வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி பணியாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி அலுவலகம் முன்பாக இச் சிறப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்திற்குச் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தொழிற்சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், சுடலைமுத்து, தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர் சங்க தலைவர் ஆண்டோ கவுல்பர்ட், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகி பலவேசம் மற்றும் கனரா வங்கி தொழிற்சங்க நிர்வாகி செந்தில்குமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்களின் நலன் மற்றும் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் பணியை உடனடியாக மத்திய அரசு பிரகடனப்படுத்த வேண்டும். அரசின் ஒருதலைப்பட்சமான மற்றும் பாரபட்சமான செயல்பாடு சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
நிலுவையில் உள்ள வங்கி ஊழியர்களின் இதர கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் திரளாகக் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


