சுதேசிக் கப்பலோட்டிய வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி திருநெல்வேலி ஜில்லா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இளைஞர்கள், மாணவர்கள். பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களை அரசுக்கெதிராக வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டங்கள் வ.உ.சி.யையும் சுப்பிரமணிய சிவாவையும் விடுதலை செய்யக் கோரின. மனம் போன போக்கில் போராட்டம் வீறு கொண்டு எழுந்ததால் மிகப்பெரிய வன்முறைக் கலவரமாக உருமாறியது. பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. முனிசிபல் அலுவலகம், சப்ரிஜிஸ்டர் அலுவலகம், எண்ணெய்க் கிடங்கு ஆகியன தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ஏராளமான அளவில் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன.
சப்கலெக்டர் ஆஷ். போலீஸ் படையைக் கொண்டு கலவரத்தை ஒடுக்கும் விதத்தில் தடியடியையும், துப்பாக்கிச் சூட்டையும் நடத்தினார். அந்தோ பரிதாபம் இரண்டு குழந்தைகள் உட்படநான்குபேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
திருநெல்வேலியில் நடந்த கலவரம் தூத்துக்குடிக்கும் தச்சநல்லூருக்கும் பரவியது. தூத்துக்குடி மக்களின் பரபரப்பையும், பதட்டத்தையும் கண்ட ஆங்கிலேய அதிகாரிகள் தூத்துக்குடி ஊருக்குள் இருந்தால் கொன்று விடுவார்கள் என்று அச்சமடைந்தனர். படகுமூலம் முயல் தீவில் தஞ்சமடைந்தனர். பாதுகாப்புடன் இரவு முழுவதையும் கழித்தனர். மறுநாள் 100 போராட்டவீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.
வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா இருவர் மீதும் திருநெல்வேலி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் மூன்று மாத காலம் விசாரணை நடைபெற்றது. 1908 ஜூலை 7ஆம் தேதி வ.உ.சி.க்கு 40 ஆண்டுகள் இரட்டை ஆயுள் ண்டனையும். சுப்பிரமணிய சிவாவுக்கு ஆயுள் தண்டனையுடன் அந்தமான் சிறைக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி பின்ஹே என்ற ஆங்கிலேயர் தீர்ப்பு வழங்கினார். இத்தீர்ப்பு வ.உ.சி. யின் குடும்பத்திற்கு பேரதிர்ச்சியைத் தந்தது. அவரது இளைய சகோதரரான மீனாட்சி சுந்தரத்திற்கு அதிர்ச்சியால் மனநிலை பாதிக்கப்பட்டார்.
வ.உ.சி.யின் நண்பர்கள் கடுமையான முயற்சியை மேற்கொண்டு மேல்முறையீடு செய்தனர். நாற்பதாண்டு சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டன. கோயம்புத்தூர் மத்திய சிறையில் 2 ஆண்டுகளும் கொடுஞ் சிறை வாசத்தை அனுபவித்தார். வ.உ.சி.க்கு உணவாக கேழ்வரகு கூழ் கொடுத்தனர். கல் உடைத்தார்… கசையடி பெற்றார். கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு எண்ணெய்ச் செக்கை, மாடுகளுக்குப் பதிலாக வ.உ.சி. பூட்டப்பட்டு செக்கிழுக்க வைக்கப்பட்டார். தன்னுடைய வசதியான சுகபோக வாழ்க்கையை விட்டு விட்டு நாட்டு விடுதலைக்காக செக்கிழுத்த செம்மலானார்.
இரத்தம் சிந்தினார். தமிழன்னையின் தவப்புதல்வராக வ.உ.சி. சிறையில் பல நூல்களை எழுதினார். மெய்யறிவு. மெய்யறம். மனம் போல் வாழ். அகமே புறம். வலிமைக்கு மார்க்கம். திருக்குறள் மணக்குடவர் உரை. தொல் காப்பியம் சொல் பொருள். இளம்பூரணம், இன்னிலை. திருக்குறள் அறத்துப்பால் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகிய நூல்களை வழங்கினார்.
1912இல் விடுதலை செய்யப்பட்டார். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து. செல்வந்தராக வாழ்ந்த வ.உ.சி. நம் நாட்டிற்காக அனைத்துச் சுகபோகங்களையும் இழந்தார். வறுமை அவரை சோதித்தது.
பாலவநத்தம் மீன்தார் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் வறுமையில் வாடிய வ.உ.சி.க்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி ஆதரித்தார்.
சென்னையில் பெரம்பூர் இரயில்வே தொழிற்சங்கத் தலைவரானார். 1921 அக்டோபர் 11 இல் விவசாயக் கைத்தொழில் சங்கத்தை நிறுவி தொழிலாளர்களுக்காக உழைத்தார். சுதேசி இயக்கச் சிந்தனைகளான இவற்றை மக்களிடையே வளர்த்தார். தொடர்ந்து 1920 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டார்.
தம்மை நாடி வந்த போராட்ட வீரர்களுக்கும். தமிழன்பர்களும், உதவி கேட்டு வந்தவர்களுக்கும் அள்ளி அள்ளி கொடுத்து வள்ளலென வாழ்ந்த வ.உ.சி. வறுமையில் வாடினார். 1936 நவம்பரில் நோயில் வாடியபோது மருந்து வாங்கிடபணமில்லாமல் தவித்தார்.
கப்பலோட்டியத் தமிழன். செம்மல். தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்பட்ட வ.உ.சி.யின் உடல் நிலை 1936 நவம்பர் 18 இல் மோசமானது.
மகாகவி பாரதியாரின் ” எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவி இருந்ததும் இந்நாடே… என்ற பாடலையும் என்று தணியும் எங்கள் சுதந்திரத்தாகம்… என்ற பாடலையும் பாடக் கூறினார். பாடலைச் செவி குளிர கேட்டு மகிழ்ந்தபடி உயிர் நீத்தார்.


