தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், இன்று மருதூர் அணைக்கட்டுப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
வரவிருக்கும் மழைக்காலம் மற்றும் தற்போதைய கோடைகாலம் ஆகியவற்றில் அணைக்கட்டில் உள்ள நீரின் வரத்து மற்றும் நீர் ஓட்டத்தின் அளவு குறித்து உதவி ஆட்சியர் அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அணைக்கட்டுப் பகுதியில் அதிகளவில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளையும், ஆற்றின் கரையோரங்களில் கொட்டப்பட்டுள்ள அதிகப்படியான கழிவுகள் மற்றும் தேவையற்ற நீர்க்கருவேல மரங்களையும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இந்த ஆய்வின் போது ஆற்றில் பொதுமக்கள் சிலர் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்ட உதவி ஆட்சியர், அவர்களிடம் நேரில் சென்று பேசினார். ஆற்றில் நீர்வரத்து இருக்கும் சமயங்களில் பொதுமக்கள் யாரும் ஆழமான பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்புடன் கவனமாக நீராட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது சம்பந்தப்பட்ட பகுதியின் துணை வட்டாட்சியர் லோகநாதன் மற்றும் நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் அமீர்கான் ஆகியோர் உடனிருந்தனர்.


