வடிவேல் பிறப்பு 1960 தமிழ்த் திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மதுரையை சேர்ந்தவர். 1988 இல் டி.ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.
வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார்.
இவர் செப்டம்பர் 12, 1960 ஆம் ஆண்டு நடராஜன் பிள்ளை மற்றும் பாப்பா என்னும் சரோஜினி ஆகியோருக்கு மகனாக பிறந்தார் இவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும் கன்னிகாபரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகிய மகள்களும், சுப்ரமணியன் என்ற ஒரு மகனும் உள்ளனர். திரைப்படங்களில் நடித்த பின்னர் பணம், புகழுடன் வசதியாக வாழ்ந்தாலும், தனது கடந்த காலத்தில் ஏழ்மையோடு போராடியதை மறக்காத வடிவேலு தனது மகன் சுப்ரமணியனுக்கு, சிவகங்கை அருகே உள்ள திருப்புவனத்தில் ஒரு கூரை வீட்டில் வசிக்கும் ஏழ்மையான குடும்பத்தில் புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.
பள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது. நண்பர்களுடன் இணைந்து சிறு நாடகங்களை மேடையில் அரங்கேற்றியுள்ளார். அந்த நாடகங்களில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார். இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. மதுரையில் உள்ள புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம்கள் செய்யும் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்தார். அந்தத் தருணத்தில் நடிகர் ராஜ்கிரண் ஒருமுறை அவருடைய ஊருக்குச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வடிவேலு, ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்குத் தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார். டி.ராஜேந்திரன் இயக்கிய என் தங்கை கல்யாணி திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். ராஜ்கிரண், தான் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் வடிவேலுவை திரையில் அறிமுகப்படுத்தினார்.


