கைலாசம் பாலச்சந்தர் கே. பாலச்சந்தர், 9 சூலை 1930 – 23 திசம்பர் 2014) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். மேலும் 80-90களின் தமிழ் திரையுலகை தீர்மானித்த முக்கிய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகிய இரு துருவ போட்டி நடிகர்களை அறிமுகம் செய்தவர். அது மட்டுமின்றி தமிழ் திரையுலகில் பின்னாளில் அசாத்திய வில்லன் நடிகர்களான நாசர், பிரகாஷ் ராஜ் மற்றும் தனது நகைச்சுவையால் பலரையும் சிந்திக்க வைத்த நகைச்சுவை நடிகர் விவேக் அனைவரையும் அறிமுகம் செய்ததே பாலசந்தர் அவர்களையே சாரும். மேலும் 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.
- இவரது சொந்த ஊர் கும்பகோணம்–திருவாரூர் இடையேயுள்ள நன்னிலம் அருகிலான நல்லமாங்குடியில் கைலாசம் ஐயர்–காமாட்சி அம்மாள் இணையருக்கு ஒரு நடுத்தர பிராமணர் குடும்பத்தில் பாலசந்தர் மகனாக பிறந்தார்.
- இவர் தந்தைக்கு கிராம முனிசிஃப் பணியில் நன்னிலத்தில் இருந்த போது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தனது மேல் படிப்பை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பி.எஸ்சி. பட்டம் முடித்தார்.
- பின்பு இராம. அரங்கண்ணல், இவரது பள்ளித் தோழர்.எம். எஸ். உதயமூர்த்தி இவரது கல்லூரித் தோழர்.
- பிறகு “கவிதாலயா” என்ற சொந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார்.
- இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார் அவற்றில் சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் நெற்றிக்கண், ராகவேந்தர், சிவா ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இயக்குனர் ஸ்ரீதரைப் போல, பல புதுமுகங்களை அறிமுகம் செய்தவர் பாலச்சந்தர்.அவர்களுள் மிக உச்சத்தை அடைந்தவர் ரஜினிகாந்த். கமலஹாசனை, கதாநாயகனாக்கியது பாலச்சந்தர் அல்லர் எனினும், வரிசையாக அவருக்கு வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்தவர் பாலச்சந்தர்.
‘அவள் ஒரு தொடர்கதை’ போன்ற சில திரைப்படங்களை, முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இது, ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் ஒரு வெற்றிப்படமே.
மேலும், பிற மொழிகளிலிருந்தும், சிலரை, தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (டூயட்) ஆகியோர் அடங்குவர்.
வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் அறிமுகமான திலீப் மற்றும் நிழல் நிஜமாகிறது படத்தில் அறிமுகமான அனுமந்து ஆகியோர் எதிர்பார்த்த அளவில் திரையுலகில் முன்னேறவில்லை. பாலச்சந்தர், அவர்களை அறிமுகம் செய்த படத்தில், மிகுந்த அளவில் நற்பெயரைப் பெற்றிருந்தனர்.
எஸ். வி. சேகர் (வறுமையின் நிறம் சிவப்பு) மற்றும் மௌலி (நிழல் நிஜமாகிறது), ஒய். ஜி. மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி இராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்), என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை, திரைக்கு, பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார். பாலச்சந்தரின் பல படங்களில் நடித்திருந்த மேஜர் சுந்தரராஜன் (மேஜர் சந்திரகாந்த்) இவ்வாறு அறிமுகமானவரே. அவரது இடுபெயரான ‘மேஜர்’ என்பது, இப்படத்திலிருந்தே விளைந்தது.


