையும் பிரிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது சந்திரனுக்கு.
அப்போது “ஏப்பா ரத்னம் அட்டெட்டர் உள்ள வாங்கய்யா” என்றார்.
சந்திரன் ஓடினான்.
“யய்யா நான் என் தம்பியை பாக்கனுமே” என்றாள் சொர்ண கிளி.
“சரி. சித்தி நீங்கள் உள்ளே போய் பார்த்துட்டு வாங்க. அதோ கடைசியில ஒரு பெட் கிடக்குது பாருங்க. அதுல தான் அய்யா படுத்தக்கிடக்காவ”.
சொர்ணகிளி உள்ளே ஓடினாள்.
ரத்னத்தினை பார்த்தாள். “என்ன தம்பி என்ன ஆச்சி”.
கண்ணீர் மல்க பார்த்தார் ரத்னம்.
“எம்மா டாக்டர் சத்தம் போடுவார். இருதய நோயாளி அவருக்கிட்டே நிறைய பேசக்கூடாது. முதலில போய் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை எடுத்துட்டு வாங்க. அவருக்கு உடனே ஆஞ்சியோ பண்ணணும்”. பயிற்சி டாக்டர் கூறினார்.
சொர்ணகிளி ரத்னம் அருகில் வந்தாள். அவர் கையை பிடித்து ஆறுதல் சொன்னார். “யய்யா வெளியே தான் இருக்கோம். எதுனாலும் கூப்பிடு” என்றார்.
ரத்னம் தலையசைத்தார்.
வெளியே வந்தாள் சொர்ணகிளி.
“யய்யா முத்துகிளியை கூட்டிட்டு போய் உடனே முதலமைச்சர் காப்பிட்டு திட்டம் அட்டையை எடுத்துட்டு வாய்யா. அதுவரைக்கு நான் பார்த்துகிறேன்”. என்றாள் சொர்ணகிளி.
சந்திரன் முத்துகிளியை பார்த்தான்.
முத்துகிளி யோசித்தாள். “அத்தை அய்யாவை பாத்துகிடுவீயாளா?”
“பயப்படாத ஆஸ்பத்திரிக்கு சரியான நேரத்தில அய்யாவை கொண்டு வந்து சேத்திட்டீயளா. இம்ம நல்லா பாத்துக்கிடுவாவ. பயப்படாதே”. சொர்ணகிளி அவளின் கையை பிடித்தாள். என்தம்பி உன் கல்யாணத்தை பார்க்காம அவ்வளவு சுலபமா போய் சேர மாட்டான்.
மீண்டும் யோசித்தாள் முத்துகிளி.
“எம்மா நமக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் ரொம்ப அவரசமுன்னு டாக்டர் சொல்லூதாவ. கொஞ்ச காலத்துக்கு முன்னால தான் மாமாவை பறிகொடுத்துட்டோம். இப்போ தம்பியையும் பறி கொடுத்திட கூடாது. உடனே ஓடிப்போய் காப்பீட்டு திட்டத்தை எடுத்துட்டு வா. நான் பாத்துக்கிடுதேன்”. சொர்ணகிளி ஆதரவாய் முத்துகிளியிடம் சொன்னாள்.
“சரி”. முத்துகிளி நடக்க ஆரம்பித்தாள்.
“யய்யா சந்திரா. காருல பெட்ரோல் இருக்கா. காசு தரட்டுமா?” என்றாள் சொர்ணகிளி.
“வேண்டாம் சித்தி எல்லாமே இருக்கு. நாங்க போயிட்டு வந்துருதோம்”.
முத்துகிளி பின்னால் சந்திரன் நடைபோட்டான்.
சந்திரனுக்கு சந்தோசம். நம்மோடு தனியாக முத்துகிளி முதல் முதலில் வரப்போறா. ரொம்ப சந்தோசமாக இருந்தது. ஆனால் அவன் உற்சாகம் கானல் நீர் என்பது அவனுக்கு எங்கே தெரியப்போகிறது.
கார் அருகே வந்தார்கள். முன் பக்க கதவை திறந்து விட்டான். முத்துகிளி ஏற வில்லை. அவள் பின் பக்க கதவை திறந்து அதில் ஏறினாள்.
சந்திரன் எதிர்பார்த்தது தான். தீமிர் பிடித்தவள். சத்தம் காட்டாமல் காரில் ஏறினான். காரை மெயின் ரோட்டில் ஏற்றி வேகமாக கிராமத்தினை நோக்கி காரை செலுத்தினான்.
கார் ஓட்டம் பிடித்தது. சுமார் 30 நிமிடத்தில் கார் கிராமத்தினை வந்தடைந்தது.
ஒருடத்தில் கூட சலனமில்லாமல் இருந்தாள் முத்துகிளி. சந்திரன் பேச்சுகொடுத்தும் கூட பேச வில்லை. அவன் முன்னாள் உள்ள கண்ணாடி வழியாக அவள் முகத்தினை பார்க்கிறான். அவன் பார்க்கிறான் என்று தெரிந்தவுடன் கண்ணாடியில் இவள் முகம் தெரியாமல் இருக்கும் படி இடம் மாறி அமர்ந்து விடுகிறாள்.
