ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் ஈடுபடும் ஆய்வாளர்களுடன் படமெடுத்து மகிழந்த தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளிர் கல்லூரி கல்லூரி மாணவிகள்.
மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது.
சி சைட் என அழைக்கப்படும் பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் உள்ள முதுமக்கள் தாழியில் தங்கத்தால் ஆன 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே முதுமக்கள் தாழியில் வெண்கலத்தால் ஆன ஜாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஜாடியில் அலங்காரமாக சுற்றி ஐந்து இடத்தில் ஜாடியின் மேல் கொக்கு, வாத்து பறவைகள் நீர் அருந்துவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக ஆய்வாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி கல்லூரி முதுகலை தமிழ் இலக்கியம் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவிகள் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையை பார்வையிட வந்தனர். சிவகளையில் தொல்லியல் இயக்குனர் பிரபாகரன், இணை இயக்குனர் கே. விக்டர் ஞானராஜ் ஆகியோர் விளக்கம் அளித்தனர். பின் அவர்கள் ஆதிச்சநல்லூரில் தங்கம் கிடைத்த குழி, தங்க நெற்றி பட்டையம் மற்றும் வெண்கல பொருள்கள் கிடைத்த குழியை பார்வையிட்டனர். அவர்களுக்கு தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், தொல்லியல் ஆய்வாளர் யத்தீஸ் குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அதன் பின் ஆர்வத்தோடு கல்லூரி மாணவர்கள் ஆய்வாளர்களுடன் குழு படம் எடுத்துக்கொண்டனர். ஆதிச்சநல்லூர் வரலாற்றில் 120 வருடங்களுக்கு முன்பு தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் கிடைத்த மகிழ்ச்சியை தொல்லியல் ஆர்வலர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனவைர் க . சுப்பு லெட்சுமி, உதவிப்பேராசிரியர் முனைவர் புஷ்பக வல்லி , வரலாற்று துறை தலைவர் முனைவர் லோ. சங்கீதா, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முனைவர் கந்தசுப்பு, வரலாற்ற துறை ஆசிரியர் சிவகளை மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


