தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரயிலில் எல்.எச்.பி. (LHB) பெட்டிகள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய பெட்டி அமைப்புடன் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வண்டி எண். 16791 தூத்துக்குடி – பாலக்காடு பாலருவி விரைவு ரயில் வருகிற ஜூலை 20 ஆம் தேதி முதலும், மறுமார்க்கத்தில் வண்டி எண். 16792 பாலக்காடு – தூத்துக்குடி ரயில் ஜூலை 21 ஆம் தேதி முதலும் எல்.எச்.பி. பெட்டிகள் மூலம் இயக்கப்பட உள்ளன.
புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் 1 கார்டு/லக்கேஜ் பெட்டி, 1 இரண்டாம் வகுப்பு லக்கேஜ்/மாற்றுத்திறனாளிகள் பெட்டி, 1 மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டி (3AC), 5 ஸ்லீப்பர் பெட்டிகள் (SL) மற்றும் 10 முன்பதிவு இல்லா பொதுப் பெட்டிகள் (Unreserved) இணைக்கப்பட்டுள்ளன.
பாலருவி விரைவு ரயிலை எல்.எச்.பி. கோச்சுகளாக மாற்றியமைத்ததற்கும், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மூன்றடுக்குக் குளிர்சாதனப் பெட்டியை (III A/C) இணைத்ததற்கும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்குத் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.


