ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு மகா ருத்ர ஜெபம் மற்றும் யாக வழிபாடு தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நவகைலாய கோவில்களில் 6வது ஸ்தலமாக சிவகாமி அம்மாள் உடனாகிய கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
நவக்கிரகங்களில் சனி ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு மகா ருத்ரம் ஜெப மற்றும் யாக வழிபாடு இன்று தொடங்கியது.
இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை 6:30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. காலை 9 மணிக்கு மேல் ருத்ர ஜபம் ஆரம்பமாகியது. தொடர்ந்து யாக சாலையில் தீபாராதனை வழிபாடுகள், மந்திர ஜெபம், திருமுறை பாராயணம், பூர்ணாக்குதி நடைபெற்றது. டிசம்பர் 20ஆம் தேதி சனிப்பெயர்ச்சி தினத்தன்று பகல் 2 மணிக்கு சனி பெயர்ச்சிக்கான சங்கல்பமும் 2.30 மணிக்கு சனீஸ்வர ஹோமமும் நடைபெறுகிறது. இன்று தொடங்கிய மகா ருத்ர யாக வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