சந்திரன் நினைத்து பார்க்கிறான். “நான் யார். மும்பையில் கிடந்த நான் எதுக்கு இங்கே வந்தேன். எதற்காக இவர்களுக்கு சேவகம் செய்கிறேன். என்னிடம் ஏன் இவள் பேச மாட்டேன்கிறாள். இவளுக்காக நான் ஏன் இந்த ஊரில் காத்து கிடக்கிறேன். பேசமாக திரும்பவும் மும்பை போய் நிம்மதியாக இருந்து விடலாமே. என நினைத்தாலும் மறுபுறம் நான் ஏன் முத்துகிளியை சந்தித்தேன். நான் ஏன் அவளை ஊருக்கு கூட்டிட்டு வந்தேன். இதுவரைக்கு அவள் குடும்பத்தில் நான் சேவகம் செய்யும் வாய்ப்பு ஏன் எனக்கு தொடர்ந்து வருகிறது. இன்னைக்கு அவள் அப்பா ஆஸ்பத்திரியில் சேர்க்கும் வரை எனக்கும் அவளுக்கு ஒரு தொடர்ப்பு இருப்பதால்தானே. இதை தான் இறைச்சக்தி என்போம். இதை மறுக்க முடியுமா? அல்லது இந்த நினைவுகளை மறக்கத்தான் முடியுமா?. நிச்சயம் என்னையும் முத்துகிளியையும் சேர்த்து வைக்கத்தான் இது போன்று காரியங்கள் நடக்கிறதோ?. பல எண்ணங்களுடன் சந்திரன் ஓட்டிய கார் கிராமத்தினை வந்து அடைந்தது.
வீட்டு வாசலில் கொண்டு வந்து முத்துகிளியை இறக்கினான். அவள் பரபரப்பாக வீட்டுக்குள் ஓடினாள். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டையுடன் திரும்பினாள். கையில் போர்வை, தட்டு,கிளாஸ், என சில பொருள்களை ஒரு பையில் வைத்து அதையும் எடுத்துக்கொண்டு வந்தாள்.
கிராமத்தில் உள்ளவர்கள் என்ன ஏது என்று இவளை கேட்குமுன்பே காரில் ஏறி விட்டாள். “காரை எடுங்க போவோம்” என்றாள். அப்போது அங்கே வாசு தாத்தா ஓடி வந்தார். காரை மறித்து, முன் சீட்டில் ஏறினார்.
சந்திரனுக்கு மிக கஷ்டமாக இருந்தது.
வரும் போது தான் முத்துகிளி தனியாக இருந்தும் பேச முடியவில்லை. போகும் போதாவது பேசலாம் என்று நினைத்திருந்தான். இப்போது நந்தி மாதிரி வாசு தாத்தா வந்து ஏறிக்கொண்டாரே.
“என்ன சந்திரா என்னை நீ எதிர் பார்க்கலை இல்லை”.
சந்திரன் அமைதியாக காரை எடுத்தான்.
ஒரு காலத்தில் இந்த தாத்தா நகைச்சுவை நாயகனாக தெரிந்தார் இன்றோ அவர் மிகவும் மோசமான வில்லன். அதுவும் எங்கள் காதலுக்கு வில்லன். இந்த மனுசன் தான் என் காதல் நிறைவேறாது என ஆதியில் இருந்தே சொல்லி வருகிறார். சாதியாம் சாதி. ஒரு காலத்தில் கீழ்ச்சாதி மேல் சாதி என இருந்தது. இப்போ சாதிக்குள்ளே சாதியாம்.
சந்திரனுக்கு மனது கனத்தது.
வாசு, முத்துகிளியை பார்த்தார்.” என்னம்மா அப்பா எப்படி இருக்கான்”.
“பராவாயில்லை தாத்தா”.
“நல்ல நேரத்தில கொண்டு போய் சேர்த்த. இல்லாட்டி இந்த நோய் மோசமான நோய். ஒரே அமுக்கு அமுக்கி விடும். ஏதோ உங்க அப்பன் செஞ்ச புண்ணியம் தப்பிச்சிட்டான்”.
“ஆமாம் தாத்தா”.
சந்திரன் எதிர்பார்த்தான். “சந்திரன் கரெட் டைம்முக்கு வந்து உதவினாவ” என சொல்லுவாள் முத்துகிளி என்று: அவள் சொல்லவே இல்லை.
நான் யார். எதுக்காக அடிக்கடி இவர்கள் வாழ்க்கைக்குள் வருகிறேன். இவர்கள் நம்மை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என தெரிந்தும் வருகிறோம். கரிவேப்பிலை போல நம்மை பயன்படுத்தி விட்டு தூக்கி போடுகிறார்கள் என நினைத்தும் நுழைகிறோம்.
“சே”. பெரும்மூச்சு விட்டான்.
“என்னடே பெரும் மூச்சு விடுறே”.
“ஒண்ணுமில்லை தாத்தா”.
சந்திரனை ஒரு மாதிரியாக பார்த்த வாசு கேட்டார்.
“நீ. மும்பை போவலையாடே”
“போயிருவேன் தாத்தா”.
கிராமத்தினை விட்டு வெளியே வந்து மெயின் ரோட்டில் ஏறியது கார். எரிச்சலுடன் கார் ஆக்சிலெட்டரை வேகமாக செலுத்தினான்.
20 நிமிடத்தில் கார் ஹைகிரவுண்டை வந்தடைந்தது.
காரை நிறுத்தும் முன்பே முத்துகிளி இறங்கி ஓடினாள். எமர்ஜென்சி வார்டு வெளியே நின்று கொண்டிருந்த சொர்ணகிளிடம் போய் “அத்தே அய்யா எப்படியிருக்காவ”. என்றாள்.
