திருச்செந்தூர்- நெல்லை – தென்காசி இடையே ரயில் நிலைய நடைமேடைகளை நீட்டிக்க முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் இருந்து நெல்லை, தென்காசி வழியாக கொல்லம் வரை செல்லும் ரயில் வழித்தடத்தில் நெல்லை, தென்காசி, செங்கோட்டை தவிர மற்ற ரயில் நிலையங்களில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீளம் இல்லை. இதனால் தற்போது இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க முடியவில்லை.
எனவே இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலைய நடைமேடைகளின் நீளத்தை நீட்டிக்க வேண்டும் தொடர்ந்து என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் திருச்செந்தூர் – நெல்லை – செங்கோட்டை – கொல்லம் ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலைய நடைமேடைகளை நீட்டிக்க முன்மொழிவு செய்துள்ளது.
அதன்படி திருச்செந்தூர் – நெல்லை இடையே திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசரேத், ஸ்ரீவைகுண்டம் மற்றும் செய்துங்கநல்லூர் ரயில் நிலையங்களிலும், நெல்லை – தென்காசி இடையே சேரன்மாதேவி, கல்லிடைகுறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு, அதாவது 550 மீட்டர் நீளத்துக்கு அதிகரிக்கவும்,
செங்கோட்டை – புனலூர் இடையே நியூஆரியங்காவு, தென்மலை, எடமண் ஆகிய நிலையங்களின் நடைமேடைகளை 450 மீட்டர் நீளம் அதிகரிக்கவும், அவனீஸ்வரம், குரி, கொட்டாரக்கரை, குண்டாரா கிழக்கு குண்டாரா, சந்தனத்தோப்பு, கிளிகொல்லூர் ஆகிய ெரயில் நிலையங்களின் நடைமேடைகளை 550 மீட்டர் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த நடைமேடைகளை நீட்டிப்பதற்கான சாத்திய கூறுகள் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவை தயார் செய்யப்பட்டு வருகிற பிப்ரவரி மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உடனடியாக பணிகள் தொடங்குவதற்கு முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன என்று என்று தகவல் வெளியாகி உள்ளது.


