பி. உண்ணிகிருஷ்ணன் பிறப்பு: 9 சூலை 1966) இந்தியாவின் கருநாடக இசைப் பாடகரும் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்.
இவர் 1966 சூலை 9 அன்று கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ராதா கிருஷ்ணன், ஹரிணி ஆகியோருக்கு பிறந்தார். 12 வயது முதல் வி.எல். சேஷாற்றி என்பவரிடம் கருநாடக சங்கீதம் கற்றுக் கொண்டார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் படித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் 1987 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை பாரிஸ் மிட்டாய் கம்பெனியில் ஒரு நிர்வாகியாக வேலை செய்து வந்தார். பின்னர் ஒரு தொழில்முறை பாடகர் ஆக வேண்டும் என்பதற்காக தனது வேலையைத் துறந்து இசைத்துறைக்கு வந்தார்.
இவரை திரையுலகிற்கு அழைத்து வந்தவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை திரைப்படங்களில் பாடியுள்ளார். பக்தி இசையிலும் பாடல்கள் பாடியுள்ளார். ”லட்சுமண் சுருதி” இசைக்குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் ”சென்னையில் திருவையாறு” இசை மற்றும் நாட்டிய விழாவில் தொடர்ந்து பதினோரு ஆண்டுகளாக பங்கேற்று பாடி வருகின்றார்.
உண்ணிகிருஷ்ணன் கோழிக்கூடு, கேரளாவைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிரியா பரதநாட்டியம் மற்றும் மோகினியாட்டம் பயின்ற நடன கலைஞராவார். இவர்கள் நவம்பர் 1994-இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் – வாசுதேவ் கிருஷ்ணா என்ற மகன் மற்றும் உத்தரா என்ற மகள். வாசுதேவ் கிருஷ்ணா 1997 மே 27 அன்று பிறந்தார், உத்தரா 2004 சூன் 11 அன்று பிறந்தார். “சைவம்” திரைப்படத்தில் தனது முதல் பாடலான “அழகு”க்காக பின்னணி பாடலுக்கான தேசிய விருதை உத்தரா வென்றார். ஒரு குறிப்பிடத்தக்க உண்மை என்னவென்றால், உண்ணிகிருஷ்ணன் மற்றும் உத்தரா இருவரும் அறிமுக பாடல்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றனர். வாசுதேவ் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பின் உறுப்பினராகவும், தமிழக கிரிக்கெட் சங்கத்தின் வாழ்க்கை உறுப்பினராகவும் உள்ளார்.