“ஒண்ணும் தெரியலை. இதுவரைக்கு என்னை கூப்பிடவில்லை” என்றாள்.
வாசுவும் சந்திரனும் வந்து நின்றார்கள்.
நேரங்கள் கடந்தது. மாலை சூரியனும் மறைய தொடங்கியது. ஆங்காங்கே விளக்கு எரிய துவங்கியது.
ஹைகிராவுண்ட் பழைய ஆஸ்பத்திரி அப்படியே பரபரப்பிலே இருந்தது. ஆனால் எமர்ஜென்சி வார்டில் உள்ள ரத்தினம் இடமிருந்து எந்த தகவலும் வரவில்லை.
அந்த இடத்துக்கு ஒரு பாட்டி வந்தார். சுமார் 80 வயதாவது இருக்கும். நடக்க முடியாமல் இருந்தாள். முகத்தில் அவள் வயது தெரிய சுறுக்கு விழுந்திருந்தது. நடக்கவே முடியாமல் மூச்சு வாங்கியபடியே அந்த பாட்டி சந்திரனை பார்த்தார். “யய்யா எனக்கு இட்லி வேணும் வாங்கிட்டு வருவீயா. மூனு இட்லியும் பாலும் வேணும். சாப்பிட்டுட்டுத்தான் மாத்திரை போடனும்”.
“சரி பாட்டி வாங்கிட்டு வாரேன்”.
“காசு வாங்கிட்டு போய்யா”.
“வேண்டாம் பாட்டி . வந்து வாங்கி கிடுதேன். நீங்க வார்டுக்கு போங்க. நான் அங்கேயே கொண்டு வாரேன் பாட்டி”.
பாட்டி நம்பிக்கை இல்லாமல்,அதே நேரம் அவனிடம் அழுத்தி பேசமுடியாமல் தள்ளாடியபடியே வார்டுக்கு சென்றார்.
“சித்தி உங்களுக்கு எதுவும் வேணுமா?”
“எங்களுக்கு ஒண்ணும் வேண்டாம். ரத்தினத்துக்குத்தான் எதுவும் கொடுக்கலாமான்னு கேட்கணும்”.
“இருங்க நான் ரத்தினத்தை பார்த்துட்டு , எதுவும் வேணுமான்னு கேட்டுட்டு வாரேன்”.
எமர்ஜென்சி வார்டுக்குள் நுழைந்தார் வாசு. அங்கிருந்த நர்ஸ்க்கு ஒரு கும்பிடுபோட்டு விட்டு உள்ளே சென்று. ரத்தினத்தினை பார்த்தார்.
“நல்லவேளை தப்பிச்சுட்டேன்டா வாசு. எம் புள்ளை கரெக்டா 108க்கு போன் பண்ணிட்டா. அந்த பையன் சந்திரன் கரெக்ட் நேரத்துக்கு இங்க வந்து என்னை கரெக்டா சேந்துட்டான். இரண்டு பேரும் சேர்ந்து என்ன காப்பாத்திட்டாவா”. சிரித்தார்.
“அவிய இரண்டுபேரும்” என்று சொன்ன சொல் வாசுவுக்கு பிடிக்கவில்லை. சந்திரனுக்கு யார் போன் பண்ணினா. இந்த முத்துகிளித்தான் பேசியிருப்பாளா? முத்துகிளி அப்போ சந்திரனை லவ் பண்ண ஆரமபிச்சிட்டாளா? வாசு முகம் இருள ஆரம்பித்தது.
“சரிடா நீ. ரெஸ்ட் எடு. ராத்திரி உங்கூட நான் இருக்கேன். பொம்பளையள வீட்டுக்கு அனுப்பிட்டு வாரேன். உனக்கு சாப்பிட எதுவும் வேணுமா?” என வாசு கேட்டார்.
“பசிக்குதுடா ஆனா. என்ன சாப்பிடன்னு தெரியலை”
“சரி நர்ஸ் கிட்டே கேட்கிறேன்”.
அங்கிருந்து நகர்ந்தார் வாசு. “சிஸ்டர் ரத்னத்துக்கு இட்லி வாங்கி கொடுக்கட்டா”.
“கொடுங்க. அப்படியே ராத்திரி சாப்பிட மாத்திரை தாரேன் அதையும் கொடுங்க. சுகருக்கு இன்சுலின் போடணும் அதையும் போட்டுறுதேன். சீக்கிரம் போய் இட்லி வாங்கிட்டு வாங்க. பால் வேணுமுன்னாலும் வாங்கி கொடுங்க”. என்றார்.
வாசு வெளியே வந்தார்.
“சந்திரா, அவனுக்கு இட்லி பால் வாங்கிட்டு வாடே”.
“இந்தாங்க பைசா என முத்துகிளி”. 500 ரூபாய் நோட்டை நீட்டினாள்.
“வேண்டாம் எங்கிட்டே இருக்கு” என்றார் சந்திரன்.
“பைசாவை வாங்கிக்கோடே. நீயும் சாப்பிட்டுக்கா, நானும் கூட வாறேன். நம்ம சாப்பாட்டை முடிப்போம். இவிய இரண்டு பேருக்கு வாங்கிட்டு வந்துருவோம். ராத்திரி நான் இங்கத்தான் தங்க போறேன். நீ இவளுவள வீட்டில கொண்டு போய் விட்டுறு. ஆஸ்பத்திரியில பொம்பளைய ராத்திரி தங்க வைக்க வேண்டாம்”. வாசு அழுத்தமாக சொன்னார். ஆனால் இவனை ஏ-ன் கிராமத்துக்கு முத்துகிளியோட அனுப்பணும் என எரிச்சலும் அடைந்தார்.
