தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 -27ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி 09.09.2026 முதல் 03.10.2026 வரை 45 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என 5 பிரிவுகளில் நடைபெறவுள்ளது.
மாணவர்கள் படிக்கும் பருவத்திலேயே விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும். விளையாட்டு போட்டியின் மூலம் உடல் வலுப்பெறவும், சுய ஒழுக்கம் ஏற்படும். ஆகவே, மாணவர்கள் விளையாட்டு போட்டிக்கு முக்கியம் தர வேண்டும். மேலும் விளையாடும் பொழுது காயம் ஏற்படாமல் இருப்பது மிகவும் முக்கியம். அதற்கான நேரம் கிடைக்கும் பொழுது உடல்களை தளர்வு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
மேலும், மாணவர்களின் திறமைக்கேற்ப விளையாட்டு போட்டியினை தேர்வு செய்து, பயிற்சி வழங்க வேண்டும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகள் பங்கு பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும். போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயரத்தினராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, வ.உ.சி கல்லூரி முதல்வர் வீரபாகு, தனிவட்டாட்சியர் (ச.பா.தி) ஆனந்த் மற்றும் உடற்கல்வி பயிற்றுநர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


