ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட அளவிலான கபாடி போட்டி நடந்தது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டியானது 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் என்ற 3 பிரிவுகளின் அடிப்படையில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இப்போட்டியில் மாவட்ட அளவில் பங்கேற்பதற்கான மாணவர், மாணவியர் அணியினர் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 8 மண்டலங்களில் நடத்தப்பட்ட மண்டல அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று தேர்வான அணிகளுக்கான மாவட்ட அளவிலான கபாடி போட்டி ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது.
மாவட்ட அளவிலான கபாடி போட்டியை பள்ளி கல்வி அபிவிருத்தி சங்க செயலாளர் கோட்டை சண்முகநாதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பள்ளி செயலாளர் முத்தையா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகச்செல்வன், துணைத்தலைவர் ராஜப்பாவெங்கடாச்சாரியார், தலைமையாசிரியர் முத்துசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் முருகன் வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி போட்டிகளை கண்காணித்தார்.
மாவட்ட அளவில் 14, 17, 19 வயதிற்குட்பட்டோர் என்ற ரீதியில் நடைபெற்ற இப்போட்டியில் மாணவர் பிரிவில் 24 அணிகளும், மாணவியர் பிரிவில் 24 அணிகளும் என மொத்தம் 48அணிகள் பங்கேற்றன.
முதல்கட்டமாக மாணவியர்களுக்கான போட்டி மட்டும் முடிவு பெற்றுள்ளது. 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கடம்பூர் இந்துநாடார் மேல்நிலைப்பள்ளி அணியும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கோவில்பட்டி கம்மவர் மேல்நிலைப்பள்ளி அணியும், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் புன்னக்காயல் செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளி அணியும் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில், உடற்கல்வி ஆசிரியர்கள் அசோக்குமார், காசிராஜன், செல்வம், சாந்தா மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பயிற்சியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் உடற்கல்வி ஆசிரியர் முருகன் செய்திருந்தார்.
மாணவர்களுக்கான போட்டிகள் நாளை தொடர்ந்து நடைபெறுகிறது.