முத்துகிளியிடம் 500 ரூபாயை வாங்கி கொண்டு கிளம்பினான் சந்திரன்.
ஹைகிரவுண்டில் நல்ல ஹோட்டல் இருக்காது எனவே பாளை பஸ்ஸ்டாண்டில் போய் சரவணபவன் ஹோட்டலில் நல்ல இட்லி பால் எல்லாம் வாங்கினான். பாட்டிக்கும் தன் காசில் இட்லி பால் வாங்கி கொண்டான். தாத்தா வாசுவும் , அவனும் அங்கேயே சாப்பிட்டனர். தொடர்ந்து நேரத்தினை கடத்தாமல் ஓடியே வந்தான்.
இட்லி வந்தவுடன் முத்துகிளி அப்பாவுக்கு இட்லி கொடுக்க எமர்ஜென்சி வார்டுக்கு உள்ளே ஓடினாள்.
இரண்டு பார்சலை முத்துகிளிக்கும், சொர்ணகிளிக்கும் கொடுத்து விட்டு, தன்னை இட்லி வாங்கி வரச்சொன்ன பாட்டியை தேடி வார்டுக்கு போனான்.
அங்கே பாட்டி சோகமாக அமர்ந்து இருந்தார். இவன் இட்லியை வாங்கி கொண்டு வருவதை பார்த்து சந்தோசமாக சிரித்தாள்.
“சில நேரம் இட்லி வாங்க காசு கொடுப்பேன் அதை வாங்கி போறவங்க. அப்படியே போயிருவாங்க. இட்லி வாங்கிட்டே வரமாட்டாங்க. நான் பசியோட தண்ணீர் குடிச்சிட்டுத்தான் கிடப்பேன்”.பாட்டிக்கு சந்தோசம் பொங்கியது.
“நீ. நல்லா இருக்கனுமுய்யா. நீயூம் உன் பெண்டாட்டியும், உன் மாமனாரும் நல்லா இருக்கணும்”. என்றாள்.
சிரித்தான் சந்திரன், “என் பெண்டாட்டியா? யாரு பாட்டி?”
“அதான் அங்க ஒரு பொண்ணு உங்கூட நிக்கே அவத்தான்”.
சந்திரனுக்கு மேலும் சிரிப்பு வந்தது. “போங்கப்பாட்டி. அவளாவது என் பொண்டாட்டியாவது?”
“அப்போ அவங்க எல்லாம் யாரு?”.
“பாட்டி நீங்க எனக்கு யாரு?”. சந்திரன் பாட்டியை பார்த்து கேட்டான்.
அமைதியாக இருந்தார். “நீங்க எனக்கு எப்படியோ, அது போலத்தான் பாட்டி அவியளுக்கும் நான். ஏதோ கற்பனை பண்ணிட்டு அலையிறேன் பாட்டி. அது எங்கே நடக்க போவுது. பாதியில வந்தது பாதியிலே போயிட்டுன்னு சொல்லிட்டு போயிடலாம். ஆனால் என்னமோ தெரியலை பாட்டி இந்த சொந்தத்தை இடையில் விட்டுட்டு போக முடியலை”.
பாட்டிக்கு புரிந்தும் புரியாமலுமே இருந்தது.
பாட்டி பசியில் பார்சலை திறந்தார்.
“யய்யா பெரிய ஹோட்டலில வாங்கியிருக்க. நிறைய செலவாகியிருக்குமே.”
“அதைபத்தி கவலை பாடாதீங்க. நீங்க சாப்பிடுங்க”.
“நான் இதுவரைக்கும் இப்படி சாப்பாடு சாப்பிட்டதே இல்லையய்யா”
பாட்டிக்கு இரண்டு கண்ணீல் இருந்தும் கண்ணீர் வந்தது. பசி. இட்லியை வேகமாக சாப்பிட்டார். சந்திரன் கையை கழுவ அருகில் இருந்த கப்பை கொடுத்து கழுவச்சொன்னான். தண்ணீரை எடுத்து கொடுத்தான். இதற்கிடையில் நர்ஸ் கொடுத்த மத்திரையை பாட்டிக்கு கொடுத்தார்.
தான் கொண்டு வந்த பால் கவரை பிரித்து பால் ஊற்றி கொடுத்தான். “இந்த மாத்திரையை சாப்பிட்டுட்டு, பால் குடிங்க பாட்டி”.
“இந்த காலத்தில இப்படியரு பிள்ளையா. உங்க அப்பா அம்மா எங்கே இருக்காங்க”.
“யாரும் இல்லை பாட்டி. உங்களுக்கு”.
“எனக்கு யாரும் இல்லை. உன்னை மாதிரி ஆள்களை பார்த்த சந்தோசத்தோடு போய் சேர்ந்தா நல்லதுன்னு நினைக்கிறேன். ரொம்ப நாள் கழிச்சு உண்மையான பாசக்கார மனிதன் ஒருத்தனை பார்த்து இருக்கேன். சுற்றி இருக்க மோசமான ஆள்கள் மத்தியில வாழ்றதோடு சாகிறது மேல்”.
“பாட்டி படுங்க”.
