சென்னையை புரட்டி போட்ட வெள்ளத்தில் பல்வேறு பிரிவினர் தங்கள் உயிரை துச்சமாக மதித்து மற்றவர்களை காப்பாற்றி வந்தனர். காவல்துறையினர், தீயணைப்பு படையினர், சமூக சேவர்கள், ஆளும் கட்சியினர், எதிர்கட்சியினர், உள்ளாட்சி அமைப்பினர், சினிமா நடிகர்கள் என பல் துறையினரும் தங்களால் இயன்ற உதவிகளை சென்னையில் செய்து வருகிறார்கள். பல்வேறு நபர்களின் செயல் நம்மை மனதுருக செய்கிறது. சிலர் டிக் டாக் செய்து இணைய தளத்தில் தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமாகி வருகிறார்கள்.ஆனாலும் மனதை உருக்கும் பலசம்பவங்களை செய்பவர்கள் ஏராளம். மனிதனிடம் மனிதம் உள்ளது என்பதை இந்த வெள்ளம் மீண்டும் நிருபித்து உள்ளது.

ஊடகங்களில் மற்றொரு கதாநாயகனாக சித்தரிக்கப்பட்ட ஒருவர் தான் தலைமை காவலர் தயாளன். காவல் துறையை சேர்ந்த ஒருவர் குழந்தையோடு தவித்த பெற்றோர்களையும் அவர்கள் உடமைகளையும் காப்பாற்றி, குழந்தையை தோளில் சுமந்து வந்த செய்தி ஊடகங்களில் பெரும் பெயரை சேர்த்திருக்கிறார். சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் தயாளன், தனது எல்கைக்கு உள்பட்ட மேட்டுகுப்பம் பகுதியில் இந்த சேவையை செய்து இருக்கிறார். வெள்ளத்தில் சென்னை மிதந்து கொண்டிருக்க குழந்தையை வெள்ளத்தில் காப்பாற்றி தோளில் தூக்கி கொண்டு வந்த மீசைக்கார போலிசார் புகைப்படம் அனைத்து பத்திரிக்கையிலும் ஊடகங்களிலும் வந்து மக்கள் மனதை கவர்ந்தது. அவருக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு சான்றிதழ் கொடுத்து கௌரவித்துள்ளார். இந்த மீசைகார காவல் நண்பர் யார்?

இவரை பற்றி விசாரித்த போது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா வல்லநாடு அருகே உள்ள சிவசுப்பிரமணிய புரத்தினை (மியகான்பள்ளி) சேர்ந்தவர் என அறியவந்தது. எனவே இவரை பற்றி மேலும் அறிய முயன்றோம். இவரது தந்தை இராஜேந்திரன் அவர்களும் காவல் துறையில் பணியாற்றியவர்தான். இவர் தலைமை காவலராக ஸ்ரீவைகுண்டம் மற்றும் செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் பணியாற்றியவர். இவரது தாயார் ஜெயலெட்சுமி. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல, இவர் சிறுவயதிலேயே விளையாட்டில் ஆர்வமாக இருந்தார். தயாளன் 2003 ஆம் ஆண்டு காவல் துறையில் போலிசாக பணியமர்த்தப்பட்டார் . ஆரம்ப காலத்தில் தூத்துக்குடி பேரூரணியிலும் தொடர்ந்து மணிமுத்தாறு பட்டாணியனிலும் போலிசாக பணிபுரிந்தார். 2008 இல் சென்னை ஆயுத படை போலிசாக அவர் பணியாற்றி வந்தார். அதன்பின்தொடர்ந்து பல இடங்களில் பணி புரிந்து தற்போது சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். மேட்டு குப்பம் என்னும் பகுதியில் வி.பி.ஜி அவணியில் இவர் குழந்தையோடு தத்தளித்த தம்பதிகளை வெள்ளத்தில் மீட்டு, அவர்களது குழந்தையை தனது கையில் ஏந்தியபடியே அவர்கள் உடமைகளை தோளில் சுமந்தப்படி கம்பீரமாக முட்டளவு தண்ணீரில் கடந்து வந்தார். இவருடைய படங்கள் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. அதோடு மட்டுமல்லாமல் கார்ட்டூன்களும் இவரது படத்தினை வரைந்து ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் இவரை பாராட்டி வருகின்றனர். பல்வேறு பகுதியில் இருந்து இவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இவரை அழைத்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சான்றிதழ் மற்றும் சன்மானம் வழங்கினர்.
தயாளனின் சேவையை பாராட்டி பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. நாமும் நமது மாவட்டத்தினை சேர்ந்த வல்லநாடு பகுதியை சேர்ந்த தயாளனின் சேவையை பாராட்டுவோம். அனைவரிடமும் பகிர்வோம். – முத்தாலங்குறிச்சி காமராசு


