மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் பட்டப் படிப்பு மேற்கொண்டு வரும் டெல்பின், ஜெகன் நிவாஸ் மற்றும் ஜெகன் ஆகிய மூன்று மாணவர்கள் நெல்லை நகரின் காட்சி மண்டபத்திற்கு அருகே ஒரு நடுகல்லைப் பார்த்துள்ளனர்.
இந்த நடுகல் திருஞானசம்பந்தர் கோயிலுக்கு எதிரே 100 மீட்டர் தொலைவில் சாவானயனார் தெரு உள்ளது. அந்தத் தெருவின் ஆரம்பத்தில் தெற்கு பார்த்தபடி ஒரு நடுகல் நடப்பட்டு உள்ளது. .
அந்த நடுகல்லில் கட்டுமஸ்தான உடலையும், துடிக்கும் மீசையும் உள்ள இரண்டு வீரர்கள் தங்கள் கழுத்தில் கத்தியால் குத்திக் கொள்ளுவது போல் சிலையாக வடிக்கப் பட்டிருந்துள்ளது. முதல் சிலை நான்கடி உயரமும் அடுத்து மூன்றடி உயரமும் இருக்கும்.
இந்த மாணவர்கள் பேராசிரியர்களான முருகன் மற்றும் மதிவாணன் ஆகியோரை அங்கு அழைத்துச் சென்றனர். இந்த நடுகல்லை ஆய்வு செய்த உதவிப் பேராசிரியர்கள் போருக்குச் செல்வதற்கு முன்பு ஒருவரைப் பலி கொடுப்பது வழக்கமாக இருந்தது. உயிரை மாய்த்துக் கொள்ளும் நபர் தன் கழுத்தைத் தானே அறுத்தோ அல்லது குத்திக் கொண்டோ உயிர் நிற்பார்கள். இப்படி உயிர் நீப்பதனை அரிகண்டம் என அழைக்கின்றனர் எனவும்; அரிகண்டத்திற்கு முன் அந்த வாலிபனை ஒரு போர்வீரர்போல் உடையணிவிந்து அழைத்து வருவார்கள் எனவும்; இந்தச் சிலை செதுக்கி சுமார் 350 ஆண்டுகள் கடந்திருக்கும் எனவும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன் இம்மாதிரியான நடுகல் ஒன்றைப் பழைய குற்றாலத்திற்கு அருகே உள்ள அங்கராயபுரத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மாணவியர்கள் கண்டுபிடித்தனர். இந்த நடுகல்லில் ஒரு வீரன் தன் கழுத்தில் கத்தியால் குத்திக் கொள்ளுவது போல் சிலை வடிக்கப்பட்ட இருந்தது. மேலும் இது வடக்கு நோக்கி நடப்பட்ட இருந்தது. ஆனால் நெல்லை நகரின் காட்சி மண் மண்டபத்திற்கு அருகே நடுக்கடல் தெற்கு நோக்கி நடப்பட்டிருந்தது. அங்கு வசிக்கும் மக்கள் இந்த நடுகல் வடக்கு நோக்கியே இருந்ததாகவும்; மேலும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்ததால் இந்த நடுகல்லை அகற்றி தெற்கு நோக்கி நட்டுவைத்தோம் எனக் கூறினார்கள்.
இந்த நடுகல் இருக்கும் இடத்திற்கு சாவானயனார் தெரு எனப் பெயரிட்டுள்ளனர். கடந்த 350 ஆண்டுகளில் சாகா நாயனார் என்ற பெயர் மருவிச் சாவானயனார் தெரு என அழைக்கப்படுகிறது.
இந்தச் சிலையில் இருக்கும் வீரர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டாலும் இவர்கள் இன்னும் இந்தப் பகுதியில் உயிர் வாழ்வதாக நினைத்துச் சாகா நாயனார் எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்தக் கல்வெட்டைக் கண்டறிந்த மூன்று மாணவர்களையும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவர் (பொறுப்பு) பேராசிரியர் சி. சுதாகர் மற்றும் துணைவேந்தர் சந்திரசேகர் ஆகியோர் பாராட்டினார்கள்.