“உங்க கிட்டே நான் பேசிக்கிட்டே இருக்கனும். குணமாகி உன் கூட நான் வரனுமுன்னு ஆசையா இருக்கு. ஆனா என் இருதய நோய் என்னை எங்கே வாழவிடப்போவுது”
“நிச்சயம் நீங்க குணமாவீங்க. என் கூட பேசுவீங்க.உங்களை நிறைய இடத்துக்கு நான் காரில் கூட்டிட்டு போவேன். சரியா”
பாட்டியை படுக்க வைத்தான். போர்வை ஆங்காங்கே கிழிந்து இருந்தது. அதை அவர் மீது மூடினான்.
பாட்டி, சந்திரன் கையை பிடித்தாள். “யய்யா எனக்கு பிள்ளை இல்லை. என் பிள்ளையா இங்க இருக்க தண்டியாவது என்னை அடிக்கடி பார்க்க வருவீயா?. என் பக்கத்தில கட்டில உட்கார்ந்து மாத்திரை எடுத்து தருவீயா?. இட்லி வாங்கி தந்து எனக்கு ஊட்டி விடுவீயா?”.
சரி. பாட்டி. சந்திரனை இறுக்கி பிடித்த பாட்டி கையை மெதுவாக எடுத்து, “படுத்திருங்க பாட்டி எதுவும் தேவையின்னா, சந்திரன்னு ஒரு சத்தம் கொடுங்க ஓடியே வந்திடுறேன்”.
“சரிய்யா”.
பாட்டி அவனது கையை விட வெளியே வந்தான். எமர்ஜென்சி வார்டுக்குள் சென்ற முத்துகிளி வரவில்லை.
சொர்ண கிளித்தான் சொன்னாள். “யய்யா ராத்திரி என் தம்பி பெட்டை விட்டு கீழே இறங்க கூடாதாம். அவன் வெளியே போக ஒண்ணுக்கு போக பிளாஸ்டிக்குல ஒரு டப்பா மாறி வெளியே மெடிக்கலுல வச்சி விக்காங்களாம். அதை வாங்கி வச்சுக்க”. என்றாள்
“சரி சித்தி” வெளியே வந்தான் சந்திரன்.
பிளாஸ்டிக்கில் அந்த டப்பாவை வாங்கி விட்டு, தனது காரில் இருந்த அருமையான போர்வை ஒன்றை எடுத்தான். மீண்டும் பாட்டியிடம் வந்தான். அவளின் கிழிந்த போர்வையை எடுத்து விட்டு தனது போர்வையை அவள் மீது போர்த்தினான்.
அந்த போர்வையை அணைத்து பிடித்துக்கொண்டாள் பாட்டி. “ரொம்ப சந்தோசமாக இருக்கு. இன்னைக்குத்தான் முதல் முதலில எனக்கு உதவி பண்ணுற ஜீவன் ஒருத்தனை பார்த்து இருக்கேன். இதுவரைக்கு என்னிடம் பணம் பறிக்கும் கும்பலை த்தான் பார்த்து இருக்கேன். உனக்கு ஒரு குறையும் வாராது. நீ. நல்லா இருப்பய்யா. நீ. நினைச்சது நடக்குமுய்யா”
பாட்டியை விட்டு பிரிந்து வந்தான்.
அதற்குள் முத்துகிளியும் வெளியே வந்து விட்டாள்.
வாசு சொன்னார். “சரி ராத்திரி பொம்பளைய இங்க இருக்க வேண்டாம். நீங்க ஊருக்கு போங்க நானும் சந்திரனும் பார்த்து கிறோம். இனிமே காலையில வாங்க”.
முத்துகிளி, சந்திரனிடம் வந்தாள். “அய்யாவை நல்லா பாத்துகிடுங்க எதும் அவசரமுன்னா போன் போடுங்க”.
சந்திரனுக்கு சந்தோசம் தன்னிடம் முத்துகிளி பேசுகிறாள். “சரி. நான் பார்த்துகிறேன்”. என்றான்.
வாசு தாத்தாவுக்கு எரிச்சலாய் இருந்தது. அவன் கிட்டே போய் என்ன குசுகுசுன்னு பேச்சு தேவையில்லாமல் என நினைத்தவர். முத்துகிளியை இனி இவன் காரில் அனுப்ப கூடாது என முடிவு செய்தார்.
“இங்க பாரு முத்துகிளி, வெளியே போய் ஒரு ஆட்டோ பிடிங்க. நீயும் உள் அத்தை சொர்ணகிளியும் வி.எம். சத்திரம் போங்க. அங்க நம்ம ஊரு கடைசி பஸ் வரும் ஏறிப்போங்க. சந்திரன் இங்க இருக்கட்டும். அவன் துணை இங்க தேவையிருக்கும். எதுக்கும் அவசரமாக கூப்பிடுவாங்க. அப்புறம் வயசான காலத்தில என்னால எதுவும் செய்ய முடியாது”. என்றார்.
“சரி தாத்தா நாங்க ஆட்டோவில போறோம்”. என்று கிளம்பினாள் முத்துகிளி தனது அத்தை சொர்ணகிளியுடன்.
“அப்போ ஆட்டோ வேணுமுன்னா பிடிச்சி தரவா” என்றான் சந்திரன்.
“நீ. இருடே நானே பிடிச்சி கொடுத்துட்டு வாறேன்”. வாசு முந்தினார்.
