காட்டலங்குளத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் 316-வது பிறந்தநாள் விழாவில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் காட்டலங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் அவரது 316-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுத் தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அரசு விழா நடைபெற்றது.இவ்விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா கலந்துகொண்டு, மணிமண்டபத்தில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்துத் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் கலந்துகொண்டு, மணிமண்டபத்தில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்துத் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தினார். அமைச்சருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கலந்துகொண்டு வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் அரசுத் துறை சார்ந்த பல்வேறு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