“தாத்தா பார்சல் இட்லி ரெண்டு பேருக்கும் இருக்கு. சாப்பிட்டு போக சொல்லுங்க”
“பஸ் போயிரும்டே. இரண்டு பேரும் ஊருல போய் சாப்பிடுவாவ”. என வாசு தடுத்து சந்திரனிடம் இருந்து இருவரையும் பிரித்து ஆஸ்பத்திரியை விட்டு வெளியே கூட்டிவந்தார்.
அதன் பின் ஆட்டோவில் ஊருக்கு அனுப்பி வைத்தார்.
சந்திரன் தங்களது சந்திப்பை வாசு பிரிக்கிறார் என நன்கு புரிந்து கொண்டான். ஆனாலும் எதுவும் பேசவில்லை. எப்போதையும் விட முத்துகிளி நம்மிடம் ஓரளவு நெருங்குகிறாள் என நம்பிக்கை பிறந்தது.
******
ஆஸ்பத்திரியில் தங்கி இருப்பவர்களை விட அவர்களை பார்க்க வந்தவர்கள் மிக அதிகமான இருந்தார்கள். அவர்கள் ஆங்காங்கே போர்வை விரித்து படுத்திருந்தனர். சிலர் தினசரி பேப்பர்களை விரித்து படுத்து இருந்தனர். கொசுக்கடி ஒரு புறம். எனவே கொசுவை விரட்ட தைலம் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்து பண்ட கதை பாடு கதைகளை பேசிக்கொண்டிருப்பார்கள்.
அதுபோலவே வாசு சந்திரன் மற்றும் சிலர் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் இருந்தார். தமிழ் இலக்கியம் படித்தவர். எதை பேசினாலும் சங்க இலக்கியத்தில் இருந்து உவமை கூறி பேசிக்கொண்டிருந்தார்.
அவரும் நாடார் தான். பனைத்தொழிலை பற்றி நிறைய பேசினார். சந்திரனுக்கு இதை கேட்க ஆர்வம் எனவே அவரிடம் சங்க இலக்கியத்தில் பனை தொழில் இருந்து இருக்குமா? என்றுகேட்டான்.
“சங்க காலத்துக்கு முன்னரே பனையிலிருந்து பதனீர் இறக்கியிருக்காங்கடே. பயினி என அதுக்கு பெயர் வைச்சிருக்காவ. அதிலிருந்து கருப்பட்டி தயார் பண்ணியிருக் காவ. அந்த காலத்தில உடலை மூலதனமா வச்சி பனையேறும் தொழிலாளி வாழ்க்கை நல்லதாண்டே இருந்திருக்கு”. என வாசு பெருமையாக எடுத்து விட்டார்.
“பொறவு ஏன் பனை தொழிலாளி இழிவா நடத்தப்பட்டாங்க” தாத்தா சந்திரன் கேட்டான்.
இப்போதுதான் ஓய்வு பெற்ற ஆசிரியர் அகஸ்தீஸ்வரன் பேச ஆரம்பித்தார்.
“உலகம் முழுவதும் மனிதர்கள் தானிய வகைகளையும் கைக்கு எட்டிய காய், பழங்களையும், கிழங்கு வகைகளையும் நேரடியாகவும் சமைத்தும் சாப்பிட்டுக் கொண்டிருந் த காலம் அது. உயரத்தில் ஒரு பனைமரம் பூக்குது. காய்க்குது, பழமா கீழே விழுது. இது என்னடா அதிசயமுன்னு நம்ம முன்னோர்கள் பார்தாங்க. சில பனை மரம் பூக்குது, தேனீக்களும் வண்டுகளும் சாப்பிட்டு மகிழ்ச்சியா இருக்கு. இதையெல்லாம் நம்ம முப்பாட்டன் – கவனிச்சிக்கிட்டே இருக்கான். பனை மேலே ஏறிப் பாக்கிறான். இந்தப் பனையின் பூக்கள் என்கிற பாளைகளை வாள் கொண்டு அரிந்து விட்டான். அப்போது சொட்டுச் சொட்டாகப் பதனீர் சுரப்பதை அதிசயமா பாக்கான். குடிச்சுப் பார்த்தா ரொம்ப சுவையா இருக்கு. அதை கலயத்தில் சேமிச்சான். காய்ச்சிப் பார்த்தால் கருப்பட்டிக் கிடைச்சுது. அதுவும் இனிப்பாக இருந்தது. தனக்கு போக அதை தர்மமாய் கொடுத்தான்.
அதே பதனீரை இறக்குவதற்க்குத் தாமதமானால் சளித்துப் போனது. அதில் கருப்பட்டி எதுவும் கிடைக்கவில்லை. எனவே என்ன செய்ய என்று யோசித்தான். சற்று சுண்ணாம்புத் தூளைத் தூவினான். 24 மணி நேரம் நல்ல நிலையில் இருந்தது. சளித்துப்போன பதனீரை கள் எனச் சிலர் குடித்து மகிழ்ந்தனர். பனையில் பாதுகாப்பாக ஏற, தேவையான தலைநார், முருக்குத்தட்டி , பாளையைப் பதப்படுத்த கடுப்பு , மென்மையாகச் சீவ கூரான அரிவாள், பதனீரை கீழே கொண்டுவர குடுவை என கருவிகளைச் செய்தான். இப்படியாக, விஞ்ஞானத் தொழில் நுட்பத்தை வேளாண்மையில் முதன்முதல் செயல்படுத்திய அறிவாளிகள் நம்ம பனையேறும் தொழிலாளிகள்தான்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் வாத்தியாரிடம் கதை கேட்க அருகில் வந்தனர்.
“தமிழ் மூவேந்தர்கள் காலத்தில் இவர்களது வாழ்வு சிறப்பாக இருந்தது. பதனீரையும் கள்ளையும் அரசர், புலவர் முதல் மக்களும் பயன்படுத்தினர். “தமிழ்நாட்டில் பனைமரத்திலிருந்து ஒரு பானம் எடுக்கிறார்கள், அது ஒயினை விடச் சிறப்பாக இருந்தது, ஐரோப்பிய மதுவகைகள் அங்கே தடை செய்யப்பட்டிருந்தன ” என மார்க்கோபோலோ எனும் கிரேக்கப் பயணி கி.பி. 13ஆம் நூற்றாண்டில் எழுதியுள்ளார் காலம் மாறியது. ஆரியர்கள், டில்லி சுல்தான்கள், விசயநகர நாயக்கர்கள், நவாபுகள், ஆஙகிலேயர்கள் என பல அன்னியர்கள் கையில் தமிழ்நாட்டின் ஆட்சியதிகாரம் போனது. மூவேந்தர்களின் முன்னணிப் படையிலிருந்த சான்றார்களுக்கு அரசு அந்நியமானது. தங்கள் உறவுகள் செய்த பனைத் தொழிலில் இணைந்தனர். அரசியல் காரணங்களுக்காக பனைத் தொழிலாளர்கள் கொடுமை களுக்கு ஆளானார்கள்.
Ôசெய்யும் தொழிலே தெய்வம்Õ என ஒரு பழமொழி தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால் செய்தத் தொழிலால் பிரித்துப் பார்க்கப்பட்டவர்கள் பனைத் தொழிலாளர்கள். உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள் என்றார் காரல் மார்க்சு ஆனால், மார்கசியம் பேசியவர்களும் இவர்களுக்காகப் பேச மறந்தார்கள். (கீஷீக்ஷீளீ வீs கீஷீக்ஷீsலீவீஜீ) வொர்க் இஸ் வொர்க் ஷிப் என ஆங்கிலேயர் சொல்கிறார்கள், ஆனால் இந்தியாவுக்கு வந்த ஆஙகிலேயர்கள் கீழ்த்தரமாக பதிவு செய்த ஒரு தொழில் உண்டென்றால் அது பனையேறும் தொழில்தான்.
மழை பெய்யும் நாட்களில் மீன் பிடிக்கச் செல்லமுடியாது. அந்நாட்களில் மீனவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு கொடுக்கிறது. மழை பெய்தால் பனை ஏற முடியாது; அவர்களது வாழ்வாதாரம் கெட்டுவிடுகிறது; இத் தொழிலாளர் களுக்கு அரசு உதவி எதுவும் செய்வதில்லை.
நெசவுத் தொழிலாளர்களுக்கு, பீடித்தொழிலாளர்களுக்கு, மீன்பிடித் தொழிலாளர்களுக்கு எல்லாம் அரசு மானியத்துடனும் இலவசமாகவும் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் உள்ளது. ஆனால் பனையேறும் தொழிலாளர்களை எந்த திட்டமும் இல்லை.
1963 முதல் 1968 வரை இந்திய அரசு தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது. அதன்படி தங்கத்தை மொத்தமாக வைத்திருப்பதும் 14 காரட் தரத்துக்கு மேல் நகை செய்வதும் தடை செய்யப்பட்டன. இதனால் தங்கநகை செய்யும் சிலர் வேலை இழந்தனர். இந்த நகைத் தொழிலாளர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் கல்வியிலும் வேலைகளிலும் தனி இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. 1900 முதல் ஆங்கிலேய அரசு கள்ளுக்கடைகளை நடத்தியது, பதனீரை கள்ளுக்கடைகளுக்குக் விற்க பனையேறும் தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப் பட்டார்கள். அவர்கள் கருப்பட்டி தயாரித்து விற்ற தொழில் கெட்டுப் போனது. போதைக்காக கள்ளுடன் பல வேதிப் பொருட்களைக் கலந்து பாரம்பரியமாகத் தயாரிக்கப்பட்ட கள்ளுக்குக் கெட்டப்பெரை உண்டாக்கினார்கள். 1937 முதல் கள்ளுக்கடைகளை சென்னை மாகாண அரசு மூடியது. அடுத்து 1972இல் திறந்து, 73இல் மூடப்பட்டது. மீண்டும் திறந்து 1977ஆம் ஆண்டு முதல் கள்ளுக்கடைகள் மூடப்பட்டன. இபோதெல்லாம் கள்ளுக்கடைகளுக்கு பதனீர் கொடுத்து தங்கள் கருப்பட்டித் தொழிலை இழந்த தொழிலாளர்கள் நிலை என்ன என்பது பற்றி அரசும் தொழிற்சங்கங்களும் கவலை கொள்ளவில்லை.
நாட்டில் நூல் நூற்றல், துணி நெய்தல். மீன்பிடித்தல் என எல்லாத் தொழில்களும் எந்திரமய மாக்கப்பட்டுவிட்டன. சாக்கடையில் அடைப்பெடுக்க, சாலை போட, கட்டடம் கட்ட என எல்லாவற்றுக்கும் எந்திரம் வந்துவிட்டது. ஆனால் பனை ஏற மட்டும் எந்திரம் இல்லை. இதுபற்றி, இடதுசாரிச் சிந்தனையாளர்கள் முதல் அரசு, நீதிமன்றம் என எவரும் வாய் திறப்பதில்லை.
பதநீர் உடலுக்கு நல்லது, பனங்கற்கண்டும் கருப்பட்டியும் பல நோய்களைத் தடுக்கும் எனும் பேச்சுகளுக்கு மட்டும் குறைவில்லை. பனையேற ஒருவர் தன் உடலையும் குடும்பத்தையும் பலி கொடுத்தால்தானே இவை கிடைக்கும்.
பனை மரங்கள் புயலைத் தாங்கும் வலு கொண்டவை, ஏரி குளக்கரைகளைப் பாதுகாக்கின்றன என்பதால் பனைமரம் நடுவதற்கு மூன்று கோடி ரூபாயை ஆட்சியாளர்கள் ஒதுக்கினர்.
ஆனால், பனைமரம் ஏறும் எந்திரம் கண்டுபிடிக்க ஒரு ஆராய்ச்சி நிலையம் நிறுவும் எண்ணம் வரவில்லை. இந்தப் பட்டையைப் பதனி குடிக்கப் பெரும்பாலும் பயன்படுத்துவது வழக்கம். இந்தப் பட்டையைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுவர். இது இன்றைய நாகரிக வாழ்வில் உருவாக்கப்படிருக்கும் பயன்படுத்தித் தூக்கி ஏறிதல்என்ற கருத்துருவை ஒத்த ஒன்றே. இன்றைய ய-கொண்டு வந்த பால் கவரை பிரித்து பால் ஊற்றி கொடுத்தான்.யூஸ் அண்ட் த்ரோவ் ( usமீ ணீஸீபீ tலீக்ஷீஷீuரீலீ) வுக்கான பொருட்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தியே உருவாக்கப்படுகின்றன. இவ்வாறான பயன்பாட்டினால் உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகள் பெருகி சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக மாறிவிடுகிறது.
நமது மரபில் இருந்து வந்த ஒலை பட்டைகளைத் தூக்கி எறிவதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித மாசும் ஏற்படுத் துவதில்லை. இன்று டாஸ்மாக் பார்களில் தினந்தோறும் பயன்படுத்தப்படுகிற லட்சக்கணக்கான பிளாஸ்டிக் டம்ளர்களினால் உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகளை நினைத்தால் தலை சுற்றுகிறது. அந்தக் குப்பைகளினால் ஏற்படுகிற சூழல் மாசுவால் உண்டாகும் கேட்டை எப்படி போக்குவது என்று வழி தெரியாமல் திணறும் நிலை தான் இருக்கிறது.
ஓலைப் பட்டையைப் பதனி குடிக்க மட்டும் பயன்படுத்தவில்லை. வயல் வேலைக்கு செல்பவர்கள் பாத்திரத்தில் கொண்டு செல்லும் உணவை சாப்பிட இந்த ஒலை பட்டையை பாத்திரமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். மேலும் கிராமங்களில் சுற்றுலா செல்வோரும் கூட்டமாக தோட்டங்களில் சமைத்து சாப்பிடுவோரும் இதையே பாத்திரமாக பயன்படுத்துவார்கள். இதில் சாப்பிடும் போது புது ஓலையின் மணமும் இணைந்து ஒரு திகட்டாத அருமையான சுவையத் தரும். அதிக உணவும் சாப்பிடத் தோன்றும். பட்டை சாதம் என்கிற சொல் வழக்கு கூட நம்மிடையே உண்டு.
இது போன்ற அனுபவங்களை எல்லாம் நாம் இன்று தொலைத்து நிற்கிறோம். மேலும் மீன் போன்ற பலவற்றையும் பொட்டலமாக பொதியவும் இந்த ஒலை பட்டையை பயன்படுத்தும் வழக்கமும் நம்மிடையே இருந்து வந்தது. இது போன்றவற்றுக்கு எல்லாம் இன்று பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி சூழல் கேட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். சுற்றுச்சுழலுக்கு எந்தவிதத்திலும் கேடும் விளைவிக்காத ஒரு வாழ்வு முறையினை நமது முன்னோர்கள் கடை பிடித்து வந்தனர். ஆனால் இன்று நாமோ”.
பெரும் மூச்சு விட்டார் ஆசிரியர் அகஸ்தீஸ்வரன்.
எல்லோருமே அமைதியாக கேட்டனர்.
அந்த சமயத்தில் எமர்ஜென்சி வார்டில் இருந்து நர்ஸ் ஒருவர் வெளியே வந்தார். “ரத்தினம் அட்டென்டர் யாரு?”
சந்திரன் எழுந்தான்.
“என்னங்க”.
“உடனே வாங்க” என்றார் நர்ஸ்.
எழுந்த சந்திரன் அவசர வார்டுக்குள் நுழையும் முன்பு அருகில் உள்ள வார்டை நோக்கினான்.
அங்கு ஒரு சிப்பந்தி ஒரு உடலை போர்வையில் போர்த்தியபடி வெளியே வந்து கொண்டிருந்தார்.
அந்த போர்வை சற்று முன்பு மூதாட்டி ஒருவரை சந்திரன் மூடிய போர்வை.
அப்படியென்றால்.
அதிர்ந்து நின்றான் சந்திரன்.
(முத்துகிளி தொடர்ந்து கூவுவாள்)


